நிர்கதியான லெபனான் மக்களுக்கு சவூதி அரேபியா மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைப்பு
சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான உதவித் திட்டங்களில் ஒரு கட்டமாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவி வருகின்ற யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) ஊடாக நிவாரணங்களை வழங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, KSrelief பெய்ரூத் நகருக்கு இது வரை இரண்டு விமானங்களுக்கு நிவாரணங்களை அனுப்பியுள்ளது.
கடந்த 13ம் திகதி ரியாத் நகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் தங்குமிடப் பொருட்களை சுமந்த முதல் நிவாரண விமானம் புறப்பட்டு லெபனான் பெய்ரூத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது, இது சவூதியின் நிவாரண உதவித் திட்டத்தின் ஆரம்ப கட்டமாகும்.
இக்கட்டான நிலைமையில் உள்ள லெபனான் மக்களுக்கான இந்த இன்றியமையாத ஆதரவு, பிராந்திய அளவிலும், உலக அளவிலும் தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் சவூதி அரேபியாவின் அர்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அக்டோபர் 14 ஆம் திகதி, ரியாத் நகரில் இருந்து இரண்டாவது நிவாரண விமானம் அனுப்பப்பட்டது. இந்த விமானத்திலும் உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தங்குமிட பொருட்கள் ஆகியவை அடங்கியிருந்தன.
இந்த மனிதாபிமான உதவித் திட்டங்கள் உலகளாவிய மனிதாபிமான கொள்கைகளுக்கு சவூதியின் பங்களிப்பையும், துன்பத்தில் உள்ள நாடுகள் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதற்கான அதன் பொறுப்பையும் பிரதிபலிக்கின்றன.
லெபனானுக்கான இந்த உதவித் திட்டம் சர்வதேச மனிதாபிமானப் பணிகளில் சவூதியின் தலைமைப் பங்கை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.