காட்டு யானைகளை விரட்டும் சிறுவர்கள்!
காட்டு யானைகளை அன்றாடம் சிறுவர்கள் விரட்டுவது அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட புற நகர் பகுதிகளில் தற்போது வழமையாகி விட்டது.
இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த கல்முனை, சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை பிரதேச கரைவாகு வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் வேடிக்கை பார்க்கும் நிலையில் யானைகளை சிறுவர்கள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குறித்த பிரதேச வயல் வெளி பகுதியில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் 08 முதல் 10 வரை வருகை தந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகள் அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்நுழைவதுடன் அவ் யானைகளை சிறுவர்கள் விரட்டும் நடவடிக்கையில் கடந்த சில தினங்களில் ஈடுபட்டதை காண முடிந்தது.
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் வயல் வெளிகளில் காணப்படும் குறித்த காட்டு யானை கூட்டத்தினை காண்பதற்காய் பிற்பகல் வேளையில் பொது மக்கள் வருகை தந்து பார்வையிட்டு செல்வத்தினை காணக்கூடியதாய் உள்ளது.
மேலும் இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் காட்டு யானைகள் இறப்பதும், காட்டு யானைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் 8 மாதங்களில் 340 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
இவ்வருடம் இதே காலப்பகுதியில் 239 காட்டு யானைகள் மாத்திரமே உயிரிழந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் எட்டு மாதங்களில் காட்டு யானைகளின் தாக்குதலால் 117 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 90 ஆக குறைந்துள்ளது.
யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் வயல் நெல் அறுவடை முடிந்தால் இவ் பிரதேசங்களில் யானைகளின் வருகை தொடர்கதையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.