இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களால் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்வு: லெபனான் பிரதமர்
லெபனான் மீது இஸ்ரேலின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள ஒரு மில்லியன் மக்களை அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றியிருக்கலாம் என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார்.
இது மிகப் பெரிய இடப்பெயர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெய்ரூட்டில் ஹிஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்பொல்லா ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதேபோல், யேமனில் ஹவுதி இயக்கத்தின் இராணுவ இலக்குகள் மீது “பெரிய அளவிலான” வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உயர்மட்ட இராணுவத் தளபதி அலி கராக்கி மற்றும் மூத்த தலைவர் ஷேக் நபில் கௌக் ஆகியோரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்பொல்லா உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், ஹிஸ்பொல்லா மீது தொடர் தாக்குதல்களை நடத்த வேண்ம் என இஸ்ரேலின் இராணுவ தலைமை அதிகாரி ஹெர்சி ஹலேவி தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை அதிகாலையில் மத்திய பெய்ரூட் பகுதியான கோலாவில் மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் பாலஸ்தீன விடுதலைக்கான அமைப்பின் (Popular Front for the Liberation of Palestine) மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்று அறிக்கை ஒன்றில் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் கொல்லப்பட்டவர்கள் இராணுவப் பாதுகாப்புத் தலைவர் முகமது அப்தெல்-ஆல், இராணுவத் தளபதி இமாத் ஓடே மற்றும் போராளி அப்தெல் ரஹ்மான் அப்தெல்-ஆல் எனப் பெயரிடப்பட்டுள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள் காரணமாக பெய்ரூட் மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என லெபனானின் பிரதமர் மிகாட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹூதிகளின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவும், ஈரானிய ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் வசதிகளை அழிக்கவும் அந்த தளங்களை குறிவைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
யேமனின் பெரும் பகுதிகளை கட்டுப்படுத்தும் ஷியா குழுவான ஹூதிகள், இஸ்ரேலிய தாக்குதல்களை “மிருகத்தனமான ஆக்கிரமிப்பு” என்று குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் பரந்த மோதலுக்கான சர்வதேச அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால், ஹிஸ்பொல்லா அல்லது ஈரானுடனான முழுமையான போருக்கு எதிராக வாஷிங்டன் இஸ்ரேலை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.