ஓ தோழரே… கவிதை…. தில்லைநாதன் பவித்ரன்
ஓ தோழரே
உங்களைப் போலவே
எங்களிடமும்
கனவுகள் இருந்தன
நீங்கள் வரைந்த
உங்களுக்கான
தேசத்தினைப் போலவே
எங்களது தேசத்திற்கும்
ஒரு வரைபடம் இருந்தது
நெடிய கோடையிலிலும்
மனதில் தென்றல் வீசும்
தேசக் கனவுகளோடு
நடந்த பாதங்கள் இங்கே
இன்னும் ஆறவில்லை
வாழ்வின்
செம்மைகளின் இடையே
இன்னும் ஒரு செந்தீ
எங்களுக்குள்
எரிந்தபடிதான் இருக்கின்றது
ஓ தோழரே
இன்று உங்கள் கனவு
பலித்ததைப் போல
முப்பது அல்ல முந்நூறே
ஆண்டுகள் கடந்தாலும்
எங்களின் பிடரிகள்
ஓர் நாள் நிமிர
காந்தள்கள் ஆடும்
தேசமொன்று
எமக்காய் மலரும்
அதுவரை
எங்கள் தேசக் கதைகளை
உறங்கப் போகுமுன்
கதை கேட்டு அழும்
உங்கள் குழந்தைகளுக்கு
கூறுங்கள்
நாளும் இலட்சிய சுமையால் பிளந்த
எங்கள் பாதங்களை
காட்டுங்கள்
நினைவு நாளொன்றில்
எரியும் தீயில் பிரகாசிக்கும் எங்களின்
ஆன்ம ஒளியை
அவர்களின் கண்களில்
ஒளிரவிடுங்கள்
ஓ தோழரே…..
தில்லைநாதன் பவித்ரன்
திருக்கோணமலை.