மலைப்பாம்புடன் போராடிய பெண்; 2 மணிநேரமாக உடலைச் சுற்றிக்கொண்டது
இரண்டு மணிநேரமாக உடலைச் சுற்றிக்கொண்ட மலைப்பாம்புடன் போராடிய பெண்
இரண்டு மணிநேரமாக நான்கு சுவர்களுக்குள் மலைப்பாம்பு ஒன்றோடு 64 வயது பெண் சிக்கிப் போராடினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாண்டதிலிருந்து அந்தப் பெண் வாடகை வீட்டின் ஓர் அறையில் தனியாக வசித்து வந்தார்.
பேங்காக்கின் சாமுட் பிராகானில் உள்ள அந்த வாடகை வீட்டில் அரோம் சமையல் பானைகளைக் கழுவிக்கொண்டிருந்தபோது நேற்று இரவு மணி 8.30 மணியளவில் மலைப்பாம்பு அவரது வலது தொடைப்பகுதியில் கடித்துவிட்டது.
பெண் கீழே சரிந்து விழும் அளவுக்கு அந்தப் பாம்பு அவரது உடலைச் சுற்றிக்கொண்டது.
இரண்டு மணிநேரமாக மலைப்பாம்பின் பிடியிலிருந்து விடுபட அரோம் போராடிக் களைத்துப் போனார்.
உதவி கோரி அவர் கூச்சலிட்டதை அடுத்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையுடனும் மீட்புப் பணியாளர்களுடனும் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.
வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு சென்ற அதிகாரிகள், ஓர் அறையில் பெண் தரையில் கிடப்பதைக் கண்டனர். அவரது உடலை நான்கு மீட்டர் நீளத்தில் குறைந்தது 20 கிலோகிராம் எடையுடைய மலைப்பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு இருந்ததைப் பார்த்தனர்.
அதிகாரிகள் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தியபோதும் பெண்ணைக் காப்பாற்ற அரை மணி நேரத்திற்கும் மேலானது.
முதலுதவி வழங்கிய பின்னர் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற அனுப்பினர்.
இதற்கிடையே, அறைக்குப் பின்னால் இருந்த துவாரத்தின் ஊடாக மலைப்பாம்பு ஊர்ந்து சென்று தப்பித்துவிட்டது.