முச்சந்தி

மலையக மக்களும் இந்நாட்டில் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும்!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் மேம்படுத்துவோம். அவர்களுக்குரிய காணி உரிமை நிச்சயம் வழங்கப்படும். மலையக மக்களும் இந்நாட்டில் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன்,தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் மலையக மக்களும் பங்குதாரர்களாவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், அநுர குமார திசாநாயக்கவை ஆதரித்து, நுவரெலியா – தலவாக்கலையில் நேற்று (15) பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட தலைவர் மஞ்சுள சுரவீர, தேசிய குழு உறுப்பினர் கே. செல்வி உட்பட பலரும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் உரையாற்றும் போதே அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

“மலையகத்திலிருந்து பலர் பாராளுமன்றம் சென்றுள்ளனர், அமைச்சு பதவிகளையும் வகித்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் மக்கள்படும் துன்பம் மாறவில்லை. எனவே, இதே வலிகளுடன் அவர்களுடன் பயணிப்பதா இல்லையேல் மாற்றம் வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். புதிய அரசியலே வேண்டும் என மக்கள் சொல்கின்றனர். அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் செப்டம்பர் 21 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட மக்களும் பங்கேற்கவுள்ளனர்.

மக்களுக்கு போலி உறுதிமொழிகளை வழங்கி வாக்குவேட்டை நடத்தும் அரசியலே முன்னெடுக்கப்பட்டுவந்தது. தேர்தல் காலத்தில் உணவு, மதுபானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டன. தோட்டப்பகுதிகளில் மக்களை அச்சுறுத்தில் வாக்குகளைப் பெற்றனர். இவ்வாறான நிலைமைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் அல்லவா? செப்டம்பர் 21 ஆம் திகதி அதனை செய்வோம்.

வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மக்கள் தேசிய மக்கள் சக்தி பின்னால் அணிதிரண்டுள்ளனர். மலையக மக்களும் எம்மை வெற்றிபெறவைப்பதற்கு ஒன்றிணைய வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கெத்த, வலப்பனையில் வெற்றி உறுதி. ஏனைய இரு தொகுதிகளையும் வெற்றிபெறுவதற்குரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட ஏனைய வேட்பாளர்கள் எப்படிதான் உறுதிமொழிகள் வழங்கினாலும் எமது வெற்றியை திசை திருப்ப முடியாது. ஏமாற்று அரசியலுக்கு எம்மால்தான் முற்றுபுள்ளிவைக்க முடியும் என்பது மக்களுக்கு தெரியும்.

மலையக தலைவர்களுக்கு சுகபோக வாழ்க்கை, மக்களுக்கு துன்பகரமான வாழ்க்கை.இந்நிலைமை மாறக்கூடாதா? மக்கள் பிரச்சினையை தீர்க்கக்கூடிய மக்களுக்கான அரசியலை நாம் ஏற்படுத்த வேண்டும்.

மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என தற்போது பேசி பயன் இல்லை. இந்நாட்டு பொருளாதாரத்துக்கு அவர்களே பங்களிப்பு வழங்குகின்றனர். அவர்கள் இலங்கை பிரஜைகள். இந்திய தமிழர்கள் அல்லர், இலங்கை தமிழர்கள் என்பதே சரி.

பெருந்தோட்ட மக்களுக்கு அரு அங்குலமேனும் காணி உரிமை இல்லை, வீட்டு உரிமை இல்லை. இப்பிரச்சினையை தீர்க்ககூடாதா? எமது ஆட்சியில் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். காணி உரிமை வழங்கப்படும். பெருந்தோட்ட பகுதியில் கல்வி மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே, பெருந்தோட்டப் பகுதியில் கல்வி கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மலையக சமூகத்தில் கல்வியால் மேம்பட்டவர்கள் உள்ளனர். பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவது பெற்றோருக்கு இன்று சுமையாக மாறியுள்ளது. அந்த சுமையை நாம் குறைப்போம். கல்வியை பொறுப்பேற்போம். மந்த போசனை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். சிறந்த சுகாதாரதுறை பெருந்தோட்ட பகுதிகளில் கட்டியெழுப்படும்.

உங்கள் மொழியில் பொலிஸில் முறையிடக்கூடிய உரிமை இருக்க வேண்டும். அரச திணைக்களங்களில் தமிழ் மொழியில் சேவைகளை பெறக்கூடிய நிலை இருக்க வேண்டும். எமது ஆட்சியில் அந்த நிலைமை நிச்சயம் இருக்கும். இந்நிலைமை ஏற்படும் வரை, மொழிபெயர்ப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்” என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.