முச்சந்தி

பொபி சான்ட்ஸின் உண்ணா விரத போராட்டம்…. அயர்லாந்து எழுச்சியின் அகிம்சை குரல்!… நவீனன்

(எங்கள் மீதான பழிவாங்கல் எங்கள் குழந்தைகளின் சிரிப்பாக இருக்கும் என்ற பொபி சான்ட்ஸின் இறுதி வரிகள், அயர்லாந்து மக்கள் அனைவருக்கும் ஒருநாள் விடிவு வரும் அப்போது தங்களுக்கு விருப்பமான சுதந்திரத்தை காண்பார்கள், எழுந்து வரும் சந்திரனை போல என்பதற்கு கட்டியம் கூறியது)

பொபி சான்ட்ஸ், அயர்லாந்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஒரு சாதாரண போராளி. பிரித்தானியர்களின் அதிகாரத்திற்கு எதிராக அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராடிக்கொண்டிருந்த ஐரிஸ் குடியரசு இராணுவத்தில் (IRA) தன்னை இளம் வயதிலேயே தன்னை இணைத்துக் கொண்டவர்.

ஐரிஷ் விடுதலைப் போராட்டம்:

ஐரிஷ் விடுதலைப் போராட்டம் 750 வருடங்களுக்கு மேலான நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டது. அயர்லாந்து பிரிட்டனுக்கு மேற்கே 50 மைல் தொலைவிலுள்ள ஒரு பெருந்தீவாகும். அயர்லாந்தில் அல்ஸ்டர் (Ulster), முன்ஸ்டர் (Munster), லீன்ஸ்டர் (Leinster), கொன்னாச் (Connacht) என நான்கு பிராந்தியங்கள் உள்ளன.

இன்று இவ் அயர்லாந்து இரண்டு பகுதிகளாகப் பிரிவினை செய்யப்பட்டுள்ளது. ஒன்று அல்ஸ்டர் என்னும் பிராந்தியத்தைக் கொண்ட வட அயர்லாந்தும் மற்றது ஏனைய மூன்று பிராந்தியங்களையும் கொண்ட தென் அயர்லாந்துமாகும்.

வட அயர்லாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழுள்ள ஒரு பகுதியாகவும், தென் அயர்லாந்து, அயர்லாந்துக் குடியரசாகவும் இன்று அமைந்துள்ளன. அயர்லாந்துக் குடியரசின் பரப்பளவு 26,600 சதுரமைலாகும். 1922 ஆம் ஆண்டு தென் அயர்லாந்து பிரிட்டிஷ் முடியாட்சிக்குக் கீழான சுதந்திர அரசு (Irish Free State) என்ற உரிமையைப் பெற்றது. பின்பு இது 1948ஆம் ஆண்டு குடியரசாகியது. ஆனால் வட அயர்லாந்து ஆங்கில ஆதிக்கத்தின்கீழ் ஒரு மாகாணமாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

இதனை எதிர்த்தே ஐரிஷ் விடுதலை இயக்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்தவுடனேயே பொபி சான்ட்ஸை பிரித்தானிய அரசு சிறைப்படுத்தியது. சட்ட விரோதமாக துப்பாக்கி பயன்படுத்தியது, பெருவாரியான ஆயுதங்களை பதுக்கிவைத்தது, வெடிகுண்டு வழக்கு என தொடர்ச்சியாக சிறையிலடைத்தது.

சிறையில் அரசியல் கைதிகள் குற்றவாளிகளை போல கடுமையாக நடத்தப்பட்டனர். அவர்களது தார்மீக உரிமைகள் மறுக்கப்பட்டது. மனித உரிமை மீறால்களுக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்டனர்.

ஐரிஷ் எழுச்சிக்கு அகிம்சை குரல்:

ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரை அரசியல் கைதிகளாக அங்கீகரிக்கக்கோரி இவர்கள் தமது உண்ணாநோன்பை ஆரம்பித்தனர். இவர் உண்ணாநோன்பிருந்த காலத்தில் சிறையில் இருந்தவாறே ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1981 சிறைச்சாலையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணா நோன்பிருந்த கைதிகளுக்குத் தலைமை வகித்தவர் பொபி சான்ட்ஸ்(Robert Gerard Sands, ‘பொபி சான்ட்ஸ்’ (Bobby Sands, மார்ச் 9, 1954 – மே 5, 1981). அந்த இளம் போராளி யாருமல்ல. அவரே பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய பொபி சான்ட்ஸ்.

வட அயர்லாந்தில் லிஸ்பேர்ன் நகரில் உள்ள சிறையில் உண்ணா நோன்பிருந்து இறந்த அந்த இளம் போராளிக்கு அப்போது வயது 27.
அந்த இளம் போராளியுடன் சேர்ந்து பத்து பேர் இந்த உண்ணா நோன்பில் இணைந்து இறந்தனர். இவரின் இறப்பு ஐ.ஆர்.ஏ அமைப்புக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. இதன் பின் பலர் இந்த அமைப்பில் இணைந்து கொண்டனர்.

பொபி சான்ட்சுக்கு ஆதரவாக சர்வதேச ரீதியில் ஆதரவாக பலத்த குரலெழுப்பப்பட்டன. இப் போராட்டம் 66 நாட்களில் முடிவுக்கு வந்தது, ஆம் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம்திகதி சுயநினைவற்ற நிலையிலேயே அப்போராளியின் உயிர் பிரிந்தது.

உண்ணாவிரத போரில் பொபி சான்ட்ஸ்:

பிரிட்டன் வட அயர்லாந்து என்ற பகுதியை காலனிப் படுத்தி வைத்திருப்பதையும், IRA யின் போராட்டம் பிரிட்டிஷ் அரசுக்கு சவாலாக வளர்ந்து விட்டதையும் வட அயர்லாந்து பிரச்சினையில், அப்போதய பிரதமர் மார்க்கரெட் தாட்சர் ஆக்கிரமிப்பாளர்களான ஆங்கிலேய குடியேறிகளை ஆதரித்தார். விடுதலைக்காக போராடிய ஐரிஷ் மக்களை அடக்குவதில் குறியாக இருந்தார்.

தங்களை அரசியல் கைதிகளாக நடத்தவேண்டும் ,சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து பொபிசான்ட்ஸும் அவரது தோழர்களும் மரணித்தனர். பிரிட்டனில் ஐரிஷ் சிறுபான்மை இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிய மார்கரெட் தாட்சர், 1981 ம் ஆண்டு, வட அயர்லாந்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பத்து அரசியல் கைதிகள் மரணத்தை தழுவிக் கொண்டமைக்கு பலத்த கண்டனங்களை எதிர் நோக்கினார்.

விடுதலைக்காக போராடும் ஐரிஷ் சிறுபான்மை இனத்தை ஒடுக்கும், பிரிட்டிஷ் கொடுங்கோன்மையை உலகம் அறியச் செய்த போராட்டம் அது. இத்த உண்ணாவிரத போராட்டம் நாளுக்கு நாள் நாடு தழுவிய எழுச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகள் மத்தியில் பேச்சு பொருளானது, இந்த நேரத்தில் 1981இல் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே ஐரீஸ் குடியரசு இயக்கம் (Irish Republican Movement ) சார்பில் நின்று தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார்.

வட அயர்லாந்து சிறைச்சாலைகளில், பத்து அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து மரணமடைந்த போதிலும், அவர்கள் பக்கம் திரும்பியும் பாராத கல்நெஞ்சக்காரியாக தாட்சர் விளங்கினார். உண்ணாவிரதமிருந்து மரணத்தை தழுவிக் கொண்ட பொபி சாண்ட்சின் மரண ஊர்வலத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, உலகம் முழுவதும் பேசப் பட்டது. அது தாட்சர் அரசுக்கு, சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தியது.

அதே போன்று பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான பொபிசான்ட்ஸின் போராட்டம், தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்த ஏகாதிபத்தியங்கள் அம்மக்களின் அகிம்சா வழி போராட்டங்களை எப்போதுமே கண்டு கொள்ளாது என்பது தான் உலக விதியும் வரலாறாகவும் பதிவு செய்யப்பட்டது.

பொபிசான்ட்ஸின் வீரமரணம் விடுதலைக்காக உலகமெங்கும் போராடி வரும் போராளிகளின் மனநிலையை பிரதிபலிக்கும். எங்கள் மீதான பழிவாங்கல் எங்கள் குழந்தைகளின் சிரிப்பாக இருக்கும் என்ற அவரின் இறுதி வரிகள், அயர்லாந்து மக்கள் அனைவருக்கும் ஒருநாள் விடிவு வரும் அப்போது தங்களுக்கு விருப்பமான சுதந்திரத்தை காண்பார்கள், எழுந்து வரும் சந்திரனை போல என்பதற்கு கட்டியம் கூறியது.

இதன் பின்னர் ஐரிஷ் போராட்டம் தீவிரம் அடைந்தது.1984 ம் ஆண்டு, பிறைட்டன் நகரில், கன்சர்வேட்டிவ் கட்சி மகாநாடு நடைபெற்ற நட்சத்திர விடுதி, IRA யினால் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. அதுவரையும் சிறியளவு தாக்குதல்களில் ஈடுபட்ட IRA, மிகப் பெருமெடுப்பில் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது. அந்தத் தாக்குதலில், தாட்சர் மயிரிழையில் உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.