முச்சந்தி
ஆப்கானில் போர்க் குற்றம் இழைத்த ஆஸி. படையினரின் பதக்கங்கள் பறிப்பு!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆஸி படைகளில் பணியாற்றிய ராணுவ தளபதிகளின் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளமைக்கு, படைத்தரப்பில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன)
ஆப்கானிஸ்தானில் 2005 மற்றும் 2016 க்கு இடையில் அவுஸ்திரேலிய சிறப்புப் படைகளின் தவறான நடத்தைக்கு தளபதிகளை பொறுப்பேற்க வேண்டும் என்பது மேஜர் ஜெனரல் பால் பிரேரட்டனின் (Paul Brereton) தனது போர்க்குற்ற விசாரணையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
39 ஆப்கானியர்களின் சட்டவிரோத கொலைகளில் சுமார் 25 அவுஸ்திரேலிய சிறப்பு சேவை படைப்பிரிவு மற்றும் கமாண்டோ ரெஜிமென்ட் துருப்புக்கள் ஈடுபட்டதாக அவர் கண்டறிந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பல முன்னாள் அவுஸ்திரேலிய ராணுவ தளபதிகளின் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் (Richard Marles) 11/9/24 இல் தெரிவித்துள்ளார்.
பிரெட்டன் அறிக்கைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகள், இந்நாட்டு வரலாற்றில் அவுஸ்திரேலிய போர்க்குற்றங்கள் பற்றிய மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் என்று மார்லஸ் பாராளுமன்றத்தில் கூறினார்.
போர்க்குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சேவைக்காகப் பெற்ற பதக்கங்களை மீளப் பெற அந்தப் படைகளின் தளபதிகளுக்கு கோரியுள்ளார். ஆயினும் தனியுரிமை காப்பு சட்டங்களை மேற்கோள்காட்டி எத்தனை பேருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார் அல்லது அவர்களின் தரவரிசையை அடையாளங்களை அவர் காட்டவில்லை.
இதேவேளை தளபதிகளின் பதக்கங்கள் அகற்றப்பட்டதை அவுஸ்திரேலிய சிறப்பு விமான சேவை சங்கத்தின் தலைவர் மார்ட்டின் ஹாமில்டன்-ஸ்மித் கடுமையாக கண்டனம் செய்தார். இது ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய வீரர்களின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு துரோகம் என அவர் விபரித்துள்ளார்.
ஆப்கானில் எங்கோ ஒரு தொலைதூர கிராமத்தில் இந்த தளபதிகள் பார்க்காத மற்றும் அறியாத, அவர்களின் கண்காணிப்பில் இல்லாத ஒரு சட்டவிரோத செயல் நடந்திருக்கலாம். நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போர்க்களத்தில் இந்த இளம் அதிகாரிகளின் தைரியமான தலைமையை அரசாங்கத்தின் முடிவு கவனிக்கவில்லை என்று ஹாமில்டன்-ஸ்மித் தனது அறிக்கையில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆயினும் அதிகாரிகளின் தவறுகள் மட்டுமின்றி, போர்க்குற்றம் காரணமாகவே பதக்கங்கள் பறிக்கப்பட்டன என்று அமைச்சர் மார்ல்ஸ் பின்னர் விளக்கி கூறியுள்ளார்.
உண்மையில் அங்கே என்ன நடந்தது என்று தெரியும். அதைப் பற்றி அறிந்திருந்தோம். ஆயினும் அப்போதய அரசு உடனடியாக செயல்படவில்லை அல்லது பரிந்துரைக்கவில்லை. அதுவே பிரச்சினை என்று அமைச்சர் மார்ல்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
2013 இல் ஆப்கானிஸ்தானில் ஆஸி துருப்புக்களுக்கு SAS கேப்டனாக கட்டளையிட்டவரும், தற்போதய எதிர்க்கட்சி சட்டமியற்றுபவர் ஆண்ட்ரூ ஹாஸ்டி, (Opposition lawmaker Andrew Hastie) போர்க் குற்றங்களுக்கு அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்களும் இராணுவ தலைமையும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இக்குற்றச்சாட்டுகளால் அவுஸ்திரேலிய துருப்புக்கள் தார்மீக தைரியம் இழந்து ஏமாற்றமடைந்தனர் என்று நான் நம்புகிறேன். இது கான்பரா வரை அனைத்து வழிகளிலும் கண்டனங்களுடன் சென்றுள்ளது என்று ஹஸ்டி கூறினார்.
அக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் அவரது இராணுவ சேவைக்காக ஹஸ்டி அங்கரிக்கப் படவில்லை. அதனால் பதக்கங்கள் பறிக்கப்பட்ட அதிகாரிகளில் அவர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்பாவிகளின் இரத்தத்தை சிந்தியதாகக் கூறப்பட்டவர்கள் மட்டுமே அதற்குப் பொறுப்பு. யாரையும் மன்னிக்கவோ அல்லது கண்டிக்கவோ நான் இதைச் சொல்லவில்லை என்றும் ஹஸ்டி கூறினார்.
2023 ஆம் ஆண்டில், முன்னாள் SAS வீரர் ஆலிவர் ஷூல்ஸ் போர்க் குற்றம் சாட்டப்பட்ட இந்த வீரர்களில் முக்கியமானவர். 2012 இல் ஆப்கானில் உருஸ்கான் மாகாணத்தில் கோதுமை வயலில் ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் மிகவும் அங்கரிக்கப்பட்ட வாழும் போர் வீரர் பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் SAS கார்போரல் ஆக இருந்தபோது நான்கு ஆப்கானியர்களை சட்டவிரோதமாக கொன்றிருக்கலாம் என்று ஒரு சிவில் நீதிமன்றம் கண்டறிந்தது. அவர் மீதும் இதுவரை போர்க்குற்ற கிரிமினல் குற்றம் சாட்டப்படவில்லை.
இதுவரையில் ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக எந்த அவுஸ்திரேலிய வீரர்களும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் அவுஸ்திரேலிய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்திய இரகசிய தகவலை ஊடகங்களுக்கு கசியவிட்டதற்காக முன்னாள் இராணுவ வழக்கறிஞருமான டேவிட் மெக்பிரைடுக்கு மே மாதம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆப்கான் போர்க்குற்றங்களை வெளியிட்ட இராணுவ வழக்கறிஞரான டேவிட் மக்பிரைட்டி அங்கு இரண்டு சுற்றுப் பயணங்களைச் செய்திருந்தார். ஆப்கானிஸ்தான் குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்பதனை அவரே முதன்முதலில் வெளிப்படுத்தினார்.
ஆயினும் அவர் இராணுவ இரகசியங்களை திருடி வெளியிட்டார் எனவும் குற்றஞ் சாட்டப்பட்டார். இத்தகவலை அம்பலப்படுத்தியதை மக்பிரைட் கடந்த வருடம் ஏற்றுக் கொண்டிருந்தார்.
தற்போது ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய சட்டத்தரணி டேவிட் மக்பிரைட்டிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்து வருடங்கள் 8 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகளின் போது அவுஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் 38 பொதுமக்களை கொலை செய்தமை தெரியவந்தது.
இவர் எவ்வித துன்புறுத்தலை எதிர்கொண்டவர் அல்ல என்றாலும், தற்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட முதல் அவுஸ்திரேலிய விசில்ப்ளோவர் (Whistle Blower) ஆவார். ஆயினும் ஜனநாயக நாட்டில் உண்மையை தெரிவிப்பது தனது தார்மீக கடமை என தான் கருதியதாக டேவிட் மக்பிரைட் தெரிவித்துள்ளார்.