மலையக சாசன பிரகடன நிகழ்வு
இந்நாட்டில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முகமாக சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான இவ்வருடம் ஆகஸ்ட் 6 ஆம் திகதி கொழும்பில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலான மலையக சாசன பிரகடன நிகழ்வு நுவரெலியாவில் தனியார் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கிய பிரதிநிதிகள் தோட்ட தலைவர்கள் தேசிய சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,உரையாற்றுகையில் மலைகய சாசனம் தொடர்பான விளக்கத்தையும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும், மலைகய சாசனம் மற்றும் சஜித் பிரேமதாசவுடனான உடன்பாடு தொடர்பாக விளக்கமளித்தனர்.