முச்சந்தி

இஸ்ரேலுக்கு ஆயுத தடை !… போர்க்குற்ற விசாரணை சாத்தியமா?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலக நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆயுத தடை விதித்து வரும் வேளையில், போர்க்குற்ற விசாரணை சாத்தியமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. ஆயுதங்கள் வழங்க பல நாடுகள் மறுப்பு தெரிவித்தாலும் இஸ்ரேலின் போர்க்குணாம்சம் இன்னமும் மாறவில்லை.

இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் முடிவில் இருந்து விலகியுள்ள நாடுகளின் வரிசையில் தற்போது பிரித்தானியாவும் இணைந்துள்ளது.

காசா போரின் பின்னர் நீண்ட காலம் முன்னெடுத்த ஆய்வின் முடிவில் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார்.

இதனைப் போலவே, கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட இத்தாலி, புதிதாக இஸ்ரேலுக்கு எந்த ஆயுத ஒப்பந்தமும் முன்னெடுக்கப்படாது, ஆனால் அக்டோபர் 7ம் திகதிக்கு முன்னர் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் அமுலில் இருக்கும் எனக் குறிப்பிட்டது.

பல வருடங்களாக இஸ்ரேலுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கும் மூன்றாவது பெரிய நாடாக இத்தாலி உள்ளது.

தற்போது ஸ்பெயின் நாடும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என ஜனவரி மாதம் அறிவித்தது. ஸ்பெயின் அரசு வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் செல்லும் கப்பல்களும் தங்கள் துறைமுகத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் அறிவித்தது.

இவ்வருட மார்ச் மாதத்தில் இருந்து கனடாவும் இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்வதை நிறுத்தி வைத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை பெல்ஜியம் அரசாங்கம் விதித்துள்ளது. அத்துடன் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் அது கோரி வருகிறது.

பிப்ரவரி மாதத்தில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்பதில்லை என நெதர்லாந்து முடிவெடுத்துள்ளது. ஆனால் உதிரி பாகங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்து வருகிறது. அவற்றை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறது.

கடந்த 18 மே 2024இல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் சென்ற சென்னை கப்பலுக்கு ஸ்பெயின் அனுமதி மறுப்பும் தெரிவித்தது.

இந்த நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு தாராளமாக ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.

நமீபியாவில் அனுமதி மறுப்பு :

ஆபிரிக்க நாடான நமீபியா அண்மையில் அதிரடி நடவடிக்கையாக, இஸ்ரேல் கப்பலுக்கு அனுமதி மறுப்பு தெரிவித்தது.

வெடி மருந்துகளுடன் வந்த இஸ்ரேல் ஆயுத கப்பலை, நங்கூர மிட அனுமதி மறுத்த நமீபியா பினதங்கிய நாடாக இருந்தாலும் துணிச்சல் முடிவு என்றே கருதப்படுகிறது.

இன விரோத நடவடிக்கை, பயங்கரவாதம், போர்க்குற்றம் ஆகிய காரணங்களால் உலக அரங்கில் இருந்து தொடர்ந்து தனிமைப்பட்டு வருகிறது இஸ்ரேல்.

இந்நிலையில் ஆப்பிக்க நாடான நமீபியா நோக்கி வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட இஸ்ரேலின் MV Kathrin என்ற கப்பல் வந்துள்ளது. வியட்நாமில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த அந்த கப்பல், ஓய்வு மற்றும் பராமரிப்புக்காக, நங்கூரமிடுவதற்கு அனுமதி கேட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களது கடல்பரப்பில் இஸ்ரேல் ஆயுத கப்பலுக்கு அனுமதி இல்லை என நமீபியா அரசு அதிரடியாக அறிவித்து, திருப்பி அனுப்பியது.
காசாவில் நடைபெறும் போர்க்குற்றங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக நமீபியா நீதித்துறை பெண் அமைச்சர் இவோன் தௌசாப் (Yvonne Dausab) குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட நமீபியா ஒரு பின்தங்கிய நாடாகும். இருப்பினும் துணிச்சலுடன் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேலுக்கு கருப்பு கொடி காட்டியுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறவெறியின் ஒரு பகுதியாக ஆபிரிக்க நாடுகள் கருதி வருகின்றன.

இதன் காரணமாகவே தென் ஆபிரிக்கா, தானாக முன்வந்து, சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.

கொலம்பியா நிலக்கரி ஏற்றுமதி தடை:

இஸ்ரேலுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்வதை தென் அமெரிக்க நாடான கொலம்பியா நிறுத்தியுள்ளது. பல தென் அமெரிக்க நாடுகள் இஸ்ரேல் உடனான தூதரக உறவுகளை துண்டித்துள்ளன.

ஆனால் சவுதி, ஐக்கிய அரபு இராச்சியம் , எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட அரபு சுனிப்பிரிவு முஸ்லீம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து இஸ்ரேல் உடன் உறவுகளை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கடும் போக்கு:

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை இங்கிலாந்து நிறுத்தியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. கடந்த வருட அக்டோபருக்குப் பிறகு இஸ்ரேல் எவ்வாறு நடந்துகொண்டது என்பதன் அடிப்படையில் இத்தடை வந்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் பாலஸ்தீன பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கை மற்றும் அழிவின் அளவு ஆகியவை பெரும் கவலையை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளது.

தற்போதய தடை ஒரு முழுமையான ஆயுதத் தடையல்ல. 1982 இல் மார்கரெட் தாட்சர் பதவியில் இருந்த காலம் முதல், பல சந்தர்ப்பங்களில் இதேபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.

பிரிட்டன் இஸ்ரேலுடன் பல ஏற்றுமதி உரிமங்களை கொண்டுள்ளது. இது நாட்டின் மொத்த இறக்குமதியில் ஒரு சிறிய அளவையே குறிக்கிறது.

தற்போது இஸ்ரேலின் பிரதம மந்திரி உள்நாட்டு எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களால் அதிகரித்த அழுத்தத்தை எதிர்கொள்வதைப் போலவே, இந்த தடை முடிவு பெஞ்சமின் நெதன்யாகுவின் நிர்வாகத்தை பாரியளவில் கோபப்படுத்தும்.

கனடாவும் ஆயுத தடை :

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை கனடா நிறுத்தக் கோருவதாக கூறியுள்ளது.
கனடா முழுவதிலும் உள்ள பல ஆயுதக் கம்பெனிகள் காசாவில் நடந்த படுகொலைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்த ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தொழில்நுட்பத்தை இஸ்ரேலுக்கு விற்பதன் மூலம் பாரிய இலாபத்தை
ஈட்டியிருக்கின்றன.

தொடர்ந்தும் இஸ்ரேலிய இராணுவம் காசாவில் பொதுமக்கள் சுற்றுப்புறங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது கண்மூடித்தனமாக குண்டுவீசி வருகிறது. 42000 பேரைக் கொன்றதுடன், அவர்களில் பாதி குழந்தைகள் ஆவார்கள்.

பள்ளிகள், மருத்துவமனைகள், தகவல் தொடர்பு அமைப்புகள், நீர் ஆதாரங்கள், விவசாயம் மற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் அழிக்கப்பட்டுள்ளன.

உணவு மற்றும் எரிபொருள் தடுக்கப்பட்டதுடன், கற்பனை செய்ய முடியாத பேரழிவை பாலஸ்தீனம் கட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பான பிரதேசங்களில் குண்டுகள் வீசப்பட்டதால், கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

கொடும் போரை நிறுத்த கனேடிய அரசாங்கம் இறுதியாக போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், காசா மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்களை கனடா தொடர்ந்து ஆதரிக்கிறது என்பதே உண்மையாகும்.

உடனடியாக இஸ்ரேல் மீது ஆயுதத் தடையை விதிக்க கனடாவை பல பொது அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இதன் பொருள் கனடா உடனடியாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தவும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், உதிரிபாகங்கள் அல்லது ராணுவ சேவைகளை விற்பதற்கு ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தல், ஏற்கனவே உள்ள ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்தல், புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஏற்றுமதி உரிமங்களை வழங்காமல் இருப்பது மற்றும் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களை மாற்றுவதை உடனடியாக நிறுத்தவும் பொது அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் செல்வதைத் துண்டித்து, ஆயுதத் தடையை அமுல்படுத்துவதன் மூலம் போர்நிறுத்தத்திற்கான அழைப்பை கனடா உண்மையானதாக மாற்ற வேண்டிய நேரம் இதுவென இந்த பொது அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.