ரணில் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை; சி.வி.விக்னேஸ்வரன் கடும் குற்றச்சாட்டு
ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டுமே வாக்குறுதியை வழங்குவார். தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் நல்லூர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”13 வது திருத்தத்தை தமிழ் மக்களின் நிரந்தர தீர்வாக தாம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் குறைந்தபட்சம் அதிலுள்ள அதிகாரங்களையாவது நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்கவுடன் தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், பேச்சுவார்த்தையில் 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்குவதற்காக நிர்மலா சந்திரகாசன் தலைமையில் நிபுணர் குழுவுக்கான பெயர்களை வழங்கியதாகவும், ஆனால் ரணில் விக்ரமசிங்க குறித்த குழுவை அங்கீகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
”ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் சாதகமான நிலப்பாட்டை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர் மீது நம்பிக்கை வைத்ததாகவும், ஆனால் அவர் பேச்சில் மட்டும் ஈடுபடும் நபராக காணப்பட்டாரே தவிர நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.
தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியத்தை முதலில் முன்வைத்து நான்தான். உடல்நிலை காரணத்தால் பொது வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்லாததை வைத்து சிலர் தான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக புரளிகளை கிளப்பி விட்டுள்ளார்கள்.
தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் நிலையில் தமிழ் மக்கள் அவருக்கான அமோக ஆதரவை வழங்க வேண்டும்.” எனவும் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.