ஜனாதிபதி தேர்தல்; அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 5-ந் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதே போல் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தற்போது இரு கட்சியினரும் தீவிர பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஜார்ஜியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“இந்த தேர்தலில் நாம் கடுமையான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் கடினமாக உழைப்பது நமக்கு புதிதல்ல. உங்கள் உதவியுடன் நவம்பர் மாதம் நாம் வெற்றியை பெறப்போகிறோம். கடுமையான போராட்டங்கள் எனக்கு பழக்கப்பட்டவை. நான் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்திருக்கிறேன்.
தினமும் நீதிபதியின் முன்பு, ‘நான் மக்களுக்கான கமலா ஹாரிஸ்’ என்று பெருமையாக கூறுவேன். எனது தரப்பு எப்போதும் மக்களின் தரப்புதான். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை எதிர்த்து போராடியிருக்கிறேன்.
அந்த போராட்டங்கள் எதுவும் எளிதாக இருந்ததில்லை. அதே போல் தேர்தல் போராட்டமும் எளிதானது அல்ல. இது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான போராட்டம்.”இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.