சஜித்- அனுர மற்றும் ஐஎம்எப் கலந்துரையாடல்: தயார் நிலையில் ரணில்
ஐஎம்எப் (IMF) எனப்படும் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற காரணிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஐஎம்எப் அதிகாரிகளுடன் பகிரங்க வீடியோ கலந்துரையாடலுக்கு தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நேற்று (25) ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்போது, ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிகளின் தலைவர்களுக்கு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்காலத்தில் முன்னோக்கி கொண்டு செல்லும் வழிமுறை தொடர்பில் ஐஎம்எப் க்கு சரியான காரண – காரியங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்த ரணில், குறித்த கலந்துரையாடல் வீடியோவை அனைத்து நாட்டு மக்களுக்கும் பிரசித்தப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு வீடியோ கலந்துரையாடலை அனைத்து மக்களுக்கும் பிரசித்தப்படுத்தினால் முழு நாடும் அன்றிலிருந்தே சிலிண்டருக்கு வாக்களிப்பார்கள் என கூறிய அவர், நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு பொய்யுரைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கையும் விடுத்தார்.
கிரீஸ் நாட்டிலும் இவ்வாறு ஐஎம்எப் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் கூட அதற்கு ஐஎம்எப் லத்தீன் மொழியில் பதிலளித்திருந்தது.
“Pacta sunt servanda” இந்த வார்த்தை மூலம் ஐஎம்எப் அமைப்பு உடன்படிக்கையில் இருந்து விலகுவதே திருத்தத்திற்கான ஒரே வழி எனக் கூறியதாக தெரிவித்தார்.
ரணிலின் வெற்றிக்கு அர்ப்பணிப்பதாக ஐ.தே.க உறுதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியாக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இந்தத் தீர்மானத்தை மாநாட்டில் முன்வைத்ததுடன், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க அதனை உறுதிப்படுத்தினார்.
அப்போது மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் கைகளை உயர்த்தி தீர்மானத்திற்கு உடன்பாடு தெரிவித்ததையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மாநாடு புறக்கோட்டை சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.