போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்த இஸ்ரேல்; ஹமாஸ் அமைப்பின் தீர்மானம் என்ன?
இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையில் சுமார் 10 மாதங்களுக்கு மேலாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் போரினால் பலியான பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 40,000 ஆயிரத்தைக் கடந்துள்ளன.
இதன் காரணமாக இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் பல மாதங்களாக முயற்சித்து வருகின்றன.
ஆனால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இணங்கவில்லை.
தற்சமயம் காஸா போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா கொண்டு வந்த முன்மொழிவு திட்டத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (Antony Blinken) நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu)வுடன் மேற்கொண்ட இரண்டரை மணிநேர கலந்துரையாடலுக்குப் பின்னரே இதனை அறிவித்திருந்தார்.
இந்த போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்காக 9 ஆவது முறையாக பிளிங்கன் மத்திய கிழக்குக்கு பயணித்துள்ளார்.
இதுகுறித்து பிளிங்கன் கூறியதாவது, “காஸாவில் போர் நிறுத்தம், ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளை விடுவித்தல் போன்ற அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்கு இஸ்ரேல் ஆதரவு. ஹமாஸ் அமைப்பினரும் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து பிணைக் கைதிகளை திருப்பி அனுப்ப வேண்டும். இதன் மூலம் பலஸ்தீனியர்கள் இதுநாள் வரையில் பட்ட துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வர முடியும்” என்றார்.