வெனிசுலாவின் சர்ச்சைக்குரிய ஜனாதிபதித் தேர்தல்; மீண்டும் போராட்டம்
வெனிசுலாவில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் சர்ச்சைக்குரிய வெற்றிக்கு எதிராக வெனிசுலா முழுவதும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தலைநகர் கராகஸில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களுடன் இணைந்து பயம்கொள்ள தேவையில்லை என்று வலியுறுத்தினார்.
கிளர்ச்சி குற்றச்சாட்டுக்கு ஆளாகி தலைமறைவாக இருந்த மச்சாடோ, மக்களின் குரலுக்கு மேல் எதுவும் இல்லை என்று கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாம் இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றும் மச்சாடோ கூறியுள்ளார்.
இதனிடையே மதுரோவின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொலிஸாரும் இராணுவமும் சம்பவ இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் வெனிசுலாவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற நிலையில் நிக்கலோஸ் மதுரோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தலில் 51.02 வீத வாக்குகளை மதுரோ பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளர் 44.02 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.
எனினும் வாக்குகளை எண்ணுவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருந்தது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எல்விஸ் அமரோசோ ஜனாதிபதி மதுரோவின் நெருங்கிய நண்பர் என தெரிவித்து போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த மதுரோ, கடந்த 11 வருடங்களாக ஆட்சியிலுள்ள மதுரோவின் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு பாரிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாகும் தேர்தலொன்றினூடாக தான் மீண்டும் தெரிவாகியுள்ளமை அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முழக்கம் என தெரிவித்திருந்தார்.
இதனிடையே நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்காத நிலையில் மதுரோவுக்கு ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.