பிரித்தானியக் கலவரத்துக்கும் காலனித்துவத்துக்கும் என்ன தொடர்பு?…. நியூசிலாந்து சிற்சபேசன்
அண்மையிலே பிரித்தானியாவில் நடைபெற்ற கலவரங்கள் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. அங்கு குடியேறிகள் தொடர்பான ஒவ்வாமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலாதிகாலமாகத் தொடர்கின்றது.
மருத்துவம், கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிலேயே அரசு தொடர்பில் பாமரனின் அபிப்பிராயம் உருவாகின்றது. அவற்றிலே குறைகள் ஏற்படுவது இயல்பானது. அவ்வாறு ஏற்படுகின்றபோது, செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் என்பதுபோல, குடியேறிகள் மீதான காழ்ப்புணர்வு பொங்கிப்பிரவாகிக்கின்றது. அதுவே, காலவோட்டத்தில் இயல்பாகவும் ஆகிவிடுகின்றது.
அதனால், குடியேறிகள் தொடர்பான நல்லெண்ணமின்மை, நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக, அதிகரிக்கின்றது.
நாய்க்கு எங்கே அடித்தாலும் காலைத் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள். அதுபோல, எந்தவொரு பிரச்சினையிலும் குடியேறிகளை நோக்கிச் சுட்டுவிரல் நீட்டுகின்ற மனப்பாங்கு வானுயரவளர்ந்துவிட்டது.
அத்தகையதொரு சூழலிலேயே, ஜூலை 29ம் திகதியன்று, லண்டனிலிருந்து வடமேற்கே சுமார் இருநூறு மைல் தொலைவிலே, ஐரிஷ் கடலோரமாகவுள்ள, சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றிலே மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
மேற்படி தாக்குதலின் சூத்திரதாரி, படகு மூலம் பிரித்தானியாவுக்கு வந்த அகதி என்னும் தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. அதனால் பதற்றநிலை ஏற்பட்டது.
அந்த தகவல் தவறானது என்பதைப் பொறுப்புள்ள தரப்புக்கள் உரத்துச் சொன்னபோதும், சோசியல் மீடியா யுகத்தில் அஃது ஈனஸ்வரமாகியது.
தீவிர வலதுசாரி குரல்கள் உரத்து ஒலிக்க ஆரம்பித்தன. அதனுடைய தொடர்ச்சியாக, பிரித்தானியாவின் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. அவையே கலவரமாக மாறின.
“நான் இறக்கும் வரை இங்கிலாந்து தான். எங்கள் நாடு எங்களுக்கு திரும்ப வேண்டும்,” என்னும் பிரித்தானியப் பாடலை ஆங்காங்கே உரத்த குரலில் பாடி உணர்சிகளைக் கொந்தளிக்கச் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது.
மிட்லன்ஸ் என்று சொல்லப்படுகின்ற பிரித்தானியாவின் மையப்பிரதேசங்களில் உருக்கொண்ட கலவரம் தேசத்தின் நாலாபக்கமும் பரவின.
பிரித்தானிய அரசு துரிதமாக செயற்பட்டு சட்டம் ஒழுங்கு நடைமுறைகளை நிலைநாட்டியது. அதனால், கலவரங்கள் தணிக்கப்பட்டன.
ஆனால், இனங்களிடையேயான முறுகல் தீர்க்கப்பட்டதாக நம்பமுடியவில்லை. அஃது எளிதான காரியமுமல்ல. பிரித்தானியாவின் சனத்தொகைப் பரம்பலை, குடியேறிகளின் வருகை மாற்றியுள்ளமை யதார்த்தமாகும்.
குடியேறிகள் தொடர்பில், திட்டமிட்ட அணுகுமுறையை இறுக்கமாக நடைமுறைப்படுத்த பிரித்தானியாவினால் முடியவில்லை. அதற்கு வரலாற்றுச் சுமையும் காரணமாகும்.
பிரித்தானியக் காலனித்துவத்தின் தொடர்ச்சியே குடியேறிகள் என்பது வெள்ளிடைமலையாகும்.
அன்றோருகாலத்தில் ஐரோப்பியர் வளங்களைத் தேடினார்கள். ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கான கடல்மார்க்கமான கேப் வழித்தடம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தை பயன்படுத்தி திரைகடல் ஓடினார்கள். திரவியம் தேடினார்கள். நாடுகளைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றிய நாடுகளை, பிரித்தானியாவிலிருந்து, ஆட்சி செய்ய காலனித்துவ முறைமையை உருவாக்கினார்கள். அதுவே பிரித்தானிய சாம்ராஜ்யமாகியது.
அவ்வாறு கைப்பற்றிய தூரதேசங்களிலிருந்து கடல்மார்க்கமாக வளங்களை பிரித்தானியாவுக்குக் கொண்டுசென்றனர். இயற்கை வளங்களை மட்டுமல்ல, மனிதவளங்களையும் சேர்த்தே கொண்டுசென்றனர்.
இந்தியா உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து மனிதவளத்தை “கூலி” என்னும் அடையாளத்துடன் வலிந்து கொண்டுசென்றனர். “கூலி” என்பதே, கடல்போக்குவரத்து வேலையிலே “லஸ்கர்” என அடையாளமாகியது. இவ்வாறு “கூலி” என்னும் அடையாளத்துடன் கொண்டுசெல்லப்பட்டவர்களே, பிரித்தானியவில் நுழைந்த ஆரம்பகால “குடியேறிகள்” என பெருவெட்டில் சொல்லலாம்.
பொதுக்கட்டுமானம், ரயில்கட்டுமானம், மிட்லன்ஸ் என்று சொல்லப்படுகின்ற மன்செஸ்டர், பர்மிங்கம் பிரதேசங்களிலே தொழிற்சாலை, ஹீத்ரோ விமான நிலையக் கட்டுமானம் எனப் பல்வேறு தேவைகளுக்காகவும் “கூலி” களைக் கொண்டுசென்றனர்.
அவ்வாறு ஹீத்ரோ விமானநிலைய வேலைத்திட்டத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட பஞ்சாபிகளே, விமான நிலையத்தை அண்டிய சவுத்ஹால் பிரதேசத்தின் அடையாளமாக இன்றும்கூட காணப்படுகின்றனர்.
ஆக, “குடியேறிகள்” பிரித்தானியாவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தமைக்கு யார் காரணமென்பது சிதம்பர ரகசியமல்ல.
அடுத்த குடியேற்ற அலை, இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது ஏற்பட்டதாகச் சொல்லலாம். அதுவே, பெருமளவிலான குடியேறிகள் பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்த காலகட்டம் எனலாம்.
1970களில் ஆபிரிக்க நாடுகள் காலனித்துவத்திலிருந்து சிலிர்த்துக்கொண்டன. ஆபிரிக்கர்களுக்கே ஆபிரிக்கா என்னும் கோஷம் வலுப்பட்டது.
ஆபிரிக்காவிலே, காலனித்துவக் காலங்களில், வலிந்து குடியேற்றப்பட்டவர்களிலே இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமானதாகும்.
அத்தகையோரை, உகண்டா, தன்சானியா போன்ற ஆபிரிக்க நாடுகள் துரத்தியடித்தன. அவ்வாறு ஆபிரிக்காவிலிருந்து விரட்டப்பட்ட இந்தியர்களுக்கான போக்கிடம் பிரித்தானியாவேயாகும். அதனாலே, மற்றுமொரு குடியேற்ற அலை ஏற்பட்டது.
அதேபோன்று, ஆபிரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளிலிருந்து, காலனித்துவத்தின் தொடர்ச்சியாக பிரித்தானியவை நோக்கிய ஆபிரிக்க குடியேற்ற அலைகள் இடம்பெற்றன.
ஆக, பிரித்தானியக் காலனித்துவத்தின் விட்டகுறை தொட்டகுறையாகவே குடியேற்ற அலைகள் ஏற்பட்டதாகச் சொல்லலாம்.
ஆகப்பிந்திய கணக்கெடுப்பின்படி, மொத்த சனத்தொகையில் ஒன்பது விழுக்காடு ஆசியப் பின்னணியினரும், தலா நான்கு விழுக்காடு ஆபிரிக்க மற்றும் பிற பின்னணியினருமே “குடியேறிகள்” என அடையாளமாகின்றனர்.
வெள்ளையர் அல்லாதவர்களைக் குடியேறிகள் என வகைப்படுத்துவதிலே கூட பொருள் குற்றம் உண்டு. காரணம்: குடியேறிகள் என்று தற்போது அடையாளப்படுவோரிலே, கணிசமானோர் பிரித்தானியாவில் பிறந்தவர்களாகும். அதனால் குடியேறிகள் அல்லர்.
எதுஎப்படியாகிலும், இனங்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பது இலகுவல்ல. இயல்புநிலை எளிதில் வசப்படக்கூடியதல்ல.
ஆக, பாட்டன் போட்ட விதை, பேரனுக்குக் கிடைத்த கனி என்பார்கள். பிரித்தானியாவிலே பாட்டன் போட்ட விதை, பேரனுக்கு எதனைத் தந்திருகின்றது என்பது ரகசியமல்லவே!
நியூசிலாந்து சிற்சபேசன்