நடிகை சுஜாதாவும் நான் படித்த தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும்! …. ஏலையா க. முருகதாசன்.
இங்கே ஒரு பதிவைப் பகிர்ந்திருக்கிறேன்.இது நடிகை சுஜாதாவின் வேதனை நிறைந்த திரைப்பட வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் பதிவு.
இப்பதிவைப் பகிர்ந்தவர் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக எமது கல்லூரி பற்றி சுருக்கமான விளக்கம்.
மகாஜனக் கல்லூரி இலங்கையின் யாழ் மாவட்டத்தில் தெல்லிப்பழை என்ற கிராமத்தில் அம்பனைக் குறிச்சியில் தரம் 1ஏ என்ற தரத்தையுடைய கல்லூரியாகும்.இலங்கையில் பிரபலமான கல்லூரி.அனைத்து துறையிலும் முதன்மை நிலையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் கல்லூரியாகும்.
நடிகை சுஜாதாவைப் பற்றிச் சொல்லும் இப்பதிவு அவர் இறக்கும் வரை ஒரு சிறை போன்ற வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதை உணர வைத்துள்ளது..
சுஜாதாவிற்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லாத போதும் அவரை நிர்ப்பந்தப்படுத்தி நடிக்க வைத்தவர்கள் அவரின் தகப்பனும் தாயும் என்பது எனக்கு வியப்பைத் தந்தது.
ஏனெனில் தெல்லிப்பழையில் எனது வீட்டுக்கு மிக அருகாமையில் இருந்த நான் படித்த மகாஜனக் கல்லூரியிலேதான் நடிகை சுஜாதாவின் தந்தையான மேனன் விலங்கியல் ஆசிரியராக இருந்தவர்.
கேரளாவைச் சேர்ந்த மலையாளியான இவர் மட்டுமல்ல இன்னுமொரு மேனன்,வாரியர், ஞானசேகரன் என கேரளாவிலிருந்து வந்து மகாஜனக் கல்லூரியில் படிப்பித்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.
மகாஜனாவின் சிற்பி என அழைக்கப்பட்ட அமரர் திரு.தெ.து.ஜெயரத்தினம் அவர்களால் கேரளாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களே இவர்கள்.
சுஜாதாவின் தந்தை எனக்கு நன்கு பரிச்சயமானவரே.அவரிடம் எப்பொழுதும் பசுந்தான தன்மையும் கவர்ச்சிகரமான முகப்பொழிவும் கொண்டவராகவும் சுருண்ட தலைமுடியுடன் கூடியவராகவும் காணப்படுவார்.எல்லோரிடமும் இயல்பாகப் பழகக்கூடியவர்.
அத்தகு மனிதராகவும் ஆசிரியராகவும் இருந்த ஒருவரா தனது மகளை வேதனைப்படுத்தி நடிக்க வைத்தார் என்பது ஆச்சரியமாகவே இருக்கின்றது.
நடிகை சுஜாதா ஏழாம் வகுப்புவரை மகாஜனாவிலேயே படித்தார்.அவருடைய அண்ணன் கோபிநாத் இப்பொழுது அமெரிக்காவில் வசித்து வருபவரும் மகாஜனாவில் ஆசிரியராக இருந்தவருமான திரு.ஆறுமுகம் மாஸ்ரரின் இரண்டாவது மகனான திரு.மகேந்திரன் ஆறுமுகத்தின் சக வகுப்பு மாணவன்.
விலங்கியல் ஆசிரியராக திரு.பொ.கனகசபாபதி அவர்கள் மகாஜனாவில் நியமனம் பெற்றதும் நடிகை சுஜாதாவின் தந்தை குடும்பத்துடன் தென்னிலங்கைப்
பகுதிக்கு படிப்பிக்கச் சென்றுவிட்டார்.அவர் மாத்தளைப் பகுதியில் உள்ள சிங்கள கல்லூரியொன்றில் படிப்பித்ததாக அறிந்தேன்.
நடிகை சுஜாதாவும் அக்கல்லூரியிலேதான்
படித்தார்.நடிகை சுஜதாவுக்கும் ராதிகாவைப் போல சிங்கள மொழி தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
எங்களுக்கும் நடிகை சுஜாதாவின் குடும்பத்துக்குமிடையில் பப்பாசிப் பழம் கொடுப்பது தொடர்பாகவும்,சில வேளைகளில் வாழைப்பொத்தி கொடுப்பதால் தொடர்பு இருந்தது.
நாங்கள் தோட்டம் செய்து வந்ததால் பப்பாசிப் பழம் வாழைப் பொத்தி போன்றவற்றை அவருக்கு கொடுப்பது உண்டு.இப்படிக் கொடுப்பது எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
சில நாட்களில் மேனன் எங்கள் வீட்டடிக்கு வந்து இவற்றைப் பெற்றுக் கொள்வார்.அதிகமாக எனது தந்தைதான் அவருடைய வீட்டுக்கு கொண்டு போய்க் கொடுப்பார்.
மேனனின் சைக்கிள் காண்டிலில் ஒரு பிரம்புக்கூடை இருக்கும்.மேனன் இன்னொரு மேனன் வாரியர் ஞானசேகரன் ஆகியோர் எமது கல்லூரியில் ரென்னிஸ் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.
ஒரு சனிக்கிழமை முருகையா என்பவர் ஒரு பாம்பை தடியில் கட்டிக் கொண்டு கல்லூரிக்குள் வந்து அங்கு நின்ற ஆசிரியர் மேனனிடம் கொடுக்க அவர் அந்தப் பாம்பை மயக்கி இறக்கச் செய்து அந்தப் பாம்பு விழுங்கி வயிற்றுக்குள் இறந்து கிடந்த எலியை கத்தியால் கீறி எடுத்ததை நான் வேடிக்கை பார்த்தேன்.
இந்தப் பாம்பை எப்படிப் பிடித்தேன் என்பதை கீழ்வருமாறு முருகையா என்பவர் விபரித்தார் .ஒரு புற்றுக்குள் பாம்பொன்று பாதி உடலை வெளியே வைத்தபடி இருந்த போது அந்தப் புற்றின் துவாரத்தை கற்களால் இறுக்கிப் பின் தடியொன்றை எடுத்து பாம்பின் உடலோடு வைத்து இறுக்கிக் கட்டி எடுத்து வந்ததாகச் சொன்னார்.
பாம்புடன் வந்த முருகையாவை லிங்கம் கபேக்கு
முன்னால் நின்று பொழுது போக்கிக் கொண்டு நின்ற நான் வேடிக்கை பார்ப்பதற்காக அவரோடு போய் ஆசிரியர் மேனன் பாம்பின் வயிற்றைக் கிழித்து எலியை எடுத்ததைப் பார்த்தேன்.
ஒரு நடிகையை நடிக்க வைக்க அவரின் தந்தையே கட்டாயப்படுத்தியதாகச் சொல்லப்பட்ட செய்தி ஒரு நல்ல மாஸ்ரா இப்படிச் செய்தார் என வியப்பாகவே இருந்தது.
அவரின் அண்ணனான கோபிநாத்தான் நடிகை சுஜாதாவின் மனேஜராக இருந்ததாக அவரின் சக மாணவனான திரு.மகேந்திரன் ஆறுமுகம் தெரிவித்திருந்தார்.
மகாஜனாவில் கல்வி கற்றவர்களில் நடிகராக இருந்தவர்.பன்னாலை தெல்லிப்பழையைச் சேர்ந்த திரு.விஜயசிங்கமும் ஒருவர்.அவர் தேவர்பிலிம்ஸில் உதவி இயக்குநராகவும் நடிகராகவும் இருந்தார். இவர் அண்ணையின் சக மாணவன் மட்டுமல்ல நண்பனும்கூட.
ஒரு பொறி இவ்வளவையம் எழுத வைத்துவிட்டது.