Uncategorized

டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டின் தீர்க்கமான தீர்மானங்கள்!…. ஆசியா நோக்கி உலகதிகாரம் நகர்கிறதா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டுக்கான தொனிப்பொருள் ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு ஒரு எதிர்காலம்’ என்பதாகும். அப்படி இருந்தும் இரு முக்கிய நாட்டின் தலைவர்கள் வரவில்லை என்பது ஜி20 அமைப்பின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுகிறது.
ஜி20 அமைப்பின் உச்சிமாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் விவகாரங்களும் ஜி20 உச்சிமாநாட்டில் ஆராயப்பட்டன என தெரிவிக்கப்பட்டது.
ஜி-20 இந்திய மாநாடு தீர்மானங்கள்:
இந்த மாநாட்டில் நிறைவேற்ற முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் போது, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாலின இடைவெளியை குறைக்க வேண்டும். பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம வாய்ப்பை வழங்க வேண்டும்.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவதையும், அணு ஆயுதங்களை கொண்டு மிரட்டல் விடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. சர்வதேச அமைதிக்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே, அனைத்து வகையான தீவிரவாதமும் களையப்பட வேண்டும்.
உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும். எல்லை சார்ந்த அரசியல் பிரச்சினைகளில் ஜி 20 நாடுகள் தலையிடாது.
புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் சர்வதேச இயற்கை எரிபொருள் கூட்டணியை உருவாக்க வேண்டும். பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடும் அளவை பூச்சியமாக மாற்ற வேண்டும். இயற்கை எரிபொருள் வர்த்தகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஜி 20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
உக்ரேன் போர் பற்றிய தீர்மானம்:
உக்ரேன் போர் தொடர்பாக ஜி20 நாடுகள் பிளவுப்பட்டிருக்கும் சூழலில் ஒருமித்த கருத்து என்பது சாத்தியமற்றது என நிபுணர்கள் கருதினார்கள். ஜி20 மாநாட்டின் கூட்டுத் தீர்மானத்தை உக்ரேனைத் தவிர ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகள் என அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.
இருப்பினும் இந்த தீர்மானம் கடந்த ஆண்டின் தீர்மானத்தை போல ரஷ்யாவை கடுமையாக விமர்சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. டெல்லியில் முடிவடைந்த ஜி-20 மாநாட்டில் கூட்டறிக்கை மீது ஒருமித்த கருத்து எட்டப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேபோல உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு இதன்மூலம் அதிகரித்திருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டின் பின் ஜி20
மாநாடு 
இந்திய -சீனாவின் உறுதியான பொருளாதார வளர்ச்சியால், புதிய பிரிக்ஸ் நாணயம் உருவாக சாத்தியமா எனும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலமையில் பிரிக்ஸ் மாநாடு முடந்து இரு வாரங்களுக்கு பின் ஜி20
மாநாடு நடைபெற்றுள்ளது.
பிரிக்ஸ் (BRICS ) அமைப்பு புதிய கரன்சியை வெளியிடுவது குறித்து 44 நாடுகள் ஆதரவு என்று தகவல்கள் தற்போது தெரிவிக்கின்றன. அத்துடன் அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய பிரிக்ஸ் நாணயத்தை (BRICS Currency) வெளியிடப்போவதாக ரஷ்யா நீண்ட காலமாக அறிவித்துள்ளதும் அறிந்ததே.
புட்டின்ஜின்பிங் வரவில்லை:
இம்முறை ஜி20 மாநாட்டில் ரஷ்ய,சீன ஜனாதிபதி தலைவர்கள் பங்குபற்றாதிருப்பது, இந்த அமைப்பை உலக பொருளாதார ஒத்துழைப்புக்கான பிரதான அரங்காகப் பேணுவதற்கும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நிதிகளை அளிப்பதற்கான முயற்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்டது.
ஆயினும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கெய் லவ்ரோவ் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றினார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளாமையால், அவருக்குப் பதிலாக சீனப் பிரதமர் லீ கியாங் கலந்துகொண்டார்.
சீன அதிபர் ஒருவர் ஜி20 உச்சிமாநாட்டில் பங்குபற்றாதமை இதுவே முதல் தடவையாகும்.
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இந்த உச்சிமாநாட்டில் பங்குபற்றாதாமை குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அத்துடன்
மெக்ஸிக்கோ ஜனாதிபதி அன்ட்ரெஸ் மனுவெல் லோபஸ் ஒப்ரதோரும் இதில் பங்குபற்றவில்லை.
ஜி-20 மாநாடு தீர்மானங்கள்:
உலகளாவிய வர்த்தகத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரித்தல், நிலையான அபிவிருத்தி இலக்குகளில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல், தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொழில்நுட்பத்தை துரிதப்படுத்துதல், 21ஆம் நூற்றாண்டுக்கான திறன் கொண்ட மிகவும் பொறுப்பான, உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ சர்வதேச அமைப்பை உருவாக்குதல்,
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் முதலியவற்றுக்கு ஜி-20 மாநாடு தீர்மானங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம், பெண்கள் தலைமையிலான அபிவிருத்தி, உக்ரைன் யுத்தம் காரணமான பொருளாதார, சமூக தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இம்மாநாட்டில்
விவாதிக்கப்பட்டது.
ஜி20 உச்சிமாநாட்டில் காலநிலை நிதி மற்றும் பசுமை மேம்பாடு, அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் வளர்ச்சிக்காக கலந்துகொள்ளும் தலைவர்கள்
கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
ஜி 20 உருவாக்க வரலாறு :
தற்போது 19 வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும்
ஜி 20 அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உலக அளவில பெரும் பொருளாதாரத்தை கொண்டு 20 நாடுகளின் தலைவர்கள், 2008 இல் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வாஷிங்டனில் முதன்முறையாக சந்தித்து பேசினர்.
அப்போது நெருக்கடியில் இருந்த உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்க தங்களுக்குள் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை ஜி 20 நாடுகளின் தலைவர்கள் உணர்ந்தனர்.
அதையடுத்து, பொருளாதார சிக்கல்கள் தீர்வு காணும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட ஜி 20 நாடுகளுக்கான அமைப்பு, உச்சி மாநாடு நடத்தும் அளவுக்கு அடுத்த நிலையை அடைந்தது.
உலகின் பெரும் பொருளாதார நாடுகள் மற்றும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.ஜி 20 உச்சி மாநாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஓர் உறுப்பு நாட்டுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த இந்தோனேசியாவுக்கும், இந்த ஆண்டு இந்தியாவுக்கும் மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அடுத்து பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஜி 20 மாநாட்டை நடாத்த உள்ளனர்.
இந்திய ஜி 20 உச்சிமாடு;
இம்முறை 18 ஆவது தடவையாக ஜி20 உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். புது டெல்லியின் இந்தியா கேட் நினைவுச்சின்னத்துக்கு அருகிலுள்ள பிரகதி மைதானத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘பாரத் மண்டபம்’ எனும் கண்காட்சி அரங்கில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது.
ஜி20 அமைப்பில் அங்கம் வகிக்கும் 20 நாடுகளுடன் விசேட விருந்தினர்களாக பங்களாதேஷ், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு இராச்சியம், ஐ.நா. சர்வதேச நாணய நிதியம், உலக சுகாதார ஸ்தாபனம், உலக வர்த்தக நிறுவனம், உலக தொழிலாளர் ஸ்தாபனம், உலக வங்கி, ஆபிரிக்க ஒன்றியம், உலக பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான ஸ்தாபனம், ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல ஸ்தாபனங்களுக்கும் இம்மாநாட்டில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜி21 ஆக மாற்றம் :
55 நாடுகள் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க ஒன்றியத்துக்கும் ஜி20 குழுவில் அங்கத்துவம் வழங்கும் முயற்சிக்கு இந்த உச்சிமாநாட்டில் நரேந்திர மோடி உந்துதல் அளித்துள்ளார். இம்முயற்சி வெற்றியடைந்தால் ஜி20 ஆனது விரைவில் ஜி21 ஆக மாறிவிடும்.
ஒரு பூமி,ஒரு குடும்பம்,ஒரு எதிர்காலம் என டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டுக்கான தொனிப்பொருள் அமைத்தாலும், தீர்க்கமான முடிவுகளுடன்
ஜி20 மாநாடு முடிவடைந்தது.
இந்த அமைப்பு உலக பொருளாதார ஒத்துழைப்புக்கான பிரதான அரங்காகப் பேணுவதற்கும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நிதிகளை அளிப்பதற்கான முயற்சிகளுக்கும் வழிமுறைகளை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
           ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.