இலக்கியச்சோலை

ஈழத்தின் சிறுவர் இலக்கிய முன்னோடி: வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

மட்டக்களப்பின் பொக்கிஷமாக கருதப்படும், மாஸ்டர் சிவலிங்கம் 90வது பிறந்த தினம் 28 மார்ச் 1933 ஆகும். இலங்கையில் சிறுவர்களுக்கு கதைகூறுவதில் விசேட தன்மையினைக்கொண்டிருந்தவரும் மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம்  கடந்த வருடம் 11 மே 2022 இல்
காலமானார்.
கல்லடியை சேர்ந்த இவர் சிறுவர்களுக்கு கதைகள் கூறுவதில் பிரபல்யம் பெற்றவராகவும் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பல்திறமைக்கலைஞராகவும் திகழ்ந்துவந்தார்.
நவீன இலத்திரனியல் சாதனங்களின் வருகைக்குமுன் வானொலி ஒன்றே மிகப்பெரிய ஜனரஞ்சக ஊடகமாக இருந்த அந்தக் காலத்தில் மாஸ்டர் சிவலிங்கம் ஈழத்தின் சிறுவர் இலக்கியத்தில் ஆற்றிய பங்கு அளப்பரியது. அக்காலத்தில் அவரின் கதை சொல்லும் உணர்வுகளை இக்காலச் சிறுவர்களால் அவ்வளவு இலகுவாக உணர்ந்துகொள்ள முடியாது என்பதும் உண்மையே.
மாஸ்டர் சிவலிங்கம் சிறுவர் இலக்கிய எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றவர்.
மற்றும் இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சியில் (ரூபவாஹினி, வண்ணச்சோலை) சிறுவர் நிகழ்ச்சிகளையும் வழங்கினார்.
பல தசாப்த காலமாக ஈழத்தின்
சிறுவர் இலக்கியத்தின் அடையாளமாகவும், முன்னோடியாகவம் திகழ்ந்த  வானொலிமாமா மாஸ்டர் சிவலிங்கம் தனது 89-வது அகவையில் மட்டக்களப்பில்
2022 மே 11 அன்று காலமானார்.
அவரது கதை சொல்லும் பாணி அனைவரையும் மிகவும் ஈர்க்கக்கூடியது. நகைச்சுவையுடன்
கதை சொல்லும் போது வெவ்வேறு பாத்திரங்களில் பேசுவது அவருடைய திறமை மிகச் சிறப்பாகும்.
இளஞ் சிறுவர்களுக்குக் கதை சொல்வது போல, ஒரு வயதான பெண்ணைப் போல நடிப்பதில், சிறுவனைப் போல ஓடுவதில், குரங்கைப் போல குதிப்பதில், யானையைப் போல குதிப்பதில், முயல் போல குதிப்பதில், மான் போல சீறுவதைப் போல, பாம்பைப் போல உறுமுவதில் மாஸ்டர் சிவலிங்கம்
சிறந்து விளங்கினார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்
சிறுவர் நிகழ்ச்சியில் வானொலி மாமா நிகழ்ச்சி நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டது. அக்காலத்தில்
இன்றைய புதிய வானொலிகள் எதுவும் இல்லை. அக்காலங்களில் நானும் சிறுவனாக வானொலி மாமாவில் ஒளிபரப்பாகும் கவிதைகள், கதைகள் மற்றும் நாடகங்களைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன். அதை விட எனக்கு திருப்தியாக இருப்பது மாஸ்ரர் சிவலிங்கத்தின் கதை சொல்லும் பாணி தான் அனைவரையும் கவரச் செய்யும்.
மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இலங்கை முழுவதும் ரசிகர்கள் இருந்தனர்.
உயரதிகாரிகள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அவரது ரசிகர்கள் பலர். அது மட்டுமின்றி தாத்தா, குழந்தை, பேரன் என மூன்று தலைமுறைகளை சேர்ந்தவர்கள்
சிவலிங்கத்தின் கதை சொல்லும் பாணியால் அனைவராலும் மிக்க் கவரப்பட்டார்.
இலங்கை, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வானொலி, தொலைக்காட்சிகளில் 50 வருடக் கதைசொல்லல் அனுபவமும்; சிறுவர் எழுத்தாளர் 144 மேடைகள் கண்ட மிகச் சிறந்த வில்லுப் பாட்டுக் கலைஞர்; நகைச்சுவைப் பேச்சாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், சிறந்த நடிகர், ஓவியர், பத்திரிகையாளர், எனப் பல்வேறு திறன்களைப் பெற்றவர் மறைந்த மாஸ்டர் சிவலிங்கம்.
கிருபானந்தவாரியார் அவர்களினால் “அருட்கலைத்திலகம்” எனவும், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களால் “நகைச்சுவைக்குமரன்” எனவும் பண்டிதர் வீ.சி.கந்தையா அவர்களால் “வில்லிசைச்செல்வன்” எனவும, அமைச்சர் செ.இராசதுரை அவர்களால் “வில்லிசைச்செல்வர்” எனவும் காத்தான்குடிப் பொதுமக்களால் “கனித்தமிழ்க் கதைஞன்” எனவும் மட்டக்களப்பு இந்து சயம அபிவிருத்திச் சங்கத்தினால்; “கலைக்குரிசில்” எனவும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தினால் “சிறுவர் இலக்கியச் செம்மல்” எனவும் புகழாரம் பெற்றவர்.
இங்கிலாந்தில் இயங்கும் BUDS  எனும் அமைப்பினால் பொன்முடிச்சுக் கொடுத்து “கலைமாமணி” எனவும் கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் “இலக்கிய முதுமாணி” எனவும் பற்பல பட்டங்கள் பெற்றவரும், 1984 – 1991 ஆம் ஆண்டுகளில் சிறுவர் இலக்கியத்துக்கான வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு, மற்றும் 2013 இல் “அன்பு தந்த பரிசு” எனும் சிறுவர் படைப்புக்காக மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் “தமிழியல் விருது”, இலங்கை அரசின் உயர்விருதுகளில் ஒன்றான ‘கலாபூசணம்” விருது என்பவற்றைத் தனதாக்கிக் கொண்டவரே மறைந்த மாஸ்டர் சிவலிங்கம்.
ஈழத்தின் தலை சிறந்த சிறுவர் இலக்கிய முன்னோடியான வானொலிமாமா என அன்பாக அழைக்கப்படும் மாஸ்டர் சிவலிங்கம்
அவர்களின்  இலக்கியப் பங்களிப்பு
மிக காத்திரமானதும் வரலாற்றின் பக்கங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
அத்துடன் வானொலி மாமா மாஸ்டர் சிவலிங்கம் பயங்கர இரவு, அன்பு தந்த பரிசு, உறைபனித் தாத்தா, சிறுவர் கதை மலர் ஆகிய நூல்களையும் ஈழத்தின் சிறுவர் இலக்கியத்திற்காக எழுதியுள்ளார்.
  • ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.