இலக்கியச்சோலை

புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த முதல் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன்!

சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.

சர்வதேச புக்கர் பரிசு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரிட்டனிலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்படும் சிறுகதைத் தொகுப்பிற்கோ, நாவலுக்கோ வழங்கப்படுகிறது. பரிசைப் பெறும் நாவலுக்கு விருதுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படும். அதை கதாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அந்தப் பரிசுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நாவல்களின் பட்டியல் வெளியிடப்படும். அது Longlist என அழைக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவதே, மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.

2023ஆம் ஆண்டின் சர்வதேச புக்கர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 11 மொழிகளில் எழுதப்பட்ட 13 நாவல்கள் இந்த முறை அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழில் எழுதப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட Pyre, சீன மொழியில் எழுதி மொழிபெயர்க்கப்பட்ட Ninth Building, ஸ்வீடிஷ் நாவலான A System So Magnificent It Is Blinding உள்ளிட்ட நாவல்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழ், பல்கேரியா, கேடலான் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புனைவுகள் இந்த பரிசீலனைப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல்முறை.

பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ நாவல் கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த ஒரு நாவல். காலச்சுவடு இதனை நூலாக வெளியிட்டது.

தனது கிராமத்தைவிட்டு வெளியேறி வேலைபார்க்கும் இளைஞனான குமரேசன், தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் வசிக்கும் சரோஜாவைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிறான். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். சரோஜா பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்.

ஒரு கட்டத்தில் தன் சொந்த ஊருக்கு குமரேசன் சரோஜாவை அழைத்து வருகிறான். கடுமையான ஏழ்மையில் வாழ்ந்தாலும் ஜாதிப் பெருமிதத்துடன் வாழும் குமரேசனின் தாயார், இந்தத் திருமணத்தை ஏற்கவில்லை. தன் தாயிடமும் ஊராரிடமும் தனது மனைவியின் ஜாதியைச் சொல்லாமல் தொடர்ந்து மறைத்து வருகிறான் குமரேசன். ஒரு தருணத்தில் சரோஜாவின் ஜாதி தங்களைவிட சமூகப் படிநிலையில் கீழே உள்ள ஜாதி எனத் தெரிந்துவிட, ஊரே அவளைக் கொல்ல முயல்கிறது. பிறகு சரோஜாவும் குமரேசனும் என்ன ஆனார்கள் என்பதே இந்த நாவலின் மீதிக் கதை.

“ஆணவக் கொலைகளில் பல கோணங்கள் உண்டு. ஆண் – பெண் ஆகிய இருவரில் யார் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எதுவும் நடக்கலாம். கடைசியில் அந்தப் பெண் என்ன ஆனாள் என்பதைத் தெளிவில்லாமல், நம்பிக்கையூட்டும்விதமாக முடித்திருப்பேன். நான் இந்த நாவலைக் கல்கியில் தொடராக எழுதிக்கொண்டிருந்தபோதுதான் தருமபுரியில் இளவரசனின் மரணம் நிகழ்ந்தது. ஆகவே, இந்த நாவல் புத்தகமாகும்போது, அதை இளவரசனுக்கே சமர்ப்பித்தேன்” என பிபிசி தமிழிடம் கூறினார் பெருமாள் முருகன்.

தமிழில் எழுதப்பட்ட நாவல் இந்தப் பட்டியலில் இடம்பெறுவது தமிழுக்கே மிக முக்கியமான விஷயம் என்கிறார் அவர். “நம் படைப்புகளை ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் கொண்டு செல்லும்போது மட்டும்தான் இப்படியான அங்கீகாரம் கிடைக்கும்.

அந்த அளவுக்கு தகுதியும் தரமும் நம்மிடம் உள்ளது. ஆனால், அப்படிக் கொண்டுசெல்வதில் நம்மிடம் பெரும் சுணக்கம் இருக்கிறது. அதைக் கடந்து கொண்டுசென்றால் இம்மாதிரியான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்” என்கிறார் பெருமாள் முருகன்.

பூக்குழி’ நாவலை அனிருத் வாசுதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, முதலில் பென்குயின் வெளியிட்டது. பிரிட்டனில் இதனை புஷ்கின் பிரஸ் வெளியிட்டது.

இந்த நாவலை, பிற மொழிகளுக்குக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் ‘பூக்குழி’ நாவலை தமிழில் வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளரான கண்ணன்.

“எந்த ஒரு படைப்பும் இந்தியாவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரசுரமானாலும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லை. அந்தப் படைப்பு பிரிட்டனிலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்பட வேண்டும். ஆகவே, இது தனியாக நடக்காது. புரொஃபஷனல்கள் இந்த முயற்சியில் இணைய வேண்டும். பதிப்புரிமைகள் சரியான முறையில் விற்கப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான் இதுபோன்ற பரிசுப் பட்டியலில் இடம்பெற முடியும்” என்கிறார் கண்ணன்.

2022ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியிலிருந்து 2023 ஏப்ரல் 30ஆம் தேதி வரை வெளியான 134 புத்தகங்களில் இருந்து இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து 6 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு (Shortlist) ஏப்ரல் 18ஆம் தேதி லண்டன் புத்தகக் கண்காட்சியில் அறிவிக்கப்படும்.

மே 23ஆம் தேதி லண்டனில் நடக்கும் விழாவில் தி இன்டர்நேஷனல் புக்கர் பரிசைப் பெறும் புத்தகம் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ எழுதி, டெய்சி ராக்வெல் மொழிபெயர்த்த Tomb of Sand நாவலுக்கு இந்தப் பரிசு கிடைத்தது. இந்தியில் எழுதப்பட்ட நாவல் ஒன்றுக்கு இந்தப் பரிசு கிடைத்தது, அதுவே முதல் முறை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.