கணினி தொழில் நுட்பத்தை புறக்கணித்து, கையால் எழுதிவரும் சிங்கப்பூர் படைப்பாளி இராம. கண்ணபிரான்!…. முருகபூபதி.
முதல் சந்திப்பு ….
சிங்கப்பூர் படைப்பாளி இராம. கண்ணபிரான்,
முருகபூபதி.
பெரும்பாலான எழுத்தாளர்கள் நவீன கணினி தொழில் நுட்பத்தையே பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். ஆனால், அந்தப்பக்கமே செல்லாமல், மின்னஞ்சல் பாவனையும் இல்லாமல், தொடர்ந்தும் கையால் எழுதி, தபாலில் அனுப்பிக்கொண்டிருக்கும் எண்பது வயதை நெருங்கும் ஒரு படைப்பாளியை இந்தப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்!
உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளும் இல்லை. தமிழர்க்கென்று தனியாக ஒரு நாடும் இல்லையென தமிழ்த்தேசியவாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு.
அவ்வாறு சொல்வதற்கு முக்கிய காரணமே, கல் தோன்றி, மண்தோன்றாக் காலத்துக்கு முந்திய இனமே தமிழ் இனம் என்ற வாய்ப்பாடுதான்.
சமகாலத்தில் உலகெங்கும் மனிதர்கள் அகதிகளாக தங்களுக்கென ஒரு வாழ்விடம் தேடி ஓடிக்கொண்டிருக்கையில், தமிழர்களுக்காக மாத்திரம் ஒரு நாடு வேண்டுமா..? என்றும் யோசிக்கத் தூண்டுகிறது.
இந்தப்பதிவில் வரும் இராம. கண்ணபிரான் தனது பத்து வயது பராயத்தில் தமிழ்நாட்டிலிருந்து கப்பல் மார்க்கமாக சிங்கப்பூர் வந்தவர். அங்கேயே ஆரம்பக்கல்வியை கற்று, தமிழ் ஆசிரியராகி, சிங்கப்பூர் எழுத்தாளர் என்ற பெருமையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
நான் எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல், இலங்கையில் எங்கு சென்றாலும், முதலில் தேடிச்செல்வது கலை, இலக்கியவாதிகளைத்தான்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம்பெற்ற பின்னர், உலகின் எப்பாகம் சென்றாலும், தேடிச்செல்வதும் இவர்களைத்தான்.
1990 ஆம் ஆண்டு முதல் தடவையாக சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கிருந்த குடும்ப நண்பர் கட்டிடப் பொறியியலாளர் கலாநிதி சற்குணராஜாவின் வீட்டில் சில நாட்கள் நின்றேன். அவரது மனைவி பத்மினி கலை, இலக்கிய ஆர்வலர். கவியரசு கண்ணதாசனின் குடும்ப சிநேகிதி. இவரது சமையற்கலை சம்பந்தமான ஒரு நூலை கண்ணதாசன் பதிப்பகம் முன்னர் வெளியிட்டுள்ளது.
இந்த பத்மினியின் தங்கை மாலதியை நான் மணம் முடித்தது மற்றும் ஒரு எதிர்பாராத கதை!
குறிப்பிட்ட 1990 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் திருமதி பத்மினி சற்குணராஜாவிடம், சிங்கப்பூரில் வதியும் எழுத்தாளர்களை சந்திக்க விரும்புகின்றேன் எனச்சொன்னேன். இங்கே பலர் இருக்கிறார்கள். அவர்களில் நமக்கு நன்கு தெரிந்தவர்தான் கண்ணபிரான். அவரைச்சந்திக்க ஏற்பாடு செய்கின்றேன் எனச்சொல்லிவிட்டு, குறிப்பிட்ட அன்பரை வீட்டுக்கு அழைத்தார்.
அன்று முதல் முதலில் நான் சந்தித்த சிங்கப்பூர் எழுத்தாளர்தான் திரு. இராம. கண்ணபிரானும் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் இணைந்துகொண்டார். சிங்கப்பூர் செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இவரைச் சந்திப்பது வழக்கமாகிவிட்டது.
சிங்கப்பூர் பொது நூலகம், கடற்கரைச்சாலை இலக்கிய சந்திப்பு முதலானவற்றுக்கெல்லாம் என்னை அழைத்துச்செல்லும், இராம . கண்ணபிரான், பல இலக்கியவாதிகளையும் எனக்கு அங்கே அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து மட்டுமன்றி ஏனைய நாடுகளிலிருந்தும் சிங்கப்பூருக்கு வருகை தரும் படைப்பிலக்கியவாதிகளை முன்னின்று அழைத்து, கொண்டாடும் பண்பினையும் இயல்பிலேயே தன்னகத்தில் வைத்திருப்பவர்.
சுவாரசியம் குன்றாமல் உரையாடும் இயல்பினைக்கொண்டவர். சிங்கப்பூரைப்பற்றியும் அங்கு வாழும் தமிழ் மக்கள், கலை, இலக்கியவாதிகள், ஊடகங்கள், தமிழ்ப்பாடசாலைகள், முதலான சகல தகவல்களையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டு பேசுவார். கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
இவரது பூர்வீகம் தமிழ் நாட்டில் தஞ்சாவூர். 1943 ஆம் ஆண்டு அங்கே பிறந்திருக்கும் கண்ணபிரான், தமது பத்து வயது பராயத்தில் தந்தையாருடன் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கப்பலில் பயணித்து சிங்கப்பூருக்கு வந்தவர். அப்பொழுது சிங்கப்பூரில்
இலங்கை – இந்தியத் தமிழர்கள் சுமார் 75 ஆயிரம் பேர்தான் இருந்தார்கள்.
அங்கே லிட்டில் இந்தியா எனப்படும் பிரதேசத்தில் தந்தையார் நடத்திக்கொண்டிருந்த புடவைக்கடையில் தங்கியிருந்தே படித்திருக்கிறார். பாடசாலை ஆசிரியரானார். தாயகம் சென்று மணம் முடித்து திரும்பிய பின்னர் குடும்பத்துடன் தொடர்ந்தும் சிங்கப்பூர் வாசியாகிவிட்டார்.
சிங்கப்பூர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர் கூட்டுறவுச் சங்கம், தமிழ் எழுத்தாளர் கழகம் முதலானவற்றில் ஆரம்ப கால உறுப்பினர்.
1990 ஆம் ஆண்டு அந்த முதல்சந்திப்பில் கண்ணபிரான், தான் எழுதி தமிழ்நாட்டில் வெளியான இருபத்தியைந்து ஆண்டுகள், உமாவுக்காக, சோழன் பொம்மை ஆகிய கதைத்தொகுதிகளை எனக்குத்தந்தார். அவை அனைத்தும் தமிழ்நாடு தமிழ்ப்புத்தகாலயத்தின் வெளியீடுகள்.
அக்காலப்பகுதியில் அதே தமிழ்ப்புத்தகாலயத்தின் வெளியீடாக வந்திருந்த எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியை அவருக்கு கொடுத்தேன்.
இவ்வாறு எம்மை நெருங்கச்செய்தமைக்கு இலக்கியம் மட்டுமன்றி தமிழ்ப்புத்தகாலயமும் ஒரு காரணம்தான்.
சிங்கப்பூர் தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றம், அமெரிக்கா அயோவா பல்கலைக்கழகம், தாய்லாந்தில் தென்கிழக்காசிய எழுத்தாளர் அமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியனவற்றின் விருதுகள் உட்பட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர் இராம. கண்ணபிரான்.
மலேசியா எழுத்தாளர் நவீனன், தமது வல்லினம் இதழின் வாசகர் வட்டத்தின் சார்பில் இவர் பற்றிய ஒரு ஆவணப்படமும் தயாரித்துள்ளார்.
எங்கோ பிறந்து, எங்கோ வாழ நேரிட்டு, சுயமாகவே படைப்பிலக்கியவாதியாகி, பல நூல்களையும் வரவாக்கி, இலக்கிய விருதுகளையும் பெற்று, தான் வாழும் சுற்றுச்சூழலில் நிகழ்ந்த கலை, இலக்கிய மாற்றங்களையும் அவதானித்து, மனதிற்குள் அவற்றை ஆவணப்படுத்தி, மிகத்தெளிவாக வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர் கண்ணபிரான்.
இளமைப் பருவத்தில் சுமார் பத்தாண்டுகாலம், இவரது தந்தையார் இராமசாமி, தனது வியாபார நிலையத்தில் அங்கு பணியாற்றிய
ஊழியர்களின் பொறுப்பில் இவரை விட்டுவிட்டு, தமிழகம் திரும்பியிருக்கிறார்.
வதிவிடத்தில் கிடைத்த தனிமையில் நிறைய வாசித்து வாசிப்பு அனுபவத்தை பெருக்கிக்கொண்டவர், இலக்கியப் பிரதிகளையும் எழுதி, சிங்கப்பூர் தமிழ் வானொலிக்கும் தமிழ் முரசு பத்திரிகைக்கும் அனுப்பினார். அந்த ஊடகங்கள் இவருக்கு சிறந்த களம் வழங்கின.
சிங்கப்பூர் தமிழர்களின் வரலாற்றையும், தமிழ்க்கல்வி, கலை, இலக்கிய , ஊடகத்துறை பற்றியும் எழுதினால், இராம . கண்ணபிரானை தவிர்த்துவிட முடியாதளவுக்கு தனது நற்பண்புகளினாலும், ஆளுமையினாலும் ஆழமாக தடம் பதித்திருப்பவர்.
டெல்லியிலும் ஹைதராபாத்திலும் நடைபெற்ற எழுத்தாளர் விழாக்களில் பங்கேற்றிருக்கும் இவர், சிங்கப்பூரில் இயங்கும் அரச சார்பு கலை, இலக்கிய, சமூக அமைப்புகளின் ஆலோசகராகவும் விளங்குகிறார்.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் ( அமரர் ) லீ குவான் யூ அவர்களை இரண்டு தடவைகள் சந்தித்துபபேசியிருக்கும் கண்ணபிரான், அவரிடம் தான் ஒரு எழுத்தாளன் எனச்சொன்னதும், அப்படியா…? என்று கேட்டு அவர் தன்னை திகைப்பில் ஆழ்த்திவிட்டதாக ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.
சிங்கப்பூருக்கு வெளியே இருப்பவர்கள், அங்கே முழுமையான பேச்சு, எழுத்துச் சுதந்திரம் இருக்கிறதா..? என்ற பொதுவான கேள்வியைத்தான் கேட்பார்கள். தனது பள்ளிப்பருவம் முதல் தொடர்ந்தும் எழுதியும் பேசியும் வரும் எழுத்தாளர் இராம . கண்ணபிரான், அந்த நாட்டுக்குள் பிரவேசித்த போது அது மூன்றாம் உலக நாடுகளின் வரிசையில்தான் இருந்தது. ஆனால், தற்போது இதர மூன்றாம் உலக நாடுகள் விழியுயர்த்திப்பார்க்கும் வகையில் சிங்கப்பூர் முன்னேறியிருக்கிறது என்பதை தனது மௌனப்புன்னகையினால் சொல்பவர் இராம. கண்ணபிரான்.
எண்பது வயதை பூர்த்திசெய்யவிருக்கும் இந்த எழுத்தூழியருக்கு எமது வாழ்த்துக்கள்.
கண்ணபிரான் பற்றி நான் இப்படியொரு பதிவை எழுதினாலும், இது ஏதேனும் அச்சு ஊடகத்தில் வெளியாகி, அதன் பிரதியை இவருக்கு தபாலில் அனுப்பினால்தான் பார்க்கும் வாய்ப்பினையும் பெறுவார்.
இவரிடம் மின்னஞ்சல் இல்லை. வாட்ஸ் அப் இல்லை. முகநூல் கணக்கும் இல்லை. இணையத்தில் எதனையும் பார்க்கவும்மாட்டார்.
கேட்க அதிசயமாக இருக்கிறதா..? ஆம், அதுதான் உண்மை.
அய்யா முருகபூபதி, வணக்கம்! சிங்கப்பூரின் மிகச் சிறந்த படைப்பாளராகிய என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நண்பர் திரு கண்ணபிரான் பற்றிய தங்கள் எழுத்துக்களைப் படித்தேன்.
ஏற்கனவே தெரிந்த செய்திகளானாலும், கடல் கடந்த ஓர் எழுத்தாளரின் புதிய கோணத்திலான பார்வையைப் படிக்கப் படிக்கப் பெருமையாகவும், மகிழ்வாகவும் இருந்தது. தங்கள் வாசகத்தின் உண்மைத்தன்மை என்னை வெகுவாகக் கவர்ந்தது.
என்னைவிட சில மாதங்கள் இளையவராக இருந்தாலும் என்னைவிட பேரும் புகழும் தகுதியும் பெற்ற நாயகரைப் பொறாமையாகப் பார்ப்பதுண்டு. (ஆரோக்கியமாக)
திரு கண்ணபிரான் தொடக்கத்தில் ஆங்கில ஆசிரியாராகி, பின்னர் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றியவர் என்பாதக எனது நினைவு.
வாழ்த்துக்கள்!
திரு கண்ணபிரான் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக நலம் பாதிக்கப்பட்டு வெளிப்புழக்கம் தடைபட்டது எங்களைப்போன்ற சிங்கப்பூர் இலக்கிய வாதிகளுக்கு பேரிழப்பாகும். இந்த இயலாத நிலையிலும் அவருடைய தொடர் வாசிப்பையும், பதில் எழுதுவதையும் கண்ணுறுங்கால் சற்று ஆறுதலாக உள்ளது. இருந்தாலும் அவர் பூரண நலம் பெற மனமார வேண்டி நிற்கிறேன்