பெண்விடுதலை! …. திருமதி.பாமா இதயகுமார் …. ( கனடா )
ஒரு உலகம் எவ்வளவு தான் மறுமலர்ச்சி அடைந்து இருந்தாலும், முன்னேறி இருந்தாலும் இன்னும் ஆண்கள் மத்தியில் பெண்களுக்கான அங்கீகரிப்பு என்பது பரிபூரணமாக இல்லை என்பதே உண்மை. அது வார்த்தைகள் மூலமும் மேடைகளிலும் வேண்டுமானால் மறுதலிக்கலாம். ஆனால் உணர்வு ரீதியாக சொன்னால் அது உண்மையில்லை.
அடுத்து பெண்களின் கலை சார்ந்த பங்களிப்பு பெரிதாக கண்டு கொள்ள படுவது இல்லை, இதில் எவ்வளவு திறமை இருந்தாலும் பெண்களுக்கு பின்னடைவு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன. மீடியா, சினிமா துறையை பொருத்தவரை Couch casting , அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும், அவற்றை தாண்டி வெற்றி அடைந்தவர்களும் உண்டு. இப்படி எந்த துறை எடுத்து கொண்டாலும் பெண்கள் என்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ நெருக்கடிகள் உண்டு.
இன்று சோசியல் மீடியாவை எடுத்து கொண்டால் முகநூல், இன்ஸ்ட்ரா இங்கேயும் உள்பெட்டியில் முகம் தெரியாத நபர்களால் இடைஞ்சல் செய்யும் கூட்டம் , இவற்றை எல்லாம் கடந்து போக கற்றுக் கொண்டாலும், எம் கூடவே இருந்து நையாண்டி செய்யும் ஆண்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களை நாம் கண்டு கொள்ள இல்லை என்றால் கூட , உலகின் எந்த மூலைக்கு போனாலும் மனதளவில் பின்தங்கி இருக்கும் இந்த மனப்பாங்கு மாறாமல் இருப்பது அவர்களின் வளர்ச்சி அடையாத தன்மையை காட்டுகிறது.
நான் அப்படி ஒன்றும் பெரிதாக எழுதி கிழிப்பது இல்லை என்றாலும், எழுத வேண்டும் என்ற உந்துதலை , உணர்வை எனக்கு தெரியாத வயதில் தோன்றியது போது அதை உற்சாகம் கொடுத்து ஊக்குவித்து எழுத வைக்கும் ஒரு சூழல் இருந்ததில்லை. ஆனாலும் என் பெற்றோர் அதை எதிர்க்கவில்லை என்பதை தவிர. எம்மை வளர்த்து விடுவதில் உண்மையான அக்கறை எங்கள்
இலங்கை வானொலிக்கே இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
இத்தனை வருடமாக என்னுடைய எந்தெந்த பதிவையோ எழுத்தையோ என் கணவரிடம் காட்டி அப்பிராயமோ , கருத்தோ கேட்டதில்லை, சில நேரம் அவர் வாசித்து இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், என் உடன் பிறப்புகள் யாரும் அறிந்தது இல்லை நான் என்ன எழுதுகிறேன் ஏது எழுதுகிறேன் என்று , ஆனால் இந்த எல்லோரையும் தாண்டி மீறல்கள் தான் எங்களை இங்கே நிற்க வைக்கிறது என்றால் மற்றவர்கள் நையாண்டிகள், ஏளனங்கள் என்ன செய்யும் , கண்டுகொள்ளாமல் போகும் தைரியத்தை நாங்கள் வளர்த்துக் கொண்டதால் தான் நாம் இங்கே இத்தனை வருடம் இருக்க முடிகிறது.
நிறைய பெண்கள் தோன்றுவதை அப்படியே எழுத பயப்படுவது இந்த முகம் தெரியாத மனிதருக்கும், முகம் தெரிந்த குள்ள நரி கூட்டத்துக்கும் , அவர்கள் கேட்கும், கொடுக்கும் மறைமுக டார்ச்சர் எப்படி முகம் கொடுப்பது என்று தெரியாமல் தான், நான் எப்போதும் நினைப்பது இந்த கோழைத்தனமான , மறைந்திருந்து தாக்கும் இவர்களுக்கு இவ்வளவு தைரியம் இருக்கும் போது இது நான் தான் என்று எங்களை அடையாள படுத்துவதில் அடுத்தவர் நையாண்டி என்ன செய்து விட முடியும்.