இலக்கியச்சோலை

முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய பெண் நூறு – பெண் எனும் நான் நூல்கள் சொல்லும் செய்திகள்!… முருகபூபதி.

மார்ச் 08 : அனைத்துலக பெண்கள் தினம் !

படித்தோம் சொல்கின்றோம்:…. முருகபூபதி.

“ வாழ்க்கை சவால்களால் நிறைந்துள்ளது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள், சில நேரங்களில் வலி நிரம்பியவையாக உள்ளன. சிலநேரம் அப்பாடங்கள் நாம் வளர வாய்ப்பளிக்கின்றன.

அவை சவால்கள் போலத் தோன்றினாலும்கூட, அவை சாதனையாக மாற வல்லவை என்பதை மறுப்பதற்கில்லை. வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை.

என்னால் செய்யமுடியும் என்று முன்வராமல், யாராவது நம்மைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பைத் தட்டில் வைத்து தருவார்கள் என எதிர்பார்ப்பதும் வாய்ப்புகள் வரும்போது, நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதும் முட்டாள்தனம் “

மேற்சொன்ன வரிகளுடன் தொடங்குகிறது, முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன் எழுதியிருக்கும் பெண் நூறு என்ற நூல்.

ஒரு பெண்ணாக, பெண்களுக்கென்றே சந்திரிக்கா இதனை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இக்கருத்து ஆண்களுக்கும் பொருந்தும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இதே மார்ச் மாதம், இதே 08 ஆம் திகதி ஒரு மேல் நிலைப்பள்ளியில் பெண்கள் தினத்துக்காக சந்திரிக்கா பேச அழைக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு பெண்ணாக தான் சந்தித்த அனுபவங்களை அன்று பேசியிருக்கிறார். அதற்கு சிறந்த வரவேற்பு கிட்டியிருக்கிறது. அப்போதே அவரது மனதில் தோன்றிய தலைப்பு: Challenge the challenges.

வீடு திரும்பியதும் தனது முகநூலில் இந்தத் தலைப்பில் தொடர்ந்து வாழ்வியல் அனுபவம் சார்ந்து நூறு நாட்கள் நூறு பதிவுகளை எழுதியிருக்கிறார்.

அதற்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த 2021 ஆம் ஆண்டே அவற்றை தொகுத்து நூலுருவாக்கியிருக்கிறார்.

என்னிடம் முகநூல் கணக்கு இல்லை. அதனால், அவரது குறிப்பிட்ட இந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டவில்லை.

கடந்த 2022 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் சிட்னியில் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய இலக்கிய சந்திப்பில், தான் எழுதிய பெண் நூறு, பெண் எனும் நான் ஆகிய நூல்களுடன் மேலும் தனது சில நூல்களையும் எனக்குத் தந்தார்.

முன்பு சந்திரிக்கா சோமசுந்தரம் என ஒரு பத்திரிகையாளராகவே இவரது எழுத்து மூலம் எனக்கு அறிமுகமானவர், பின்னர் சட்டத்தரணி ( திருமதி ) சந்திரிக்கா சுப்பிரமணியனாக பல வருடங்களுக்கு முன்னர் சிட்னியில் நேருக்கு நேர் அறிமுகமானவர்.

சந்திரிக்காவும் எங்கள் வீரகேசரி குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். நான் அறிந்தவரையில் இலங்கையில் சில பத்திரிகையாளர்கள் இதழியலுக்கு அப்பால் சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதழியலில் பணியாற்றியவாறே சட்டக் கல்லூரிக்குச்சென்று சட்டத்தரணிகளாகிய வீரகேசரி முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம், தினகரன் சிவகுருநாதன், வீரகேசரி கண. சுபாஷ் சந்திரபோஸ், வீரகேசரியில் பணியாற்ற வந்து, சட்டம் படிக்கச்சென்ற தேவன் ரங்கன் ஆகியோரை நன்கறிவேன்.

அவ்வாறே இதழியலில் இருந்து, சட்டவல்லுனராக மாறியவர்தான் சந்திரிக்கா. இது அவருடைய அயராத முயற்சியின் வெளிப்பாடு. தன்னை தேங்க வைத்துக்கொள்ளாமல், படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்ட ஆளுமைப்பண்பை கொண்டிருப்பவர்.

இலங்கையில் தமது இளமைக்காலத்தில் படித்துவிட்டு, சென்னை சென்று, ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். அத்துடன் நில்லாமல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் பொதுசன தொடர்பியல் துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றவாறு, அவுஸ்திரேலியாவுக்கு வந்து , இங்கு சிட்னி மற்றும் பிறிஸ்பேர்ணில் சட்டத்துறையில் தேறி, வழக்கறிஞரானார். உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியவாறு இலக்கிய ஆய்வுத்துறையிலும் ஈடுபடுகின்றார்.

எமது தமிழ் சமூகத்தில் ஒரு பெண், இவ்வாறு அயராமல், தொடர்பயிற்சிகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபட்டு நூல்களும் எழுதுவது அரிதான செயல். ஆனால், சந்திரிக்கா ஒரு குடும்பத்தலைவியாக, வெளி உலகில் தனது இருப்பை காத்திரமாகவும் தனித்துவமாகவும் தக்கவைத்திருப்பது ஏனையோருக்கு முன்மாதிரியானது.

பெண் நூறு என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் நூலின் முதலாவது குறிப்பிலிருந்து, இந்தப்பதிவின் தொடக்கத்தில் சந்திரிக்காவின் வார்த்தைகளில் சொல்லப்பட்ட விடயத்திலிருந்தே சந்திரிக்காவின் வளர்ச்சியை எம்மால் இனம் கண்டுகொள்ள முடிகிறது.

பெண் எனும் நான் கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது கவிதையில் இவ்வாறு சொல்கிறார்:

நான் காளியுமில்லை, சீதையுமில்லை.

நான் பெண் எனும் பெரும் அற்புதம் / சிறுமை மண்ணில் கால் புதைத்து / தடைகள் மழைத் தலை வாங்கி / எதிர்ப்பு வெள்ளம் மீறி வந்து / வீறு கொண்ட வித்து நான் / வீழ்ந்தாலும் வெளிப்படுவேன் / பயன் தரும் விருட்சமாக /

முனைவர் சந்திரிக்காவின் எழுத்துக்கள் இவ்வாறு தன்னம்பிக்கை ஊட்டுவனவாகவே வெளிப்பட்டு வருகின்றன.

நான் அறிந்தவரையில் பெரும்பாலானவர்கள், அதிலும் குறிப்பாக எழுத்தாளர்கள் சிலர் முகநூல்களில் ஆளையாள் திட்டித் தீர்த்துக்கொண்டும் அவதூறு பொழிந்துகொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

அதனால், அவர்கள் நண்பர்களை இழந்திருக்கிறார்கள். முகநூல்களினால், குடும்ப உறவுகளிடையே பிளவுகளும் தோன்றியிருக்கின்றன.

வன்முறைகளும் நடந்திருக்கின்றன.

ஆனால், இந்த இழிசெயல்களை விடுத்து, ஆக்கபூர்வமான முறையிலும் முகநூலை பயன்படுத்த முடியும், எம்மவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என எழுதிவருபவர்களில் ஒருவராக சட்டத்தரணி முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன் அவர்களை அவதானிக்க முடிகிறது.

பெண் நூறு நூலில் இடம்பெற்றுள்ள நூறு பதிவுகளும் ஊட்டச்சத்தாகவே திகழுகின்றன.

நீண்ட தூர பயணங்களை ரயில், விமானம் மூலம் மேற்கொள்பவர்கள் தங்கள் வாசிப்புத்துணைக்கு எடுத்துச் செல்ல தகுந்த நூல்தான் பெண் நூறு.

இந்த நூலை சந்திரிக்கா, தமிழ்நாட்டில் தான் கற்ற, தன்னை வளர்த்தெடுத்த செல்லம்மாள் கல்லூரிக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

அத்துடன் பெண் எனும் நான் நூலை, தனக்குள் தமிழையும் கவிதையையும் விதைத்த இக்கல்லூரியின் மேனாள் தமிழ்ப்பேராசிரியை வ. இளவரசி அவர்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார்.

கல்லூரிப் படிப்பினை முடித்துவிடும் பெரும்பாலானவர்கள், தங்கள் கல்லூரியையும் தங்கள் ஆசான்களையும் பின்னர் நினைத்துப்பார்ப்பதும் அரிது.

தங்கள் முன்னாள் கல்லூரியையும் முன்னாள் ஆசான்களையும் வாழ்நாள் பூராவும் மனதில் கொண்டாடிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர்தான் சந்திரிக்கா என்பதும் இந்நூல்களிலிருந்து தெரிகிறது.

பெண் நூறு நூலுக்கு சாதனைகள் பல புரிந்திருக்கும் திருநங்கையான நர்த்தகி பத்மஶ்ரீ முனைவர் நடராஜ் அணிந்துரை எழுதியிருக்கிறார்.

“ இந்நூலின் ஒவ்வொரு தலைப்பும் தன்னை நினைத்து தனக்காகவே எழுதப்பட்டது போல் படித்தேன் “ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண் எனும் நான் நூலுக்கு அணிந்துரையை சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பேராசிரியர் வ. ஜெயதேவனும், வாழ்த்துரையை எழுத்தாளர் முனைவர் இரவிக்குமாரும் வழங்கியுள்ளனர்.

அனைத்துலக பெண்கள் தினமான இன்று ( மார்ச் 08 ) சந்திரிக்காவின் இரண்டு நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியனுக்கு எமது வாழ்த்துக்கள். letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.