இலக்கியச்சோலை
எழுத்தின் வைத்தியர் – ஆண்டன் செக்கோவ்!… சிறுகதை வடிவத்தை உன்னத கலை வடிவமாக்கியவர் ! புனைகதை இலக்கிய உலகில் தலை சிறந்தவர்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
ஆண்டன் செக்கோவ் (Anton Pavlovich Chekhov) புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். இலக்கிய உலகில் முதன்முதலில் சிறுகதை வடிவத்தை மிகச்சிறந்த கலைவடிவமாக்கியவர் யாரென்று கேட்டால் தயங்காமல் ஆண்டன் செக்கோவ் என்றே இலக்கிய வரலாற்று ஆய்வாளர் கூறுவர்.
வெறும் தனிமனித வரலாற்று அனுபவங்களாக இருந்த நாவல் வடிவத்தை மனிதநேயமும் கருணையும் தத்துவ விவாதங்களும் கொண்ட பெரும் படைப்புக்களாக ஆக்கியதில் ஆண்டன் செக்கோவின் படைப்பாற்றல் அளவிட முடியாதது.
எழுத்தும் வைத்தியமும் ஆண்டன் செக்கோவின் கற்ற தொழிலாக இருப்பினும், எழுத்திற்காகவே தன் வாழ்வை மெய்ப்பித்தவர். நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.
நவீனச் சிறுகதைக்கான பாதையை உருவாக்கித்தந்தவரும் ஆண்டன் செக்கோவே. நூற்றாண்டுகள் கடந்தும் கதை வடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு, நுட்பம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும் செகாவின் அழுத்தமான முத்திரை இன்றும் மெருகிழக்காமல் இருப்பதே அவரது மேதமைக்குச் சான்று. தமிழில் இதுவரை வெளிவராத இக்கதைககள் செகாவின் புனைவுலகின் மேலும் சில ஆழங்களைத் துலக்கிக் காட்ட வல்லவை
உலக அளவில் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களின் பட்டியலில் லியோ தோல்ஸ்தோய்க்கும், தஸ்தாயேவ்ஸ்கிக்கும் அடுத்திருப்பவர் ஆண்டன் செக்கோவ். முந்தைய இருவரும் நாவல்களில் செய்திருக்கும் சாதனைக்கு நிகராக செக்கோவ் சிறுகதைகளில் நிகழ்த்தியிருக்கிறார்.
பாரதிக்கு முன்னோடியான ஆண்டன் செக்கோவ் :
தமிழின் முதல் சிறுகதை ‘ஆறில் ஒரு பங்கு’ சுப்ரமணிய பாரதியாரால் 1913ம் ஆண்டு எழுதப்பட்டது. ரஸ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழித்தே தமிழில் தமிழ்ச் சிறுகதை பிறந்துள்ளது.
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் தொடங்கி இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் வரைக்கும் அவரது கதைகளை முன்பு மொழி பெயர்த்திருக்கிறார்கள். ஏன், இன்றும் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார்.
மருத்துவ கல்வி பயின்ற செக்கோவ் :
ஜனவரி 29, 1860ல் ரஷ்யாவிலுள்ள அஸோவ் கடற்கரையோர தகரோங் எனும் இடத்தில் (Taganrog)பிறந்த ஆண்டன் பாவ்லோவிச் செக்கோவ், மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியும் கொண்ட பெரிய குடும்பம். அவருடைய பெற்றோர்கள் எளிமையானவர்கள், அவ்வளவாய் படிப்பறிவு கிடையாது.
பாடசாலைக் கல்வியை 1879ல் முடித்ததும் மாஸ்கோவில்
மருத்துவம் பயிலத் தொடங்கினார்.
குடும்பத்துக்கு உதவவும் தன் கல்விச் செலவுக்காகவும் பிரபல பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகளையும் சிறிய கதைகளையும் புனைப்பெயர்களில் எழுதத் தொடங்கினார் செக்கோவ்.
1884ம் ஆண்டு மருத்துவக் கல்வியை முடித்த அவர், இறுதிவரை தொழில்முறை மருத்துவராகப் பணியாற்றவில்லை. ஆனால், தான் கற்ற மருத்துவத்தின்மேல் பெரும் மரியாதை கொண்டிருந்தார். பிற அறிவுத்துறைகளைக் கற்பதற்கும் அறிவியல்பூர்வமான தன் அணுகுமுறைக்கும் மருத்துவக் கல்வியே காரணம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
மெலிகோவாவில் இருந்த நாட்களில் எண்ணற்ற மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இலவச மருத்துவம் செகாவ் அளித்தார்.
நவீனத்துவத்தை நாடகங்களில் தொடங்கி வைத்ததில் செக்கோவ்
முக்கியமானவராக குறிப்பிடப்படுகின்றார். அதேவேளை
செக்கோவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே, மருத்துவர் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். “மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி” என்றும், இலக்கியம் எனது துணைவி என்றும் கூறியுள்ளார்.
நாடக ஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செரிப் பழத்தோட்டம் ஆகிய பிரமிக்கத்தக்க செவ்வியல் நாடகங்களும், இவரது சிறந்த சிறுகதைகளும் இவரைப் பூமியில் என்றும் நிலைத்திருக்க வைப்பவை.
ஆரம்பகால எழுத்தும் முதல் சிறுகதை தொகுப்பும் :
ஆண்டன் செக்கோவ் தனது ஆரம்பகாலத்தில் கல்விக்காகவும் அன்றாடத் தேவைகளுக்காகவும் பிரபல பத்திரிகைகளில் சுவாரஸ்யமான வாழ்வியல் சம்பவங்கள், விநோதமான மனிதர்கள் என்பதுபோல நிறைய எழுதினார்.
1880 முதல் 1887 வரையிலான இந்த முதல் காலகட்டத்தில் எழுதப்பட்டவை அத்தனை முக்கியமற்றவை.
அவற்றில் பெரும்பாலானவை நகைச்சுவை உணர்வு ததும்புபவை.
ஆயினும் அவற்றில் சுருக்கமான தொடக்கம், நுட்பமான விவரணைகளின் வழியாக கதாபாத்திரத்தைச் செறிவுடன் வார்ப்பது, மனமோதல்கள், எதிர்பாராத முடிவு போன்ற செகாவின் தனித்துவமான அடையாளங்கள் பலவும் இடம்பெற்றிருந்தன.
1884ம் ஆண்டு வெளியான செக்கோவின் முதல் சிறுகதைத் தொகுப்பான “Tales of Melpomene”வில் இடம்பெற்றிருந்த கதைகள் பலவற்றிலும் இத்தன்மைகளைக் காணலாம்.
‘குறும்புக்காரச் சிறுவன்’, ‘ஒரு எழுத்தரின் மரணம்’, ‘மெலிந்தவனும் பருத்தவனும்’, ‘பச்சோந்தி’, ‘வேட்டைக்காரன்’ ஆகியவை இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை. 235 கதைகள் இந்தச் சமயத்தில் எழுதப்பட்டவை என்று கூறப்படுகிறது.
வாழ்வின் அழகியல் உணர்வின் வெளிப்பாடு:
1888 முதல் 1893 வரையிலான காலகட்டத்தில் ஒழுக்கம், தீமையை எதிர்ப்பது, நற்பண்புகள் ஆகியவற்றை முன்வைத்த தல்ஸ்தோயின் ஒழுக்கம் சார்ந்த கொள்கையினால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டிருந்தார் செக்கோவ்.
வெறுப்பு, அற்பத்தனம், மரணம் ஆகியவற்றுக்கு மாறான வாழ்வின் அழகையும் உணர்வு நிலையையும் அணுகிப் பார்க்கும் விதத்தில் கதைகளை எழுதிப் பார்த்தார்.
1890ம் ஆண்டு கிழக்கு சைபீரியாவில் சகலின் என்ற இடத்திலிருந்த வதைமுகாமைச் சென்று பார்த்த பின்பு மனித வாழ்வின் துயரங்களை கண்டு
அவருக்குள் பாரிய உளமாற்றம் நிகழ்ந்தது. இதன்பின் ‘ஸ்டெப்பி’, ‘பந்தயம்’, ‘முதியவனின் நாட்குறிப்பிலிருந்து’ ‘குடியானவப் பெண்கள்’, ‘மனைவி’, ‘அண்டைவீட்டார்’, ‘ஆறாவது வார்டு’ ஆகிய படைப்புக்கள் இக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை ஆகும்.
1894ம் ஆண்டிலிருந்து அவரது இறுதிப் பருவத்தில்தான் மிகவும் சிக்கலான தனித்துவம்கொண்ட சிறுகதைகளையும் நாடகங்களையும் அவர் எழுதினார். ‘கருந்துறவி’, ‘ரோத்சிடின் பிடில்’, ‘கழுத்தில் அன்னா’, ‘மாடவீடு’, ‘நெல்லிக்கனிகள்’, ‘நாய்க்காரச் சீமாட்டி’, ‘பேராயர்’, ‘மணமகள்’ ஆகியவை இந்தக் காலத்தில் எழுதப்பட்ட படைப்புக்களாகும்.
44 வது வயதில் வரலாறு படைத்தவர்:
மிக இளமையாக நாற்பத்தி நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஆண்டன் செக்கோவ் 568 கதைகள் எழுதியுள்ளார். இவை பதிமூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவை தவிர அவருடைய கடிதங்களும் நாட்குறிப்புகளும் தனியாகத் தொகுக்கப்பட்டு பல மொழிகளிலும் வெளியாகி உள்ளன.
மரணத்தின் பின்னரும் வரலாற்றைப் படைத்த ஆண்டன் செக்கோவ் 1904 ஜுலை 15இல் ஜெர்மனியிலுள்ள பாதன்வெயிலரில் ஓய்வெடுக்கப் போன ஓர் அதிகாலை நேரத்தில் தன் 44 வது வயதில் இயற்கையுடன் தன் மூச்சுக்காற்றை இறுதியாக இணைத்துக் கொண்டார்.