இலக்கியச்சோலை

மெல்பேர்ன் இலக்கியச் சந்திப்பும், ஆவூரானின் சின்னான் நூல் வெளியீடும்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் “ஆவூரான் சந்திரன்” எழுதிய ‘சின்னான்’ குறுநாவல் வெளியீடு கடந்த சனிக்கிழமை மாலை (28/1/23) மெல்பேர்னில் உள்ள பேர்விக் (Berwick) மூத்த பிரஜைகள் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.
எழுத்தாளரும், வானொலி ஊடகவியலாளருமான திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல இலக்கிய ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
புலம்பெயர் இலக்கிய நூற்றாண்டு :
தமிழ் இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியத்துக்கான நூற்றாண்டாக இருபத்தியோராம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம். போர்ச் சூழலால் ஈழத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுப் பல்வேறு நாடுகளுக்குப் புகலிடம் தேடி வந்த தமிழர்கள், தாம் சென்றடைந்த நாடுகளிலெல்லாம் தமது இருப்பை நிலைநிறுத்தும் முயற்சியில் மொழி, இலக்கியம், சமயம், பண்பாடு ஆகிய மரபு வேர்களை ஆழமாகப் பதிப்பித்த முனைப்புடன் செயலாற்றுவதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது என இந்நூலின் முன்னுரையில்
மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா குறிப்பிட்டுள்ளார்.
இக்குறுநாவல் வெளியீட்டு நிகழ்வில் பாடும்மீன் சிறிஸ்கந்தராசா, கம்பன் கழக புகழ் குமாரதாசன், திரு பரமநாதன், திருமதி சகுந்தலாதேவி கணநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும்,  எழுத்தாளரும், சமூகச்
செயற்பாட்டாளருமான ஆவூரான் சந்திரனுக்கு இந்த ஆண்டு மணிவிழாக் காலம் என்றும் வாழ்த்தினர்.
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை மையமாக வைத்து சமுதாயப் பொறுப்புணர்வோடு படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அப்படியான அடித்தள மக்கள் பற்றிய சமூகச் சிந்தனையோடுதான் “சின்னான்” குறுநாவல் நடை போடுகிறது என ஆய்வுரை வழங்கியவர்களின் உரைகளில் தொனித்தது. இந்நூலின் ஆய்வுரையை கலாநிதி. வர்ஜினா மருதூர்க் கனி, திரு.சாண் தினகரன், மற்றும் கேதார சர்மா ஆகியோர் வழங்கினர்.
லெமுருகபூபதி சிறப்புரை :
மூத்த எழுத்தாளர் லெ. முருகபூபதி இந்நூலாசிரியரைப் பற்றி சிறப்புரை ஆற்றினார். ஆவூரானின் முதலாவது கதைத் தொகுதியான ‘ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ நூல்  சில
வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வெளியீடாக வெளியானது. இந்நூலை கொழும்பு ஞானம் இலக்கியப் பண்ணை பதிப்பித்தது என்றும் தன் சிறப்புரையில் மூத்த எழுத்தாளர் லெ. முருகபூபதி குறிப்பிட்டார்.
மேலும் புகலிடம் தேடி வந்தவர்களில் முதல் இரு தலை முறையினர் தமிழர் என்ற அடையாளப் பேணுகையைக் காத்திரமாகவே கையிலெடுத்துக் கொண்டுள்ளனர். தமிழ் வானொலி, தொலைக் காட்சி போன்ற ஊடகங்கள், தமிழ்க் கலை இலக்கிய அமைப்புகள் தோற்றம் பெற்றன. பெருமளவிலான வார மாத இதழ்கள், சஞ்சிகைகள், வெளிவரத் தொடங்கின.
இவை யாவும் தமிழ் இலக்கியப் பரப்பில் இளம் படைப்பாளிகளுக்கும், வளரும் படைப்பாளிகளுக்கும் பல் வேறு தளங்களை அமைத்துக் கொடுக்க இலக்கிய வரலாற்றுப் பாதையில் வேறெந்தக் காலத்திலும் இல்லாதவாறு பெருந் தொகையான இலக்கியப் படைப்பாளிகள் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது என இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டது போல இந்நிகழ்வும் அதற்கு சான்றாய் அமைந்தது. இந்நூலின் ஏற்புரையை நூலாசிரியர். ஆவூரான் சந்திரன் வழங்கினார்.
நெடுந்தீவு அடித்தள மக்களின் கதை:
நாற்திசைகளிலும் ஆழ் பெருங்கடலால் சூழப்பட்டுப் பெருநிலப் பரப்பிலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட நெடுந்தீவு போன்ற சிற்றூர்களிலே அதுவும் இக்காலத்திற்போல் தொழில் நுட்ப அறிவியல் பெரிதும் வளர்ச்சியடையாத காலச் சூழலில் நடைபெற்ற கொலை போன்ற குற்றச் செயல்களுக்குக் காரணமானவர்கள் நீதிக்குமுன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படாமல் விடுபட்டுள்ள நிகழ்வின் யதார்த்த வெளிப்பாடே இந்நூலின் ஏற்புரையில் நூலாசிரியர் ஆவூரான் சந்திரன் தெரிவித்தார்.
அடித்தள மக்கள் பற்றிய சமூகச் சிந்தனையோடுதான் “சின்னான்” குறுநாவல் நடைபோடுகிறது என்றும்,
இளமைக் காலத்திலே தன் மன ஆதங்கத்தை, உறுத்தலை ஏற்படுத்திய அனுபவங்களே இக்குறுநாவலுக்கு வித்திட்டிருக்கலாம் என எண்ணுவதாக நூலாசிரியர் தெரிவித்தார்.
மேலும் இக்கதையின் காலம் முப்பதாண்டுகளுக்கு மேல் பின்னோக்கிச் செல்கிறது. சாதாரண உறவுச் சிக்கல்கள், காழ்ப்புணர்ச்சிகள், அதிகாரப் போட்டிகள் போன்றவற்றால் ஏற்படுகின்ற பிணக்குகள் கொலையில் போய் முடியுமளவுக்கு வளர்ந்து விடுவது மனித வாழ்வில் இயல்பாகிப் போய்விட்டது. இத்தகையவர்களது வாழ்க்கை இடம்பெறாத இலக்கியம் இக்காலத்தில் முழுமை பெற்ற இலக்கியங்களாக நிலைப்பதில்லை என்றும் கருதலாம்.
வளர்ச்சியடைந்த நாடுகளிற்கூட இன்றைய காலச் சூழலிலும் இவ்வாறான அவலங்கள் மிக இயல்பாகவே நடைபெறுவதை கண் முன்னே காணக்கூடியதாக இருக்கிறது என்றும், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை மையமாக வைத்து சமுதாயப் பொறுப்புணர்வோடு படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றும் நூலாசிரியர் ஆவூரான் சந்திரன் குறிப்பிட்டார்.
தமிழர் இருப்பை நிலைநிறுத்தும் நூல்கள்:
இப்போது கவிதை நூல்கள், கட்டுரை நூல்கள், ஆய்வு நூல்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் எனப் பெருமளவிலான நூல்கள் வெளியிடப்பட்டு வருவதைக் காண்கின்றோம். போர்ச் சூழலால் ஈழத்திலிருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளுக்குப் புகலிடம் தேடி வந்த தமிழர்கள், தாம் சென்றடைந்த நாடுகளிலெல்லாம் தமது இருப்பை நிலைநிறுத்தும் வெளியிடப்படுகின்ற நூல்கள் எல்லாமே இதற்கு சான்றாக அமைகின்றன.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் “ஆவூரான் சந்திரன்” எழுதிய ‘சின்னான்’ குறுநாவல் வெளியீட்டின் இறுதி நிகழ்வாக நன்றியுரையை நூலாசிரியரின் மகள் அபிதாரணி சந்திரன் சிறப்பாக உரையாற்றினார்.
பரந்தனிலும் இந்நூல் வெளியீடு:
தற்போது வெளியாகியிருக்கும்
‘சின்னான்’ குறுநாவல்  யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீட்டகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆவூரான் வாழ்ந்து, கல்விகற்ற பரந்தன் மண்ணிலும் இந்நூல் முதலில் வெளியாகியது. கடந்த வாரம் 22.01.2023 ஞாயிறு பரந்தன் குமரபுரம் தர்மம் மண்டபத்தில் நடைபெற்ற “சின்னான்” குறு நாவல் நூல் வெளியீட்டு விழாவில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறுப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.