சிறையிலிருந்த காந்தி சுத்திகரித்த கழிவறையும் சுத்தப்படுத்த முனைந்த தேசமும்!…. முருகபூபதி.
மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம்!
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்…?
எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவானார் ….? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன.
தற்காலக்குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் இந்தியாவில் பிறந்து – வாழ்ந்து – மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன.
இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி நேற்று வரையில் இந்தப் போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் விதைத்துவிட்டுச்சென்றிருப்பவருக்கு 02-10-2023 ஆம் திகதி 153 ஆவது பிறந்த தினம்.
1869 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி பிறந்த காந்தி எந்தத்தேசத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடினாரோ… அதே தேசத்தின் குடிமகன் ஒருவனால் 1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்… எனப்பாடி இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டு அந்த ஒற்றுமைக்காகவே தொடர்ந்தும் குரல்கொடுத்தமைக்காக ஒரு இந்துவான நாதுராம் கோட்சேயினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கோட்சேயின் கழுத்தில் தூக்குக்கயிறு தொங்குவதற்கு முன்னர் உனது இறுதி விருப்பம் என்ன ? – எனக்கேட்டபொழுது
பாரதத்திலிருந்து பிரிந்துபோன பாக்கிஸ்தானிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிந்து நதி என்றைக்கு மீண்டும் பாரதத்திற்குள் திரும்பி வருகிறதோ அதற்குப்பின்னர்தான் எனது அஸ்தி ( சாம்பல் ) கரைக்கப்படவேண்டும். அதுவே எனது கடைசி விருப்பம் எனச்சொல்லியிருக்கிறான்.
அதனால், அவனது அஸ்தி இன்னமும் கரைக்கப்படவில்லை என்றும் தகவல் உண்டு.
பாரதநாடு சுதந்திரம் பெற்றவேளையில் பாகிஸ்தானும் பிரிந்தது. இரத்த ஆறும் ஓடியது. இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் இந்தியா – பாகிஸ்தான் உறவு சுமுகமாகவில்லை.
இடைப்பட்ட காலத்தில் பாக்கிஸ்தானிலிருந்து பங்களாதேஷும் பிரிந்தது.
பின்னர் பஞ்சாப்பும் பிரியப்பார்த்தது. சீக்கியரின் பொற்கோயிலிலும் (Operation Blue Star) தாக்குதல் நடத்தி அதனை முறியடித்த இந்திரா காந்தி அதற்குப்பரிசாக தனது மார்பில் மகாத்மா காந்தியைப்போன்றே குண்டுகளை ஏந்தியவாறு மடிந்தார்.
காஷ்மீர் தொடர்ந்தும் கொந்தளிக்கிறது.
மகாத்மா காந்தி பிறந்த குஜராத்திலிருந்து வந்தவர்தான் இன்றைய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி. பல ஆண்டுகளுக்கு முன்னர் காந்தி பிறந்த அந்த மண்ணிலும் இரத்த ஆறு ஓடியது.
குற்றவாளியாக சித்திரிக்கப்பட்ட நரேந்தரமோடி தனது கரத்தில் இரத்தக்கறை இல்லை எனச்சொல்லிக்கொண்டு அமோக ஆதரவுடன் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார்.
குஜராத் கலவரங்களின் சூ த்திரதாரி என்ற ஒரே காரணத்திற்காக அமெரிக்காவினால் பல ஆண்டுகளுக்கு முன்னர் விசா மறுக்கப்பட்ட நரேந்திர மோடி – அதே அமெரிக்காவின் அன்றைய அதிபர் பராக் ஒபாமாவுடன் கைகுலுக்கி பேசிச்சிரித்து விட்டு நாடு திரும்பினார்.
எங்கள் மகாத்மாவே நீங்கள் மேல் உலகத்தில் இருப்பீர்களாயின் இந்த வேடிக்கைகளையும் பார்த்துக்கொண்டு உங்கள் கதர் ஆடைக்காக கைராட்டை சுழற்றுவீர்கள்.
நீங்கள் பாரதம் சுத்தமாகவேண்டும் என்பதற்காகவே எளிமையாக வாழ்ந்து காட்டியவர். சுத்தம் என்பது அரசியலில் மட்டு
மல்ல தனிப்பட்ட வாழ்விலும் தனது வாழ்விடத்திலும் பேணப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினீர்கள்.
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட வேளையில் நரேந்திர மோடி சொன்ன கருத்துக்கள்தான் எமக்கு மகாத்மா காந்தியின் தனிப்பட்ட வாழ்வையும் நினைத்துப்பார்க்கத்தூண்டுகிறது.
காந்தி பிறந்த நாளில் தமது அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் தங்கள் மலகூடங்களை தாங்களே சுத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
காந்தியும் தனது மலகூடத்தை தானே சுத்தம் செய்தவர்தான். தனது மனைவி கஸ்தூரிபாயும் அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று பணித்தார். அதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தர்க்கமும் நிகழ்ந்திருக்கிறது.
காந்தி இதுவிடயத்தில் பிடிவாதமாகவே இருந்ததாக அவர்பற்றிய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் பற்றிய படம் The Making Of The Mahatma. மனைவியை மலகூடத்தை சுத்தம் செய்யுமாறு அவர் வற்புறுத்தும் காட்சி இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
ஊருக்குத்தான் உபதேசம் பெண்ணே… ஆனால் – உனக்கில்லையடி கண்ணே… என்று காந்தி, கஸ்தூரிபாயை கொஞ்சவில்லை.
காந்தியும் சிறையில் அடைபட்டார். நாட்டுக்கு சுதந்திரம் கேட்டதற்காக மாத்திரமே அடைபட்டார். அவர் தனக்கு மின்விசிறி கேட்கவும் இல்லை. Attach Bath room உம் அவருக்கு அவசியப்படவில்லை. குளிர்சாதனமும் அவருக்கு தேவைப்படவில்லை. அங்கிருந்தும் அவர் கைராட்டை சுற்றி நூல் எடுத்தவாறு பகவத்கீதைதான் படித்தார். ரகுபதி ராகவ ராஜாராம் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
மோடி அவர்கள் காந்தியின் பிறந்த தினத்தின்பொழுது பாரத தேச மக்களிடத்தில் அவரவர் மலகூடங்களை அவரவரே சுத்தம் செய்யுங்கள் என்று கோரவில்லை. முதலில் அந்தக்கோரிக்கையை தனது அமைச்சர்கள் மட்டத்திலேயே சொல்லியிருக்கிறார்.
அமெரிக்கா சென்று திரும்பும்பொழுது பாரத நாட்டுக்கு புதிய செய்தி கொண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது அமைச்சர்கள் – அவர் சொன்ன புதிய செய்தி மலகூடங்களை சுத்தம் செய்வதாகவே இருப்பதை அறிந்து வியப்படைந்திருக்கலாம்.
தமிழ்நாட்டு அரசியலுக்கும் சுத்தம் அவசியம் தேவைப்பட்டிருக்கிறது என்ற செய்தியை அமெரிக்காவிலிருக்கும்பொழுதே நரேந்திர மோடி தெரிந்துகொண்டமையினால்தானோ தெரியவில்லை. முதலில் மனிதர்களிடமிருந்து தினமும் காலையில் நீக்கப்பட வேண்டிய கழிவு பற்றியே வெளிப்படையாகத்தெரிவித்துவிட்டு அவரவர் கழிவுகளை அவரவரே சுத்தம் செய்யவேண்டும் எனச்சொல்லிவிட்டாரோ தெரியவில்லை.
கழிவுகளில் பல விடயங்கள் அடங்குகின்றன.
சுத்தம் மலகூடத்தில் மட்டுமல்ல அரசியலிலும் நீடித்தால்தானே ஆரோக்கியமான தேசம் உருவாகும்.
பாரதப்பிரதமர் மோடி – அன்றொருநாள் காந்தி பிறந்த தின வேளையில் சொல்லியிருக்கும் வித்தியாசமான வேண்டுகோள் ஊடகங்களில் வெளியாவதற்கு முதல் ஒரு செய்தி கண்ணில் பட்டது.
அச்செய்தியின் சாராம்சம் இதுதான்:
ஐக்கிய நாடுகள் சபையினால் நவம்பர் 19 ம் தேதி ‘உலக கழிப்பறை தினம்’ என்று அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் 25 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இருந்திருந்தால் ஆண்டுதோறும் 15 இலட்சம் குழந்தைகளை இறப்பிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். இந்தியாவில் 61.5 கோடி பேர் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது நம் மக்கள் தொகையில் 50 சதவீதத்தைவிட அதிகம். நமக்கு கைப்பேசி முக்கியம். 59% இந்தியக் குடும்பங்களில் கைப்பேசி உண்டு. ஆனால் – 47% குடும்பங்களில்தான் கழிப்பறைகள் உள்ளன.
தமிழகத்தின் முக்கியமான படைப்பாளி தி.ஜானகிராமன் ( !921-1983) அவர்கள் சோவியத்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு திரும்பியபின்னர் எழுதிய கருங்கடலும் கலைக்கடலும் என்ற பயண இலக்கிய நூல் தற்பொழுது நினைவுக்கு வருகிறது.
அதில் அவர் சுவாரஸ்யமான ஒரு புனைகதையை பதிவுசெய்துள்ளார். நீண்ட காலமாக இந்தப்புனைகதை எம்மவர் மத்தியில் பேசப்படுகிறது.
அக்கதையில் அவ்வாறு உண்மையிலேயே நடந்திருக்கச்சாத்தியமில்லை. இந்தியாவின் ஒரு பக்கத்தை சித்திரிக்கும் அந்தப்புனைகதை சிரிப்பை வரவழைக்கிறது.
ஜவஹர்லால் நேரு இந்தியப்பிரதமராக இருந்தபொழுது ஒரு சந்தர்ப்பத்தில் சோவியத் அதிபராக இருந்த குருஷ்ஷேவ் இந்தியாவுக்கு வந்திருந்தாராம். டில்லியை சுற்றிக்காண்பிப்பதற்காக நேரு, குருஷ்ஷேவை காரில் அழைத்துக்கொண்டு வெளியே சென்றாராம். டில்லியில் ஆக்ராவுக்கும் சென்று அதிசயம் தாஜ்மஹாலும் பார்த்துவிட்டு திரும்புகையில் ஓரிடத்தில ஒரு இந்தியக்குடிமகன் தெருவோரத்தில் அமர்ந்து மலம் கழிப்பதைப்பார்த்த குருஷ்ஷேவ், நேருவிடம் நீங்கள் கேட்ட சுதந்திரம் உங்களுக்கு கிடைத்துவிட்டது. ஆனால் – உங்கள் மக்கள் ஏன் தெருவோரத்தில் மலம் கழிக்கிறார் கள்? எனக்கேட்டுள்ளார்.
அதற்கு நேரு, இன்றும் எங்கள் தேசம் வளர்முக நாடாகத்தான் இருக்கிறது. உங்கள் சோவியத் யூனியன் போன்று வல்லரசாகியதும் இது போன்ற காட்சிகள் எங்கள் நாட்டில் இருக்காது என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.
எனினும் – அவர் தமது மனதிற்குள் பிறநாட்டு தலைவர் ஒருவரின் பார்வையால் நேர்ந்த அவமானத்தையிட்டு மனதிற்குள் வெட்கப்பட்டாராம்.
பிறிதொரு சமயம் நேரு நல்லெண்ண அடிப்படையில் குருஷ்ஷேவ்வின் அழைப்பில் சோவியத்திற்கு சென்றுள்ளார். அங்கு சந்திப்பு – மாநாடுகள் முடிவுற்றதும் குருஷ்ஷேவ் நேருவை அழைத்துக்கொண்டு காரில் மாஸ்கோ நகரை சுற்றிக்காண்பிப்பதற்கு அழைத்துச்சென்றாராம்.
அங்கே கிரெம்ளினில் லெனின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அரங்கு உட்பட பல காட்சிகளைப்பார்த்துவிட்டு திரும்புகையில் மாஸ்கோ வீதியொன்றின் அருகே ஒருவர் மலம் கழித்துக்கொண்டிருந்ததைப்பார்த்துவிட்ட நேரு, உள்ளுர பெருமிதத்துடன், என்ன…? குருஷ்ஷேவ் பெரிய வல்லரசு எனச்சொல்லப்படும் உங்கள் தேசத்திலும் குடிமக்கள் தெருவோரத்தில்தானே மலசலம் கழிக்கிறார்கள்….? எங்கள் இந்தியாவை நீங்கள் எள்ளி நகைத்தீர்கள். உங்கள் நாட்டில் மட்டும் என்னவாம் வாழ்கிறது…? எனக்கேட்டாராம்.
நேருவின் ஏளனப்பேச்சையும் கேட்டு அந்தக்காட்சியையும் பார்த்துவிட்ட குருஷ்ஷேவ் கடும் கோபமுற்று தனது அதிகாரிகளை அங்கே அனுப்பி தெருவோரத்தில் மலம் கழிக்கும் அந்த நபரை உடனே கைதுசெய்யுமாறு பணித்தாராம்.
அந்த அதிகாரிகள் போன வேகத்திலேயே திரும்பிவந்துவிட்டார்கள்.
கொம்ரேட்…. அவரை நாங்கள் கைது செய்ய முடியாதாம். அவர் ஒரு வெளிநாட்டு இராஜதந்திரியாம்.“ எனச்சொல்லிவிட்டு சற்று தயங்கினார்களாம் அந்த அதிகாரிகள்.
உடனே குருஷ்ஷேவ் எந்த நாட்டு இராஜதந்திரி…? எனக்கேட்கிறார்.
அவர் இந்தியாவின் ராஜதந்திரியாம் கொம்ரேட் – என்றார்களாம் அந்த அதிகாரிகள்.
குருஷ்ஷேவ் நேருவைப்பார்த்தாராம். நேரு முகத்தை திருப்பிக்கொண்டாராம்.
இக்கதை நேரு – குருஷ்ஷேவ் காலத்தில் புனையப்பட்டது.
21 ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவின் இந்த மலகூடப்பிரச்சினை பேசப்படுகிறது என்பதற்கு மேலே தொடக்கத்தில் சொன்ன இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆதாரம்.
தமிழ்நாட்டில் இராம. சீனுவாசன் என்பவர் இந்தப்பிரச்சினை தொடர்பாக விரிவாகவே ஆராய்ந்துள்ளார்.
வெளிநாடுகளில் அவரவர் வீடுகளின் கழிப்பறைகளை அவரவரே சுத்தம் செய்துகொள்கின்றனர். இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை. அதற்குத்தேவையான அனைத்து சாதனங்களும் கிருமிநாசினிகளும் தாராளமாக வண்ண வண்ண நிறங்களில் கிடைக்கின்றன. தொலைக்காட்சிகளிலும் அவை சம்பந்தமான கவர்ச்சிகர விளம்பரங்கள் தினம் தினம் வந்துகொண்டிருக்கின்றன.
இலங்கையில் ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை பற்றியும் ஒரு கதை நீண்ட காலமாகச்சொல்லப்பட்டது. அவர் வாழ்ந்த காலம் பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்.
ஒரு நாள் அவர் தெருவோரத்தில் அமர்ந்து மலம் கழித்தாராம். அந்தநேரம் பார்த்து பொலிஸ்காரர்கள் இருவர் அவ்விடத்தை அண்மித்திருக்கிறார்கள். கல்லடி வேலனுக்கு சமயோசிதமாக ஒரு யோசனை தோன்றி, தான் தலைக்கு அணிந்திருந்த தொப்பியை எடுத்து மலக்கும்பத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாராம். அருகே வந்த பொலிஸ்காரர்கள் என்ன செய்கிறாய்..? எனக்கேட்டதும் அய்யா… பொலிஸ் அய்யா…. ஒரு கிளி அகப்பட்டிருக்கிறது. தொப்பியை எடுத்தால் பறந்துவிடும் அதுதான் என்ன செய்வது…?- என்று யோசித்துக்கொண்டிருக்கின்றேன். இதனை பக்குவமாக நீங்கள் பிடித்துக்கொண்டிருந்தால் நான் வீட்டுக்குச்சென்று ஒரு கூண்டு எடுத்துவருவேன். பிடிக்கிறீர்களா? எனக்கேட்டாராம் கல்ல
டி வேலன். சரி… சரி… போய் கெதியா கூண்டோடு வா… எனச்சொல்லி அவரை அனுப்பிவிட்டு அந்த இரண்டு பொலிஸ்காரர்களும் மாறி மாறி அந்தத்தொப்பியை பிடித்துக்கொண்டிருந்தார்களாம்.
நகைச்சுவை நடிகர் நகேஷ் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.
ஒரு மனிதன் தெருவிலே செல்லும்பொழுது மனிதக்கழிவில் எதிர்பாராத விதமாக காலை வைத்துவிட்டு சினந்துகொண்டானாம். உடனே அந்த மலம் பேசியதாம்.
மனிதா… நான் அந்தக்கடையில் ஒரு கண்ணாடிப்பெட்டி க்குள் ஒரு அழகிய கேக் வடிவத்தில்தான் சுவையாக இருந்தேன். உன்னைப்போல் ஒரு மனிதன்தான் வந்து என்னை விலைக்கு வாங்கி உண்டு இவ்வாறு தெருவோரத்தில் கழித்துவிட்டுப்போய்விட்டான்.
எமது ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமது வீடுகளில் சம்பளத்திற்கு வேலையாட்களை வைத்திருந்து தமது வீட்டு வேலைகளைச்செய்யாமல் தமது வீட்டு கழிவறை உட்பட தமது வீட்டையும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் துப்பரவு செய்துகொண்டுதான் இயந்திரமாக உழைத்து தமது குடும்பத்தையும் பராமரித்துக்கொண்டு ஊருக்கும் பணம் அனுப்புகிறார்கள்.
ஆனால், ஊரில் இருப்பவர்களோ தமது வீட்டில் வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு தமது வீட்டு கழிவறை தொடக்கம் வீட்டின் உட்புறம் – வெளிப்புறத்தையும் வேலைக்காரர் வைத்து சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
புலம்பெயர்ந்தவர்களின் தயவில் ஊரில் உறவுகள் மட்டுமல்ல வேலைக்காரர்களும்தான் வாழ்கிறார்கள்.
நரேந்திர மோடியின் வார்த்தைகள் அவரது அமைச்சரவைக்கு மாத்திரமாக இல்லாமல் முழுக்காந்தி தேசத்திற்கும் எங்கள் தேசத்திற்கும் ஏன் உலகத்திற்குமே பொதுவாக இருக்கட்டும்.
மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை அர்த்தமுள்ள தினமாக ஏற்றுக்கொள்வோம்.
—-0— letchumananm@gmail.com