ஆழமும் அர்த்தமும் பொதிந்த தாலாட்டுப் பாடல்கள்!…. ஒலிச்சித்திரம் …. முருகபூபதி.
மெல்பன் வானமுதம் வானொலியில் ஒலிபரப்பான ஒலிச்சித்திரம்
முருகபூபதி.
( மெல்பனிலிருந்து வாரந்தோறும் ஒலிக்கும் வானமுதம் வானொலியில், அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வில்லியம் ராஜேந்திரன் நடத்திய , ஒலிச்சித்திரம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் முருகபூபதி சமர்ப்பித்த எழுத்துப்பிரதியின் வடிவம். )
மனித வாழ்வில் குழந்தைப் பருவமென்பது காவிய நயம் மிக்கது. குழந்தைகளை தெய்வத்திற்கு ஒப்பிடும் சமூகம் எமது தமிழ் சமூகம். நாம் மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து இன மக்களும் குழந்தைகளை நேசிக்கின்றனர். அதற்கு அடிப்படைக் காரணம், ஒவ்வொருவரும் அந்த குழந்தைப் பருவத்தை கடந்துதான் வந்திருப்பார்கள். நீங்கள், நான், மற்றவர்கள் அனைவரும் அந்தப் பருவத்தை கடந்திருந்தாலும், நாம் அந்தப்பருவத்தில் என்ன செய்தோம், எப்படி தவழ்ந்தோம், எவ்வாறு நடைபழகினோம் என்பதை எமது குழந்தைகள், எமது பிள்ளைகளுக்குப் பிறந்த எமது பேரக்குழந்தைகளைப் பார்த்தே தெரிந்துகொள்கின்றோம்.
குழந்தைகளின் குரலை, சிரிப்பை, மழலைப் பேச்சைக்கேட்டு நாம் மெய்மறந்துவிடுகின்றோம்.
ஆனால், குழந்தைகள் அழுதால், அவர்களின் அழுகுரலைக்கேட்டால், துடித்துவிடுகின்றோம்.
நீங்கள் திருவிளையாடல் திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு காட்சி வரும். சிவபெருமானாக வரும் சிவாஜிகணேசனிடம் , ஏழைப்புலவன் தருமியாக வரும் நாகேஷ் பல கேள்விகளை கேட்பார்.
அதில் ஒன்று சகிக்க முடியாதது எது …?
சிவனின் பதில்: பச்சிளம் குழந்தையின் அழுகை என்பதாக இருக்கும்.
எம்மால் குழந்தையின் எத்தகைய செயலையும் சகிக்கமுடியும், சிரிக்க முடியும், ரசிக்க முடியும். ஆனால், அதன் அழுகையை தொடர்ந்து கேட்க முடியாது அல்லவா..?
அவ்வாறு அழும் குழந்தைகளை தாய்மார், பாட்டி மார் , சித்திமார், அத்தைமார் தாலாட்டுப்பாடல் பாடி உறங்கவைப்பார்கள். சாதாரணமாக எமது குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் தாலாட்டுப்பாடல்கள் பிரசித்தமானவை. குழந்தை, பாடலின் அர்த்தம் புரியாமல், அதன் இனிமையான சுகமான ராகத்தை கேட்டே உறங்கிவிடும். உறக்கத்திலும் சிரிக்கும். அந்தச்சிரிப்பு எம்மை கொள்ளை கொள்ளும்.
வளர்ந்த குழந்தைகளுக்கு பாட்டிமார் கதை சொல்லி உறங்கவைப்பார்கள். அவ்வாறுதான் பாட்டி சொன்ன கதைகள் தோன்றின.
ஆங்கிலத்தில் அவற்றை Bed time stories எனச்சொல்கின்றோம். இந்த டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளுக்கான பாடல்கள் ஐபேர்டில் வந்துவிட்டதனால், அம்மாமாரின் வேலைகள் சுலபமாகிவிட்டன.
ஆனால், முன்னர் தாலாட்டுப்பாடல்கள்தான் குழந்தைகளை உறங்கவைத்தன.
அவற்றை நாம் தமிழ் திரைப்படங்களிலும் கேட்டு பார்த்து ரசித்திருக்கின்றோம். இந்தப்பின்னணியில்தான் வானமுதம் வானொலியில் எமது கவிஞர்கள் இயற்றிய புகழ்பெற்ற தாலாட்டுப்பாடல்களின் காவிய நயம் பற்றி சொல்ல வந்திருக்கின்றேன்.
1966 ஆம் ஆண்டு இயக்குநர் திலகம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கதை வசனம் இயக்கத்தில் வெளியானது சித்தி என்ற திரைப்படம். இதன் மூலக்கதையை எழுதியவர் எழுத்தாளர் கோதை நாயகி.
தமிழ்க்குடும்பங்களில் தாயை இழந்த குழந்தைகளுக்கு வரும் சித்திமார் பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்படும். சித்தி என்றாலே மாற்றாந்தாய். அவள் பெற்ற தாயைப்போல இருக்கமாட்டாள். கொடுமைக்காரியாக இருப்பாள் என்றெல்லாம் அக்குழந்தைகளின் உறவினர்களினால் பிழையான கற்பிதங்கள் சொல்லப்பட்டிருக்கும், அந்த வழக்கமான செய்தியை மாற்றி எழுதியிருக்கும் குறிப்பிட்ட சித்தி திரைப்படத்தின் கதை.
அந்த சித்தி பாத்திரத்தில் நாட்டியப்பேரொளி பத்மினி திறம்பட நடித்திருப்பார். அந்த சித்தி தனது கணவரின் முதல் தாரத்துக்குழந்தையை எவ்வாறு சிராட்டி பாராட்டி பாடி உறங்கவைக்கிறாள் என்பதுதான் இப்பாடல்.
இதில் வரும் பெண்குழந்தைக்கான வாழ்வியல் தத்துவத்தையே கவியரசு கண்ணதாசன் சொல்லியிருப்பார். சுசீலாவின் இனிமையான
குரலில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனின் இசையில் மலர்ந்த பாடல் சொல்லும் கருத்துக்ளை ஊன்றிக்கவனியுங்கள்.
சித்தி – காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே…
பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் ஒரு தூக்கம் இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கம் இல்லை என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல் நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுதமிழ்ப் பாடல் எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி
( காலமிது )
மாறும்…. கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும் ஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது தான் நினைத்த காதலனை சேர வரும்போது தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது.. கண்ணுறக்கம் ஏது..
மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது.. கண்ணுறக்கம் ஏது
ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும்போதும் அன்னை என்று வந்தபின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும் கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும் காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும் தானாகச் சேரும்
குழந்தைப்பருவத்திலிருந்து முதுமைப்பருவம் வரையில் ஒரு பெண் சந்திக்கும் காலத்தை கவியரசர் இந்த தாலாட்டுப்பாடலில் உயிர்த்துடிப்போடு சித்திரித்திருப்பார்.
——————————–
கற்பகம் – அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா…
இந்த ஒலிச்சித்திரத்தில் நாம் முதலில் கேட்ட பாடல் ஒரு சித்தி பாடுவதாக அமைந்திருந்தது. இனிவரவிருக்கும் பாடல் ஒரு அத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது.
சித்தி எவ்வாறு பாடுவாள் என்பதை சொல்வதற்கு முன்பே 1963 ஆம் ஆண்டில் இயக்குநர் திலகம் கே. எஸ் . கோபாலகிருஷ்ணன், ஒரு அத்தை எவ்வாறு தாலாட்டுப்பாடல் பாடுவாள் என்பதை சித்திரிக்கும் வகையில் காட்சியை அமைத்திருப்பார்.
அந்தப்பாடல்தான் அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா…
இந்தப்படம்தான் புன்னகை அரசி எனப்பெயர்பெற்ற கே. ஆர். விஜயாவின் முதலாவது திரைப்படம்.
இதில் அண்ணனின் குழந்தையை தங்கை தாலாட்டுப்பாடி உறங்க வைப்பாள்.
இந்தப்பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி. இசையமைப்பு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராம மூர்த்தி.
அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா ஆடும்வரை ஆடிவிட்டு அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை வேறோர் தீபத்தை ஏற்றவில்லை வேறோர் தெய்வத்தை போற்றவில்லை வேறோர் தீபத்தை ஏற்றவில்லை அன்றோர் கோயிலை ஆக்கிவைத்தேன் அம்பிகையாய் உன்னை தூக்கிவைத்தேன் அதில் அம்பிகையாய் உன்னை தூக்கிவைத்தேன்
அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா ஆடும்வரை ஆடிவிட்டு அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடி
சிப்பிக்குள் முத்து – லாலி லாலி லாலி வரம்தந்த சாமிக்கு
சலங்கை ஒலி, சங்கராபரணம் முதலான புகழ்பெற்ற திரைப்படங்களை தந்த இயக்குநர் கே. விஸ்வநாத் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் தெலுங்கில் சில படங்களையும் தமிழில் சில படங்களையும் தந்தவர். அத்துடன் அவரும் ஒரு சிறந்த நடிகர். சில படங்களில் நடித்திருப்பவர்.
தெலுங்கில் வெற்றிபெற்ற படங்களை தமிழுக்கும் வரவாக்கியவர். அவ்வாறு தெலுங்கில் தயாரிக்கப்பட்டு சுவாதிமுத்யம் என்ற பெயரில் வெளிவந்து வெற்றிபெற்றது.
இத்திரைப்படம் பெங்களூரில் ஒரு திரையரங்கில் தெலுங்கு மொழியில் 450 நாட்கள் வரை ஓடியது. அத்துடன், இந்தியிலும் கன்னடத்திலும் வௌியானது.
ஆனால், நாயகர்கள் வேறு.
தெலுங்கிலும் தமிழிலும் நடித்தவர் கமல்காசன். இங்கும் ஒரு சுவரசியமான செய்தி இருக்கிறது. ஏதோ பிரச்சினையால், சுவாதி
முத்யம் தமிழில் சிப்பிக்குள் முத்து என 1986 இல் வெளியானபோது கமலுக்கு குரல் கொடுத்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
இச்செய்தி காலம் கடந்துதான் வெளியானது.
சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் நடிகை ராதிகா சிறப்பாக நடித்திருப்பார். இதில் வரும் வரம் தந்த சாமிக்கு பதமான லாலி எனத்தொடங்கும் தாலாட்டுப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றினார்.
இசைஞானியும் கவிப்பேரரசும் இணைந்து தந்த பல பாடல்கள் இன்றளவும் உலகெங்கும் ஒலிக்கின்றன. ஆனால், அவர்கள் பிரிந்துவிட்டதுதான் கலை உலகில் பெரிய ஏமாற்றம்.
இந்தப்பாடல் வெறும் தாலாட்டுப்பாடல்தான், ஆனால், அதற்குள் எத்தனையோ காவியச்சிறப்புகளை கவிப்பேரரசர் பொதிந்து வைத்திருப்பார்.
ஒரு சாதாரண தாலாட்டுப்பாடலை இவ்வாறும் இயற்றமுடியும் என அவர் நிரூபித்திருப்பார்.
கௌசல்யை, யசோதை, மலையன்னை, பார்வதி, என்றெல்லாம் புராணத்திலும் காவியத்திலும் வரும் அன்னைமாரைப்பற்றி முதலில் சொல்லிவிட்டு,
இறுதியில் – ஆழ்வாரையும் கம்ப நாடனையும் ( அதாவது கம்பரையும் வால்மீகியையும், தியாகைய்யரையும் பற்றிச்சொல்லியிருப்பார் கவிப்பேரரசு வைரமுத்து.
முதலில் பெண்களைச்சொன்னவர், பின்னர் ஆண்களைச்சொல்கிறார்.
இவ்வாறு அபூர்வமான வரிகளைக்கொண்டது இந்த தாலாட்டுப்பாடல்.
பி. சுசீலாவின் இனிமையான குரலில் கேட்டுப்பாருங்கள். படம்: சிப்பிக்குள் முத்து.
லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி (வரம் தந்த சாமிக்கு) ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே யது வம்ச வீரனுக்கு யசோதை நானே கரு யானை முகனுக்கு மலையன்னை நானே பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே (வரம் தந்த சாமிக்கு) ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே ராம ராஜனுக்கு வால்மீகி நானே ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே
மூன்றாம் பிறை – கண்ணே கலை மானே….
பாலுமகேந்திராவின் கதை, வசனம் இயக்கத்தில் வெளியான சிறந்த திரைப்படம் மூன்றாம் பிறை. 1982 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் நடித்த கமல்காசனுக்கு சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதும்கிடைத்தது. அதில் நடித்த ஶ்ரீதேவிக்கும் அவ்விருது கிடைக்கவிருந்து இறுதிச்சுற்றில் ஒரு இந்தி நடிகைக்கு அந்த விருது சென்றது. எனினும் அன்றைய தமிழ்நாடு அரசு ஶ்ரீதேவிக்கு அவ்வாண்டிற்கான சிறந்த நடிகை விருதை வழங்கியது.
வித்தியாசமான கதைமைப்பினைக்கொண்ட திரைப்படம்.
பருவமடைந்த ஒரு பெண், குழந்தைகளுக்குரிய இயல்புகளோடு இருப்பாள். அவளை குணமாக்க நாயகன் பல சிரமங்களை சந்திப்பான். எனினும் அவள் மீது அவனுக்கிருந்த காதலும் அக்கறையும் இறுதியில் கனவாகியே போய்விடும்.
குணமடையும் அவள், தனது பழைய நினைவுகளை மறந்துவிடுகிறாள். அதனால், தன்னை பாதுகாத்து பராமரித்தவனையும் மறந்துவிடுகிறாள்.
அவளின் குழந்தைத்தனமான இயல்புகளை அவதானித்து நாயகன் பாடும் தாலாட்டுப்பாடல் இது.
இதுதான் கவியரசு கண்ணதாசன் இயற்றிய இறுதி திரைப்படப்பாடல். இந்தப்பாடல் இடம்பெற்ற மூன்றாம் பிறை 1982 ஆம் ஆண்டு
வெளியானது. ஆனால், அதற்கு முன்பே இத்திரைப்படத்தை பார்க்காமல் 1981 ஆம் ஆண்டு கவியரசர் கண்களை நிரந்தரமாக மூடிவிட்டார்.
1949 இல் வெளியான கன்னியின் காதலி திரைப்படத்தில் கலங்காதிரு மனமே என்ற முதல் பாடலை இயற்றியிருந்த கவியரசர் இறுதியாக இயற்றிய திரைப்படப்பாடல் இது. அன்று மக்களை கலங்காதிருக்கசசொன்னார்,இந்த தாலாட்டுப்பாடலில், கண்ணே கலைமனே என்று தாலாட்டி உறங்கவைத்தார்.
இதில் வரும் வரிகளை கவனியுங்கள்
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
பேதை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளி பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
ஒரு பருவமடைந்த குமரியின் குழந்தைத்தனமான இயல்புகளை இவ்வாறு உயிர்ப்போடு சித்திரித்திருப்பார்.
—0—