வெளிநாட்டுத் தமிழ்க் குழந்தையும் பெற்றவர்களின் தாயக வேரின் சால்பும் சிந்துவின் தைப்பொங்கல் – Sinthu’ s Thai Pongal!… முருகபூபதி.
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு ஏற்கனவே பல திரைப்படப் பாடல்களும், குழந்தை இலக்கியப் பாடல்களும், கதைகளும் வெளிவந்துள்ளன. இந்தப் பின்னணியில், புகலிட தமிழ்ச் சூழலில் தாயும் மகளும் இணைந்து குழந்தைகளுக்கான இலக்கிய நூலை படைப்பது என்பது அதிசயமான செயல்தான்.
கனடாவில் வதியும் எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் அவரது மகள் சிவகாமியும் இணைந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்திருக்கும் சிந்துவின் தைப்பொங்கல் நூலுக்கு வே. ஜீவனந்தன் பொருத்தமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அதனால், புகலிடத்தில் மட்டுமல்ல இலங்கையில் வாழும் தமிழ்க்குழந்தைகளும் இதனை விரும்பிப் படிப்பார்கள்.
இந்நூல் தற்போது பிரெஞ்சு மொழியிலும் பெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இலங்கையில் பல சர்வதேசப் பாடசாலைகளில் எமது தமிழ்க் குழந்தைகள் ஆங்கில மொழி மூலமும் கற்கிறார்கள்.
ஶ்ரீரஞ்சனி அண்மையில் மெல்பனுக்கு வந்த சமயத்தில் இந்த நூலையும் மீராவின் தம்பி மற்றும் வேறு சில கதைகள் என்ற நூலையும் எனக்குத் தந்தபோது, இவற்றையே எனது பேத்தி ஆண்யாவுக்கு கிறிஸ்மஸ் – புத்தாண்டு பரிசாகக் கொடுத்தேன்.
ஆர்வமுடன் வாங்கிக்கொண்ட பேத்தி, முதலில் பக்கங்களைப் புரட்டி படங்களைத்தான் பார்த்தாள். இதிலிருந்து குழந்தைகளின் முதல் கவனம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதனால்தான் குழந்தை இலக்கிய நூல்கள் வண்ணப் படங்களுடன் வெளியாவதன் சூட்சுமத்தை நாம் புரிந்துகொள்கின்றோம்.
நான் வதியும் அவுஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம். இக்காலத்தில்தான் எமது தைத்திருநாளும் வருகிறது.
நன்றி என்ற மகத்துவமான சொல்லுக்கு வள்ளுவர் – ஔவையார் முதல் பல முன்னோர்கள் பல விளக்கங்களை தந்துள்ளார்கள்.
தைப்பொங்கலும் ஒரு வகையில் நன்றி செலுத்தும் திருநாளாக – பண்டிகையாக குறிப்பாக எமது தமிழ்க் குழந்தைகளுக்கு அறியத்தரப்படுகிறது.
பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படும்போது, அதனை வீட்டு முற்றத்தில் அல்லது வயல் வெளியில் எம்மவர்கள் கூடிக் குதூகளித்து நடத்துகிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் இந்த நிகழ்வு கோடைப்பருவத்தில் வருகிறது. அதாவது சுட்டெரிக்கும் வெய்யில் காலத்தில் Fire Band இருப்பதனால், எம்மவர்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் அடுப்பெரித்து பொங்கல் வைப்பதற்கு தயங்குவார்கள். அவ்வாறு செய்து ஏதும் விபரீதம் நடந்துவிட்டால், பிறகு பொலிஸ் நிலையத்தில்தான் பொங்கல் சாப்பிட வேண்டிவரும்.
சிந்து என்ற குழந்தை கனடாவிலிருந்து தனது பெற்றோரின் பூர்வீக ஊருக்கு – யாழ்ப்பாணத்திற்கு தனது விடுமுறை காலத்தில் வந்திருக்கும்போது, வரும் தைப்பொங்கலை எவ்வாறு கொண்டாடுகிறாள் என்பதுதான் இந்நூல் வண்ணப்படங்களுடன் கூறும் கதை.
மூத்தோர் முதல் இளையோர் வரையில் தொடுதிரை கலாசாரத்தில் மூழ்கியிருக்கும் சமகாலத்தில், குடும்பத்தினர் மத்தியில் பேசிச் சிரித்து பொழுபோக்குவதற்கு தைப்பொங்கல் போன்ற கொண்டாட்டங்கள் அவசியமாகியிருக்கின்றன.
அத்துடன் எமது குழந்தைகளுக்கு, நாம் ஏன் இதனை இவ்வாறு கொண்டாடுகின்றோம் எனச்சொல்லிக்கொடுப்பதற்கும் உதவுகிறது.
சிந்து தனது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டியுடன் கொண்டாடுகிறாள். அதுவும் தனது பெற்றோர்களின் பூர்வீக ஊருக்கு வந்து கொண்டாடுகிறாள்.
கனடாவில் குளியலறையில் குழாய் நீரில் தோய்ந்து பழக்கப்பட்ட சிந்துவுக்கு, ஊர்க்கிணற்றில் பாட்டி, வாளி நிறைய தண்ணீர் மொண்டு தலைக்கு வார்க்கும் அனுபவம் சிலிர்ப்பையும் புத்தெழுச்சியையும் தருகிறது.
அத்துடன், கனடாவில் வீட்டின் சமையலறையில் மின்சார அல்லது கேஸ் அடுப்பில் சமையல்களை பார்த்துப் பழகிய சிந்துவுக்கு, ஊரிலே முற்றத்தில் அடுப்பு வைத்து பானை ஏற்றி பால், ஊற்றி பொங்கும் காட்சி பரவசத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன், பாட்டி அரிசி மாவால் இடும் அழகிய கோலமும் அவளுக்கு ஓவியம் தொடர்பான புதிய அனுபவத்தை வழங்குகிறது. அதனை ரசிக்கிறாள். தானும் அவ்வாறு கோலம் வரையவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வருகின்றாள்.
அத்துடன் பொங்கல் சம்பந்தப்பட்ட வேலைகளில் தனது பங்கிற்கும் ஏதும் வேலைகளை செய்து கொடுக்கின்றாள். இது அவளது சுயவிருத்திக்கு ( Self Development ) உதவுகிறது.
அயலவர்களுக்கும் அந்தப் பொங்கல் செல்கிறது. அயலவர்கள் வீடுகளிலிருந்தும் பொங்கல் சிந்துவின் தாத்தா – பாட்டி வீட்டுக்கு வருகிறது. இந்த உறவாடலும் தொடர்பாடலும் சிந்து அவளது பெற்றவர்களின் பூர்வீகத் தாயகத்தில் பெற்றுக்கொள்ளும் வாழ்வியல் அனுபவம்.
அந்தவகையில், தாயகம் விட்டு புலம்பெயர்ந்த பெற்றோர்களின் ஒரு குழந்தைக்கு, தனது வேரின் சால்பை துல்லியமாக தெரிந்துகொள்வதற்கு தைப்பொங்கல் எவ்வாறு உதவியிருக்கிறது என்பதை கலைநயத்துடன் இந்த நூல் பேசியிருப்பதாக நான் கருதுகின்றேன்.
இதனை படைத்த தாய்க்கும் சேய்க்கும் எமது வாழ்த்துக்கள்.
கடந்த தைத்திருநாளுக்கு மறுநாள் 16 ஆம் திகதி இந்த நூல் மெய்நிகர் அரங்கில் வெளியிடப்பட்டது.
—0—