புத்தாண்டில் புதிய சாதனை; சூரியசக்தி மின்சாரம் அமோகம்
தமிழக மின் வாரியம், புத்தாண்டு தினத்தன்று, சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, எப்போதும் இல்லாத அளவாக, 4,317 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்து, புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள், 5,820 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.
சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மழை தவிர்த்த மற்ற நாட்களில், தினமும் பகலில் சராசரியாக 2,500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது. இது, மின் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 2022ல் மார்ச் 1ல் சூரியசக்தி மின் நிலையங்களில் அதிக அளவாக, 3,633 மெகா வாட் கொள்முதல் செய்யப்பட்டது.
இதை விட அதிக அளவாக, செப்., 24ல் 3,836 மெகா வாட்; நவ., 18ல் 3,907; அம்மாதம் 24ல் 3,922 மெகா வாட் என, சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
முதன்முறையாக டிச., 22ம் தேதி, 4,000 மெகா வாட்டை தாண்டி, 4,141 மெகா வாட் கொள்முதல் செய்யப்பட்டது. டிச., 24ம் தேதி 4,905 மெகா வாட் என, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 4,000 மெகா வாட் மேல் கொள்முதல் செய்யப்பட்டது.
இது, கடும் பனிப்பொழிவால் அடுத்த நாளில் இருந்து 3,000 மெகா வாட் கீழ் குறைந்தது.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று, எப்போதும் இல்லாத அளவாக 4,317 மெகா வாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்து, மின் வாரியம் புதிய சாதனை படைத்து உள்ளது.
சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்திற்கு, தமிழகம் முன்னுரிமை அளிப்பதே இதற்கு முக்கிய காரணம்.
![]()