நீதித்துறையின் சுதந்திரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்- கூட்டு எதிர்க்கட்சி பகிரங்கக் குற்றச்சாட்டு!

அரசின் தற்போதைய செயற்பாடுகள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டிலான் பெரேரா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மஹரகமவில் ஆற்றிய உரையின் காணொளித் துண்டொன்று ஊடகங்களுக்குக் காண்பிக்கப்பட்டது.
அதில், மே மாத காலப்பகுதிக்குள் 15 முக்கிய வழக்குகள் (10 ஊழல் மற்றும் 5 குற்றவியல் வழக்குகள்) விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதற்கான தீர்ப்புகள் விரைவில் வெளிவரும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்துக் கடும் அதிருப்தியை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பின்வருமாறு தெரிவித்தார்.
“நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தீர்ப்புகள் எப்போது வரும் என்பதை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முன்கூட்டியே அறிவிப்பது நீதித்துறையின் கௌரவத்தைப் பாதிக்கும்.
அரசியல் தேவைகளுக்காக நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதும், தீர்ப்புகள் குறித்து முன்னறிவிப்பு செய்வதும் ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகளுக்கு முரணானது.” – என்றார்.
முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா உரையாற்றுகையில், “சட்டத்தின் ஆட்சி என்பது தனிப்பட்ட பழிவாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது” என்று வலியுறுத்தினார். முறையான விசாரணைகளின்றி அரசியல் எதிரிகளை இலக்கு வைப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.” – என்றார்.
ஊழல் ஒழிப்பு விசாரணைகளை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அவை அரசியல் மேடைகளுக்காக நீதித்துறையை வழிநடத்தும் முயற்சியாக இருக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டினார்.
சட்டத்தை அதன் போக்கில் விடுவிக்க வேண்டுமே தவிர, அரசியல் இலாபங்களுக்காக நீதிமன்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதாகக் காட்டிக்கொள்ளக் கூடாது என்றும் இந்த ஊடக சந்திப்பில் ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டது.
![]()