இலங்கை தொடர்பில் தமிழக அரசு தீர்மானங்களை எடுக்க முடியாது; விஜய் கூறுவதைப் போல் கச்சதீவை பெற முடியாது; அவர் திருவிழாவுக்கு வந்து ஆசீர்வாதம் பெற முடியும்

தழிழ்நாட்டின் முதலமைச்சராகவுள்ள விஜய் கூறுவதை போன்று இலங்கையின் கச்சதீவை பெற்றுக்கொள்ள முடியாது. அது இலங்கைக்குரியது. வேண்டுமென்றால் அடுத்த வருடம் நடக்கவுள்ள கச்சதீவு திருவிழாவுக்கு அவரால் வந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு போக முடியுமென்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது, தமிழ்நாட்டு தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கலைத்துறையில் இருந்து விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். இவர் அரசியலில் புதியவராவார். மிகவும் குறுகிய காலத்தில் அவரால் வெற்றிப் பாதையில் செல்ல முடிந்துள்ளது. இதனால் அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அவர் நடிப்பை விடவும் அரசியல் வித்தியாசமானது. யதார்த்தத்திற்கு அவர் முகம்கொடுக்க வேண்டியிருக்கும். அவர் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்ற வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.
இதேவேளை கச்சதீவு விடயத்தில் அவருக்கு அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச்சில் நடக்கவுள்ள கச்சதீவு திருவிழாவுக்கு வீசாவை பெற்றுக்கொண்டு வர முடியும். அதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
அவர் மத்திய அரசாங்கம் அல்ல. மாநில அரசாங்கமே. மாநில அரசாங்கத்திற்கு இலங்கை தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியாது. அந்த மாநிலத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும். கச்சதீவு என்பது இலங்கையின் பகுதியே. அவருக்கு வேண்டுமென்றால் அடுத்த வருடத்தில் நடக்கும் திருவிழாவுக்கு வந்து ஆசி பெற்று செல்லலாம். ஆனால் கச்சதீவு தொடர்பில் எவருக்கும் கதைக்க முடியும். நாங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக போராடியவர்கள் தொடர்ந்தும் போரடுபவர்களே என்றார்.
![]()