முச்சந்தி

ஈராக்கில் நிலைபெறுமா புதிய ஆட்சி: மீண்டும் அமெரிக்க பொம்மை அரசு ? …… ஐங்கரன் விக்கினேஸ்வரா

( ஈரான் மீதான போர் மூலம் ஆட்சி மாற்றத்தினை உருவாக்க அமெரிக்க முயற்சி செய்கிறது. அதேபோல் புதிய ஈராக் அரசு பொம்மை அரசாக தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வளைகுடாவில் ஈரானும் ஈராக்கும் ஒரு காலத்தில் மோதிக் கொண்டாலும் அமெரிக்காவிற்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாக இருந்த நாடுகளாக இருந்தன)
வளைகுடாவில் ஈரானும் ஈராக்கும் ஒரு காலத்தில் மோதிக் கொண்டாலும் அமெரிக்காவிற்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாக இருந்த நாடுகளாகும். தற்போது ஈரான் மீதான போர் மூலம் ஆட்சி மாற்றத்தினை உருவாக்க முயற்சி செய்கிறது. ஆனாலும் ஈராக்கில் சதாம் வீழ்ச்சியின் பின்னர் அமெரிக்க பொம்மை அரசுகளே ஆட்சியில் இருந்தனர். ஆனால் தற்போது புதிய ஈராக் அரசு அதே நிலைப்பாட்டை தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஈராக்கில் ஜனநாயகம் என்பது சிக்கலானதும், இன்னும் முழுமையாக நிலை நிறுத்தப்படாத ஒரு அரசியல் சிக்கலாகும். 2003இல் ஈராக் போரில் சதாம் ஹுசேன் ஆட்சி அகற்றப்பட்டது. அதன்பின் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள், ஈராக்கில் மேற்குலக சார்பு ஜனநாயக போர்வை கொண்ட அரசை அமைக்க முயன்றன. இன்னமும் முயற்சிக்கின்றன.
தற்போது ஈராக் அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் ஒரு பாராளுமன்ற ஜனநாயக குடியரசு மூலம் ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தேர்தல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, நாட்டின் பிரதமர் ஆட்சி தலைவராக இருப்பார். அதேவேளை ஜனாதிபதி ஒரு முறையான பதவியாக இருக்கிறார்.
ஆயினும் சவால்கள் நிறைந்த ஈராக் நாட்டு அரசியல் பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. மத மற்றும் இன பிரிவினைகள் குறிப்பாக சியா, சுனி, குர்து இடையே இன்னும் தொடர்ந்து வருகிறது. மேலும் ஊழல், அரசியல் குழப்பம், வெளிநாட்டு தலையீடு, பாதுகாப்பு பிரச்சினைகள் ISIS போன்ற குழுக்களால் தீவிரவாதம் தொடர்ந்த நிலையில் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையிலும் ஈராக்கில் சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.
பல பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளன.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. மேலும் ஈராக்கிய
மக்கள் போராட்டங்கள் மூலம் அரசியல் மாற்றங்களை கேட்கிறார்கள்.
தற்போதைய சர்வதேச அரசியல் சூழலில் ஈராக்கில் ஜனநாயகம் என்பது இன்னமும் நடைமுறையில் இல்லை என்று கூறலாம். ஆனால் அது இன்னும் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை அடைய கடுமையாக போராடுகிறது.
ஈராக் நாடாளுமன்ற அரசியல்:
2003இன் பின்னர் ஈராக் நாட்டில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் மிக முக்கியமான நிகழ்வாகும். ஈராக் நாடாளுமன்றம் என அழைக்கப்படுகிறது. இதில் பொதுவாக 329 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நாடாளுமன்றத்திற்கு மக்கள் நேரடியாக வாக்களித்து உறுப்பினர்களைத் தேர்வு செய்கிறார்கள். தேர்தல் முறையாக சம அளவிலான பிரதிநிதித்துவம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நாடாளுமன்றத்திற்கு நேரடியாக இன-சமய பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். ஷியா கட்சிகள் 197 இடங்களுக்கும்,
சுனி கட்சிகள் 67 இடங்களுக்கும்,
குர்திஷ் கட்சிகள் 56 இடங்களுக்கும்,
சிறுபான்மையின துருக்மென், கிறிஸ்தவர்கள், யெசிடிகள்
9 இடங்களுக்கும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
2025 நாடாளுமன்ற தேர்தல்
ஈராக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 11, 2025 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இது 2003 சதாம் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நடைபெற்ற ஆறாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். இந்த தேர்தல் முடிவுகள்
சிதறிய நாடாளுமன்றத்தை உருவாக்க வெளிப்படுத்தியது. இறுதியாக தேர்தல் முடிவுகள் ஈராக்கின் இன-சமயக் கட்டமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் சிதறிய நாடாளுமன்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 329 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க 2.8–3 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றனர். இந்த தேர்தலில் பிரதமர் முகம்மட் அல் சுடானி தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது.
ஆனால் எந்தக் கட்சியும் முழு பெரும்பான்மை பெறவில்லை. அதனால் கூட்டணி அரசாங்கம் அமைப்பது அவசியமானது. சுமார் 56% வாக்காளர் பங்கேற்பு பதிவானது
சில பகுதிகளில் அரசியல் விரக்தி காரணமாக பங்கேற்பு குறைவாக இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் முக்தாடா அல் சடார் தலைமையிலான அமைப்பு தேர்தலை புறக்கணித்தது. ஷியா, சுனி, குர்து அரசியல் குழுக்களுக்கிடையே மிகவும் கடுமையான போட்டி தொடர்ந்தது. அத்துடன் ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளின் அரசியல் தாக்கம் முக்கியமாக இருந்தது.
தேர்தலுக்குப் பிந்தைய நிலையாக,
புதிய அரசு அமைக்க நீண்ட காலம் எடுத்தது. 2025 நவம்பர் தேர்தல் ஈராகின் அரசியல் அமைப்பில் முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்தாலும், தெளிவான பெரும்பான்மை இல்லாததால் அரசியல் பேச்சுவார்த்தைகள் நீண்ட காலம் நீடித்தன. பக்தாத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, வாக்காளர் பங்களிப்பு 56 சதவீதமாக இருந்தது. இது பிராந்திய மற்றும் மத ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டுகிறது. முன்னர் பிரதமராக இருந்த அல்-சுதானி மீண்டும் போட்டியிட்டது ஈராக் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்பட்டது.
ஈராக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு, புதிய அதிபர் தேர்வாகியுள்ளார். குர்திஸ்தானின் தேசபக்தி ஒன்றிய கட்சியின் நிசார் அமிடி, வெளியுறவு அமைச்சர் புவாட் ஹுசைன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். முதல் சுற்றில் நிசார் அமிடி 208 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். இரண்டாம் சுற்றிலும் அமிடி 227 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து 15 நாட்களுக்குள் புதிய அதிபர் அமிடி புதிய பிரதமரை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குர்திஸ்தான் மக்களை பிரதிநிதுத்துவம் செய்யும் தேசபக்தி ஒன்றியக் கட்சியின் நிசார் அமிடி புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தேர்தல், ஈராக் தனது அரசியல் ஸ்திரத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பதைச் சோதிக்கும் ஒரு முக்கியமான கட்டமாகப் பார்க்கப்படுகிறது
ஈராக்கில் ஜனநாயக அரசியல் ?
2003இல் சதாம் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அமெரிக்க தலைமையில் ஈராக்கில் மேற்குலக சார்பு ஆட்சி முலாம் பூசப்பட்ட ஜனநாயக அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தேர்தல் முறைமை உருவாக்கம் செய்யப்பட்டது. பல கட்சி தேர்தல்கள் நடைபெறுகின்றன. மக்கள் தொடர்ந்து வாக்களிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும் அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பல ஆண்டுகளாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. 2000களில் இருந்து பல ஆண்டுகள் வன்முறை, குறிப்பாக ISIS எழுச்சி காரணமாக ஈராக் நாட்டை பாதித்தது.
இனச் சமுதாய பிரிவுகளான  சுனி ஷியா பிரிவுகள் அரசியலை ஆழமாக பாதிக்கின்றன. ஊழல் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்துடன் வெளிநாட்டு செல்வாக்கு தொடர்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் அரசியல் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. இதனால் தற்போது ஈராக்கில் ஜனநாயகம் முழுமையான வெற்றி என்றோ முழுமையான தோல்வி என்றோ சொல்ல முடியாது.
இது இன்னும் உருவாகிக் கொண்டிருக்கும், பல தடைகள் நிறைந்த அரசியல் முயற்சியாகும்.
சதாம் ஹுசேன் ஆட்சிக்காலத்தில் 1969 முதல் 2003 வரை ்ஈராக் பொருளாதாரம் மிகுந்த மாற்றங்களையும் அதே நேரத்தில் வளர்ச்சியையும் சந்தித்தது. இது இரண்டு முக்கிய காலகட்டங்களாகப் பார்க்கப்படுகிறது. ஆரம்ப வளர்ச்சி காலம் மற்றும் பின்னர் தடைகள் – போர் காரணமான வீழ்ச்சி காலம். ஆரம்ப காலமாக 1970களின் இறுதி – 1980களின் தொடக்கம்்வரை சதாம் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, எண்ணெய் வருமானம் அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரம் விரைவாக வளர்ந்தமை அறிந்ததே.
ஈராக் புதிய பிரதமர் தேர்வு
தற்போது ஈராக் நாட்டின் ஜனாதிபதி நிசார் அமிடி  நாட்டின் புதிய பிரதமராக 40 வயதான அலி அல்-சைதி  என்பவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் 30 நாட்களுக்குள் புதிய அரசை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவரை ஆதரித்த ஈராக் பாராளுமன்றத்தில் அதிக இடங்கள் கட்சிகளின் கூட்டணிக்கு சுமார் 130 முதல் 140 இடங்கள் உள்ளன.
நாற்பது வயதான அலி அல்-சைதி, தொழிலதிபர் மற்றும் இஸ்லாமிய வங்கியின் தலைவர் ஆவார். முன்பு எந்த அரசியல் பதவியிலும் இருந்ததில்லை. சட்டம் மற்றும் நிதித்துறையில் படித்தவர்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட நூரி அல் மாலிக்  மற்றும் தற்போதைய பிரதமர் அல் சுடானி போட்டியிலிருந்து விலகியதால், சமரச வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட பிராந்திய பதற்றம் அதிகரித்த நிலையில் தற்போது இவர் பதவி ஏற்றுள்ளார். அதேவேளை ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது. அத்துடன் எண்ணெய் வருவாயை அதிகம் சார்ந்துள்ள ஈராக் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவது ஆகியவை அவருக்கு முன் இருக்கும் முக்கிய சவால்கள் ஆகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button