முச்சந்தி
கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு ஓப்படைக்க நியூயார்க் மேயர் மன்னர் சாள்சிடம் கோரிக்கை… ஐங்கரன் விக்கினேஸ்வரா

நியூயார்க் நகர மேயர், ஜோஹ்ரான் மம்தானி, நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய கோஹினூர் வைர அரச ஆபரணத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு இங்கிலாந்து மன்னரை வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவிற்கான நான்கு நாள் அரசுமுறைப் பயணத்தில் பிரித்தானிய அரச தம்பதியினர் மன்ஹாட்டனில் உள்ள தேசிய 9/11 நினைவிடத்திற்குச் சென்றனர். அங்கு சாள்ஸ் மன்னர் மலர் அஞ்சலி செலுத்தினார். நியூயார்க்கில் மன்னரைச் சந்தித்த நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, ஆபரணத்தைத் திருப்பித் தருமாறு அவரை வலியுறுத்தி உள்ளார்.
இந்திய திரும்ப கோரும் கோஹினூர் வைரம்:

உலகின் மிகப்பெரிய வெட்டு வைரங்களில் ஒன்றான கோஹினூர் வைரம், இந்தியாவில் வெட்டி எடுக்கப்பட்டது. இதன் வரலாறு குறைந்தது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 1947 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்திய அரசு பலமுறை பிரிட்டனிடம் இருந்து அதைத் திரும்பக் கோரியுள்ளது. ஒரு காலத்தில் விக்டோரியா மகாராணிக்குச் சொந்தமான இது, பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் ஒரு பகுதியாகும், மேலும் லண்டன் கோபுரத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இது விலை மதிப்பற்றது என்று கூறப்படுகிறது.
1849 ஆம் ஆண்டில், இந்தியா காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், இந்திய அரச குடும்பத்தின் பத்து வயது மகனை கோஹினூரின் உரிமையை விட்டுக்கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியது. ஆனாலும் இந்தியா கடைசியாக 2016 இல் இதைக் கோரியது.
2001 செப்டம்பர் 11 அன்று அல்-கொய்தா அமைப்பால் நியூயோர்க் நகரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நடைபெற்ற ஒரு விழாவில் மன்னரையும் ராணியையும் சந்தித்த முக்கிய பிரமுகர்களில் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானியும் ஒருவர்.
நியூயார்க்கில் மன்னரைச் சந்தித்த ஜோஹ்ரான் மம்தானி, ஆபரணத்தைத் திருப்பித் தருமாறு அவரை வலியுறுத்து கூறினார். திரு. மம்தானி நிகழ்ச்சிக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் அதிலிருந்து தனியாக மன்னரிடம் பேச நேர்ந்தால், கோஹினூர் வைரத்தை உடனடியாக திருப்பித் தருமாறு அவரை அழைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கோஹினூர் வைர வரலாறு:
கோஹினூர் வைரம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட, சுமார் 105.6 கேரட் (21.6 கிராம்) எடையுள்ள, உலகின் மிகவும் புகழ்பெற்ற வைரமாகும். இது காகதீய வம்சம், முகலாயர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள் மற்றும் சீக்கிய ஆட்சியாளர்களிடம் கைமாறி, இறுதியில் 1849-ல் பிரித்தானியர் வசம் சென்றது. தற்போது இந்த வைரம் பிரித்தானிய அரச குடும்பத்தின் கிரீடத்தில் உள்ளது. வாரங்கல்லில் இருந்த காக்கத்தியர்களின் ஆட்சிக்காலத்தில் இது வெட்டி எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. 14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலாவுதீன் கில்ஜி போன்ற தில்லி சுல்தான்களிடம், பின்னர் முகலாயர்களிடம் சென்றது.
1739-ல் நாதிர் ஷா டெல்லியைக் கொள்ளையடித்த போது, இந்த வைரம் முகலாய மயிலாசனத்திலிருந்து பாரசீகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது ‘கோஹினூர்’ (பாரசீக மொழியில் “ஒளி மலை” – Mountain of Light) என்று பெயரிடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து, மகாராஜா ரஞ்சித் சிங் இந்த வைரத்தை இந்தியா கொண்டு வந்தார். பிரித்தானியர் வசம் இறுதியாக சென்றது. 1849-ல் பஞ்சாபை பிரித்தானியர் இணைத்த பிறகு, லாகூர் ஒப்பந்தத்தின் படி, பத்து வயது திலீப் சிங்கிடமிருந்து பிரித்தானிய விக்டோரியா ராணிக்கு இந்த வைரம் வழங்கப்பட்டது.
தற்போது இலண்டன் கோபுரத்தில் (Tower of London) பிரித்தானிய அரச குடும்பத்தின் கிரீடத்தின் ஒரு பகுதியாக இந்த வைரம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே உரிமை கோரப்படும் ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகவே இன்றும் இருந்து வருகிறது.
ஆந்திராவில் உருவாகிய கோஹினூர்

இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதி தான் கோஹினூரின் பிறப்பிடம். இந்த வைரமனாது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பாரசீகர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது. இந்த சண்டைகளுக்கு இடையில் இது சிறிது பாழாகிப் போனது என்று கூறப்படுகிறது.
அதேவேளை கோஹினூர் வைரத்தை வைத்திருக்கும் அரசர்கள் அவர்களது மகுடத்தையும் ஆட்சியையும் இழப்பார்கள் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை உள்ளது. அதே போல, வரலாற்றில் கோஹினூர் வைரத்தை கைப்பற்றிய மன்னர்கள் எல்லாம், போர்களில் தோல்வியுற்று அல்லது வேறு காரணங்களால் தங்களது மகுடத்தை இழந்துள்ளனர்.
அத்துடன் கோஹினூர் வைரத்தின் சாபம் எனப்படும் மர்மம் ஆண்களை மட்டுமே பின் தொடர்வதாக கூறப்படுகிறது. அதனால் தான் கடைசியில், இந்த கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் பெண்கள் வசம் ஒப்படைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் தான், இப்பது விக்டோரியா, எலிசபெத் போன்ற ராணிகளின் கைமாறி வருகிறது கோஹினூர் வைரம். 1877ஆம் ஆண்டு இந்தியாவின் அரசியாக விக்டோரியா அறிவிக்கப்பட்ட போது, கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் அரசின் ஆபரணங்களின் ஓர் பகுதியாக மாறியது.
பிரித்தானிய வசமாகிய கோஹினூர்:
1849இல் பிரித்தானியர் பஞ்சாபை இணைத்த போது, 11 வயது சிறுவனான திலீப் சிங் பஞ்சாபை ஆண்டு வந்தான். எனினும் பஞ்சாபின் உண்மையான ஆட்சியாளராக ஜம்மு காசுமீரின் முதலாம் மகராசாவான குலாப் சிங் இருந்தார். அவர் பிரித்தானியரைச் சார்ந்தவராக இந்த ஆட்சியை நடத்தினார். குலாப் சிங் இந்த வைரத்தை முன்னர் வைத்திருந்தார். 11 வயது சிறுவனிடம் இருந்து இந்த வைரத்தைப் பெற்ற பிரித்தானியர் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியாவிடம் இந்த வைரத்தைக் கொடுத்தனர்.
உண்மையில் இந்த வைரமானது தரியாயினூர் போன்ற மற்ற முகலாயச் சகாப்த வைரங்களைப் போலவே வெட்டப்பட்டிருந்தது. தரியாயினூர் தற்போது ஈரானிய அரசாங்கத்திடம் உள்ளது. பிரித்தானியாவிடம் வசமாகி 1851ஆம் ஆண்டு இந்த வைரம் இலண்டன் பெருங் கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டது.
ஆனால் ஆர்வத்தைத் தூண்டாத வகையில் வெட்டப்பட்டிருந்த இதன் அமைப்புப் பார்வையாளர்களைக் கவரவில்லை. விக்டோரியாவின் கணவரான ஆல்பர்ட் இதை நீள்வட்ட வடிவில் வெட்டுமாறு காஸ்டர் வைரங்கள் என்ற நிறுவனத்திற்கு ஆணையிட்டார்.
நவீன தரங்களுடன் ஒப்பிடுகையில் வைரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் புள்ளியானது இந்த வைரத்தைப் பொறுத்தவரையில் வழக்கத்திற்கு மாறாக அகலமாக உள்ளது. இதனால் வைரத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் ஒரு கருப்பு ஓட்டை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இருந்தபோதிலும் வைரவியலாளர்களால் இந்த வைரமானது முழுவதும் உயிரோட்டம் உடையதாகக் கருதப்படுகிறது.
இந்த வைரத்துடன் தொடர்புடைய ஆண்களுக்கிடையில் ஏற்படும் அதிகப்படியான
சண்டைகளின் வரலாறு காரணமாக, இதை அணியும் எந்த ஆணுக்கும் துரதிர்ஷ்டம் வந்து சேரும் எனப் பிரித்தானிய அரச குடும்பத்தினரிடம் கருத்து உள்ளது.
சண்டைகளின் வரலாறு காரணமாக, இதை அணியும் எந்த ஆணுக்கும் துரதிர்ஷ்டம் வந்து சேரும் எனப் பிரித்தானிய அரச குடும்பத்தினரிடம் கருத்து உள்ளது.இதனால் ஐக்கிய இராச்சியத்திற்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து அரச குடும்பத்தின் பெண்கள் மட்டுமே இதை அணிந்து வந்துள்ளனர்.
விக்டோரியா ராணி இந்த வைரத்தைத் தனது ஆடையில் நெய்தும், மகுடத்தில் வைத்தும் அணிந்து கொண்டார். 1901ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு இது பிரித்தானிய ராணி அலெக்சாந்திராவிடம் கொடுக்கப்பட்டது. 1911ஆம் ஆண்டு இந்த வைரம் பிரித்தானிய ராணி மேரியிடம் கொடுக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு ராணி எலிசபெத்தின் மகுடம் சூட்டுவிழாவிற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டது.
உலகின் வைர இருப்பிடம்:
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் தங்கத்தைப்போல வைரத்திற்கும் மதிப்பு மிக அதிகம். இந்த வைரம் முதன் முதலில் இந்தியாவில் தான் கண்டெடுக்கப்பட்டது. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னும் இடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்ற இடத்தில் தான் வைரங்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரமானது கலிங்க நாட்டின் வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா ரோம் போன்ற அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாம்.
முதலில் வைரத்தை அப்படியே எடுத்து விற்று வந்தவர்கள் பிறகு அதை பட்டை தீட்டும் முறையை கற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தினார்கள்.
பிறகு பல நூற்றாண்டை கடந்து பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டி இருக்கிறார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக தென் ஆப்பிரிக்காவில் தான் வைரங்கள் அதிகளவு கிடைக்கிறது. அங்கிருக்கும் ஜாகர் பவுண்டன் வைரச் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை வைரம் தான் ப்ளூஜாகர். இது நீல ஒளியை பாய்ச்சக்கூடிய உயர் வகை வைரம். இந்த வகை வைரம் கிடைப்பது மிகவும் அரிது. ஏனெனில் ஜாகர் பவுண்டன் சுரங்கமானது தற்பொழுது உபயோகத்தில் இல்லை.எனினும், இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பன்னா என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தரமான வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. என்றாலும் ஆப்பிரிக்காவை ஒப்பிடும் பொழுது மிகவும் குறைந்த அளவே கிடைக்கிறது.
நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய கோஹினூர் வைர அரச ஆபரணத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு நியூயோர்க் நகர மேயர் இங்கிலாந்து மன்னரை தற்போது வலியுறுத்து உள்ளார். அமெரிக்காவிற்கான பயணத்தின் போது அரச தம்பதியினரை நியூயார்க்கில் சந்தித்த ஜோஹ்ரான் மம்தானி, ஆபரணத்தைத் திருப்பி இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் அவரது கோரிக்கையை உடனடியாக இங்கிலாந்து அரசு ஏற்கவில்லை. இதையடுத்து இங்கிலாந்து அரசிடம் அவர் தொடர்ந்து வலியுறுத்து வருகிறார்.
![]()