இறந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்த ‘வினோத’ கட்டுப்பாடு விதித்த கிராமம்
இறந்தவர்களின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மலரஞ்சலி செலுத்துவது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வரும் வழக்கம். கண்ணீருடன், மலர் மாலையையும் சேர்த்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது அந்த ஆத்மாவின் வானுலக பயணம் நல்ல முறையில் அமையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஒவ்வொருவரும் தங்களுடைய பொருளாதார வசதிக்கு ஏற்றாற்போல் ஆளுயர மாலை, ரோஜாப்பூ மாலை, துளசி மாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, நெல் மணி மாலை, வாசனை பொருட்கள் அடங்கிய மாலை என பல வகையான மாலைகளை இறந்தவர்களுக்கு அணிவித்து அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி என்ற கிராமத்தில் உள்ள சாந்தான் வெளி, அகரம் என்ற 2 குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களுக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக ஒரு வினோத முடிவை எடுத்துள்ளனர். அதன்படி கிராம மக்கள் சார்பில் ஒரே ஒரு மாலையை மட்டும் இறந்தவர்களுக்கு அணிவித்து இறுதி சடங்குகள் செய்வது என்றும், இறப்பு செய்தி அறிவிக்கும்போது மாலை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பது என்றும் தீர்மானித்துள்ளனர்.
இறந்தவர்களுக்கு அணிவிக்கப்படும் மாலைகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி இறுதி ஊர்வலத்தின்போது அந்த மாலைகளை பிய்த்து சாலை நெடுகிலும் வீசப்படுகிறது. இவ்வாறு வீசப்படும் மாலைகளில் சிக்கி இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். மலர் மாலைகளால் ஏற்பட்ட விபத்தில் பல்வேறு இடங்களில் சிலர் இறந்து விட்ட நிகழ்ச்சிகளும் நடந்துள்ளது.
மேலும் இறுதி ஊர்வலத்தின்போது இறந்தவரின் உடலில் அணிவிக்கப்படும் மாலைகளை எடுத்து வீசும்போது அது ரோட்டில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மீதும் விழுவதால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.
எனவே இதுபோன்று இறந்தவர்களுக்காக அணிவிக்கப்படும் மாலைகளால் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்காக, ‘ஒரே ஒரு மாலை போதும்’ என்ற அறிவிப்பை கிராம மக்கள் வெளியிட்டுள்ளனர். ஆயக்காரன்புலம் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பலருடைய பாராட்டுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாலைக்கு பதில் பணம் வசூல்
மாலை போட வருபவர்கள் மாலைக்கு பதில் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.200 வழங்கிடவும், அந்த தொகையில் இறுதி சடங்கு நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இறுதி சடங்கிற்கு லட்சக்கணக்கில் செலவு செய்வது தவிர்க்கப்பட்டு ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாத நிலை ஏற்படும் என கிராம மக்கள் கூறுகிறார்கள். மேலும் இறுதி சடங்கின்போது வசூல் செய்யப்படும் பணத்தை வசதி படைத்தோர் வேண்டாம் என்று கருதினால், அந்த பணத்தை ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து ஏழ்மையான குடும்பத்தில் நிகழும் இறப்புக்கு செலவு செய்யலாம் என்ற முடிவையும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எடுத்துள்ளது பல தரப்பினரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
![]()