முச்சந்தி

நீதிமன்றை இலக்கு வைப்பதை அரசு உடன் நிறுத்த வேண்டும்!; தான் கூறியதை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும்

நீதிமன்றத்தை இலக்கு வைத்து வெளியிடும் அறிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விடுத்த கூற்றை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளீட்ட எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேரின் கையெழுத்துகளுடன் இது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த மே தினக் கூட்டத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பொன்றின் பின்னர் கைதட்டி வரவேற்பதற்குத் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தமை எமது கவனத்திற்கு எட்டியுள்ளது.

இந்தக் கூற்றானது, சுதந்திரமான நீதித்துறைச் செயற்பாட்டின் மீது விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலாகும். இந்தக் கூற்றின் மூலம் நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் விருப்பத்திற்கு அடிபணியச் செய்வதற்கு எடுக்கும் முயற்சியாகவே நாம் இதனைக் கருதுகிறோம். நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு முன்கூட்டியே அறிந்துள்ளார் என்பதையே அவரது கூற்று உணர்த்துகின்றது. நீதி வழங்கப்படுவது வழங்கப்படுவது தெளிவாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் புலப்பட வேண்டும் என்பது எமது அரசியலமைப்பு முறையின் மாத்திரமன்றி, அடிப்படைத் தத்துவமாகும்.

நீதிமன்றம் அரசியலமைப்பிற்கே பொறுப்புக்கூற வேண்டுமே தவிர, நிறைவேற்று அதிகாரத்திற்கு அல்ல என்பதையும்,இலங்கையில் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடைப்பது மக்களிடமிருந்தும் அரசியலமைப்பிலிருந்தும் தானேயன்றி, எந்தவொரு ஜனாதிபதி, அமைச்சர் அல்லது அரசியல் கூட்டணியின் விருப்பத்தின் பேரில் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

எமது நாட்டில் இன்னும் பொதுமக்களின் கெளரவத்தைப் பெற்றுள்ள ஒரு சில நிறுவனங்களில் நீதிமன்றமும் ஒன்றாகும். இவ்வாறான கூற்றுகளிலிருந்து நீதிமன்றத்தைப் பாதுகாப்பதற்காக சனநாயகக் கட்டமைப்பிற்குள் எமது அதிகபட்ச அர்ப்பணிப்பை வழங்குவோம் என வலியுறுத்துகிறோம்.

அரசாங்கம் நீதிமன்றத்தை இலக்கு வைத்து வெளியிடும் அறிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஜனாதிபதி விடுத்த கூற்றை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாம் சுட்டிக்காட்டுகின்றோம் . ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை சொல்லிலும் செயலிலும் மதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button