முச்சந்தி

தமிழகத்திலுள்ள அகதிகள்,மீனவர் பிரச்சினைகளால் இலங்கைக்கு விஜய் கட்டாயம் வர வேண்டும்

இலங்கையையும் தமிழகத்தையும் பொறுத்தவரையில் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் மற்றும் மீனவர் பிரச்சினைகளே முக்கியமாகவுள்ள நிலையில் விஜய்யின் புதிய ஆட்சியில் கட்டாயம் அவர் இலங்கைக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கின்றோம். ஒரு புதிய உறவை ஆரம்பித்து, அதன்மூலம் இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புகின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலரும் எம்.பி.யுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மீ ட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜீவன் தொண்டமான் எம்.பி. மேலும் பேசுகையில்,

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். வழமையாக மக்கள் அரசியலையும், சினிமாவையும் வேறு வேறாகப் பார்க்கவில்லை. இவ்வளவு காலமும் விஜயை நடிகராக பார்த்த மக்கள் அவரை இப்போது தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். ரசிகர்கள் மனிதனை உயர்த்தலாம். ஆனால் மக்கள் வாக்கே தலைமைத்துவமாக மாற்ற முடியும். இவ்வாறு இன்று வரலாறு எழுதப்பட்டுள்ளது.

விஜய் தனது தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது இலங்கை தொடர்பில் பேசியுள்ளார். குறிப்பாக கச்சதீவு விடயம் தொடர்பில் பேசியுள்ளார். நான் அமைச்சராக இருந்த காலத்தில் அதிகமாக தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளேன். அதன்போது நான் பார்த்த முக்கியமான பிரச்சினை கச்சதீவு அல்ல. அங்கு முகாமில் வாழும் எமது தமிழ் சொந்தங்கள் தொடர்பான பிரச்சினையே முக்கியமானதாக இருந்தது. அதுமட்டுமன்றி மீனவர் பிரச்சினையும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.

ஆனால் தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்த வரையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இலங்கை வாழ் தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான முரண்பாடாகும். ஆனால் இதுவரையில் இதற்கு தீர்வு காணப்படவில்லை.

இந்நிலையில் விஜயின் புதிய ஆட்சியில் கட்டாயம் அவர் இலங்கைக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கின்றோம். ஒரு புதிய உறவை ஆரம்பித்து, அதன்மூலம் இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று நம்புகின்றோம்.

அதேபோன்று மலையக மக்களாகிய நாங்கள் 200 வருடங்களாக இங்கு வாழ்கின்றோம். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளோம். நாங்கள் இந்த நாட்டைவிட்டு வெளியில் வந்தால் எங்களையும் இலங்கைத் தமிழர்களாகவே மக்கள் பார்க்கின்றனர். இது தவறு கிடையாது. எங்களுக்கென தனிப்பட்ட அடையாளம் மற்றும் தனிப்பட்ட வரலாறு உள்ளது. இவ்வாறான நிலைமையில் மலையக மக்களுக்கான அங்கீகாரத்தையும் தமிழக அரசாங்கம் வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button