மலையக மக்களை தொடர்ந்தும் அடித்தால் திருப்பியடிப்போம்; மனோகணேசன் எச்சரிக்கை

மலையக மக்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுமாக இருந்தால் நாங்களும் திருப்பியடிப்போம் என எச்சரித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோகணேசன்,மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்காமல் வேறு பிரதேசங்களுக்கு காணி உரிமை வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக மக்களை இணைத்து போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த மனோகணேசன் எம்.பி. மேலும் பேசுகையில்,
இரத்தினபுரி நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது கடந்த மாதம் காட்டிமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . கஹவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தைச்சேர்ந்த பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் . இராணுவம், பொலிஸில் இருந்து தப்பிவந்தவர்களை இணைத்துக்கொண்டே இந்த பாதுகாப்பு பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது.
அங்கு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தோட்ட பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் தொடர்புகொண்டு கடுமையாக பேசினேன். அவர்களின் பாதுகாப்புபிரிவு தொடர்பிலும் கதைத்தேன். அவர் தங்களது பாதுகாப்பு பிரிவின் தேவைப்பாடு தொடர்பில் எனக்கு தெரிவித்தார். அது எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் அங்குள்ள தமிழ் தோட்ட மக்களையும் இலங்கை பிரஜைகளாக பார்க்க வேண்டும். அங்குள்ள பொலிஸாரும் தோட்ட மக்களை இலங்கை மக்களாக பார்க்க வேண்டும். இதுதொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் தெரிவித்திருந்தேன்.
நீலகாமம் தோட்டத்தில் தாக்கப்பட்ட எமது தொழிலாளர்கள், இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தாக்கியவர்கள், நான் முறையிட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற சம்பவம்தான் அண்மையில் மாத்தறையில் இடம்பெற்றது. அப்போதும் இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் கலந்துரையாடினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதனால் இனியும் இவ்வாறான சம்பவம் இடம்பெறுமாக இருந்தால் தற்காப்புக்காக, நாங்களும் திருப்பி அடிப்போம். அது வேறுவிமான பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால், இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு கடப்பாடு இருக்கிறது.
மேலும் நீலகாமம் தோட்ட இளைஞர்கள் நீலகாமம் பிரகடனம் என்ற ஒரு பிரகடனத்தை தயாரித்து என்னிடம் மகஜர் ஒன்றை கையளித்திருக்கின்றனர். அந்த மகஜரை சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். அதேநேரம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அரசாங்கத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறேன். அதாவது, இராணுவத்தில் இருந்து விலகிவந்தவர்களைக் கொண்டு தோட்டக்கம்பனிகள் குண்டர் படைகளை வைப்பது தடை செய்யப்பட வேண்டும், தோட்டப்புற மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள். அடிமைகள் அல்ல. அதனால் தோட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கடமைகளில் இலங்கை பொலிஸ் மாத்திரமே செயற்பட வேண்டும். வேறு குண்டர்கள் செயற்பட முடியாது.
டித்வா புயலால் வீடுகளை இழந்த, பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் தோட்டங்களில் தரிசு நிலங்களில் தற்காலிக குடியிருப்புகளை அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும். தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாக அரசாங்கத்தின் அட்டன் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இது மறந்திருந்தால், நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அரசாங்கம் ஏனைய பிரதேச மக்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்காமல் ஏனைய பிரதேச மக்களுக்கு காணி உரிமை வழங்க நடவடிக்கை எடுத்தால், நாங்கள் ஏனைய மக்களையும் அழைத்துக்கொண்டு நாட்டில் பெரும் போராட்டத்துக்கு செல்லவேண்டி ஏற்படும். அந்த நிலைக்கு எங்களர தள்ள வேண்டாம் என்றார்.
![]()