பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலுக்கு வாய்ப்பு ?

மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதற்கு தற்காலிக ஏற்பாடு ஒன்றை கொண்டு வருவது குறித்து ஆராய்வதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட செயற்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் அதன் தலைவர் விஜித ஹேரத் தலைமையில் கூடிய போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது
கடந்த குழுக் கூட்டத்தில் 2017 மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புக்கள்,மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கக் கூடிய சட்ட விதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் விஜித ஹேரத் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.இருப்பினும் நேற்றைய தினம் நடைபெற்ற குழு கூட்டத்தின் போது சட்டமா அதிபர் திணைக்களம் அந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
இது தொடர்பில் குழுவில் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் விசேட செயற்குழு உறுப்பினருமான இரா. சாணக்கியன் எம்.பி., மாகாணசபைத் தேர்தல் பற்றி ஆராயும் இந்த குழு இதுவரையில் மூன்று தடவை கூடியுள்ளது.எனினும் முன்னேற்றகரமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவோ , முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவோ உணர முடியவில்லை.
கடந்த குழுக் கூட்டத்தில் கோரப்பட்ட அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களம் சமர்ப்பிக்கவில்லை. மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கம் அசமந்த போக்கினையே கடைப்பிடிக்கிறது. ஆகவே இனி வரும் கூட்டங்களின் போது சட்டமா அதிபர் அல்லது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று முன்மொழிந்தார் .குழுவின் எதிரணி எம்.பி.க்களான மனோ கணேசன், நிசாம் காரியப்பர் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இதனை வழிமொழிந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த குழுவின் உறுப்பினர் நிசாம் காரியப்பர், மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறையில் நடத்துவது என்பதில் சட்ட சிக்கல் காணப்படுகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் எவ்விட நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.இது ஏற்றுக்கொள்ள கூடியதொரு செயற்பாடல்ல என்றார்.
மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் இம்முறையில் நடத்துவதற்கு தற்காலிக ஏற்பாடு ஒன்றை கொண்டு வருவது குறித்து ஆராய்வதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழுவை செயற்குழுவுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எல்லை நிர்ணய ஆணைக்குழு எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பான அறிக்கை ஒன்றை செயற்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது.
![]()