ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் ராஜராஜன்!…
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ராஜராஜ சோழன் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
தஞ்சையில் உலகமே வியக்கும் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர் மாமன்னர் ராஜராஜ சோழன். 1010-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோவில் இன்றளவும் ‘பெரிய கோவில்’ ஆக விளங்குகிறது. இதை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். திருவெண்காடு கோவிலில் உள்ள கல்வெட்டு இதை உறுதி செய்கிறது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திர நாளில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜராஜன் சோழ மன்னர்களிலேயே மக்களாட்சி முறையில் ஆட்சி செய்தவர்.
ஏரிகள் குளங்கள் கால்வாய்களை உருவாக்கி ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் பாசன கட்டமைப்புகளை உருவாக்கியவர். மழைநீர் சேகரிப்பையும் வலியுறுத்தியவர்.
இத்தனை சிறப்புகள் உள்ள ராஜராஜனின் பெயர் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான ஐப்பசி சதய விழாவின்போது மட்டுமே அடிபடும். பதவி பறிபோய் விடும் என்ற மூட நம்பிக்கையால் ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முதல்வர் அமைச்சர்கள் யாரும் செல்வதில்லை.
ஆனால் இந்த ஆண்டு கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் மணிரத்தினம் இயக்கத்தில் சினிமா படமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
‘ராஜராஜ சோழனை ஹிந்து மன்னராக அடையாளப்படுத்த முயற்சி நடக்கிறது’ என சினிமா இயக்குனர் வெற்றிமாறன் பேச அதற்கு கமல் ஆதரவு தெரிவிக்க பா.ஜ. தலைவர்கள் எதிர்க்க ராஜராஜன் குறித்து தமிழகத்தில் இரு மாதங்களாக பெரும் விவாதம் நடந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐப்பசி சதய விழா வழக்கத்தை விட முக்கியத்துவம் பெற்றுள்ளது. ‘அரசருக்கு அரசர் ராஜராஜன் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கவர்னர் ரவி வெளியிட்ட செய்தியில் ‘ராஜராஜன் ஆட்சியில் தமிழகம் ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றது’ என கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட செய்தியில் ‘தேவாரம் திருவாசகப் பதிகங்களை மீட்டெடுத்த சிவபாதசேகரன். பெருவுடையார் கோவில் கட்டிய பெருமகன். குடவோலை முறை கொண்டு வந்து ஜனநாயக பாடம் எடுத்த முதல்வன் ராஜராஜன்’ என புகழாரம் சூட்டியுள்ளார்.
சோழர் கால பாசன கட்டமைப்புகளை சீரமைக்க வலியுறுத்தி அக். 29 30 தேதிகளில் பா.ம.க. தலைவர் அன்புமணி அரியலூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.
தி.க.வினரும் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் போன்றவர்களும் ராஜராஜ சோழனை ‘ஜாதி வேறுபாடு காட்டியவர்’ என்றெல்லாம் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் இப்போது தி.மு.க.வினரும் ராஜராஜ சோழனை புகழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதனால்தான் அவரது பிறந்த நாளை அரசு விழாவாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்களும் போட்டு போட்டு ராஜராஜன் பிறந்த நாளில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தமிழக அரசியலில் முக்கியமான பேசு பொருளாகி இருக்கிறார் ராஜராஜன்.