திருப்பதியில் கடந்த மாதம் ரூ.124.06 கோடி உண்டியல் வசூல்
ஆந்திராவில் கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் திருப்பதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருந்தது. இரவு, பகல் பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்து 48 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் திணறினர்.
தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்ற போது அவர்களிடையே தள்ளும் முள்ளு ஏற்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். தற்போது பக்தர்களின் கூட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
திருப்பதியில் நேற்று 88,682 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37,447 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.09 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. கடந்த மாதம் அதிகபட்சமாக 4-ந் தேதி 90,165 பக்தர்களும், 12-ந் தேதி 93 ஆயிரம் பக்தர்களும், 19-ந் தேதி 84,982 பக்தர்களும், 20-ந் தேதி 90,471 பக்தர்களும், 25-ந் தேதி 94,412 பக்தர்களும் தரிசனம் செய்தனர்.
ரூ. 124.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. கடந்த மாதத்தை காட்டிலும் மே மாதம் 61,417 பக்தர்கள் குறைவாக தரிசனம் செய்திருந்தாலும் ரூ.130.29 கோடி உண்டியல் வசூல் ஆனது. ஜூன் மாதத்தில் ரூ.5.93 கோடி உண்டியல் வருவாய் குறைந்துள்ளது. மார்ச் மாதம் 128.61 கோடியும், ஏப்ரல் மாதம் ரூ.127 கோடியும் உண்டியல் காணிக்கையாக வசூலானது.