சங்கமம்

ஒரே ஓவரில் 35 ரன்கள்.. பிராட் ஓவரை பொளந்து கட்டிய பும்ரா – உலக சாதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசி உலக சாதனை படைத்தார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், இந்திய அணியை எளிதில் சுருட்டி விடலாம் என இங்கிலாந்து வீரர்கள் எண்ணினர். ஆனால், அவர்களுக்கு ரிஷப் மற்றும் ஜடேஜா சிம்ம சொப்பனமாக இருந்தனர். ரிஷப் தன்னுடைய அதிரடியாலும், ஜடேஜா தன்னுடைய பொறுப்பான நிதான ஆட்டத்தாலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சோதித்தனர். ரிஷப் 89 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 146 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜடேஜா நேற்று 83 ரன்களில் இருந்த நிலையில், இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சதத்தை பதிவு செய்தார். பின்னர் அடுத்தடுத்து ஜடேஜாவும், ஷமியும் ஆட்டமிழந்தனர். அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி விக்கெட்டை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று தப்பு கணக்கு போட்ட இங்கிலாந்து அணிக்கு மரண பயத்தை காட்டினார் இந்திய அணி கேப்டன் பும்ரா. ஒரே ஓவர் தான் இந்திய அணியின் ஸ்கோர் எங்கையோ சென்றுவிட்டது. என்ன வேகத்தில் இருந்தாரோ பிராட் ஓவரை பிரித்து மேய்ந்துவிட்டார் பும்ரா. ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர், நான்கு பவுண்டரிகளை விளாசி தள்ளினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்ததோடு மொத்தம் இந்த ஓவரில் மட்டும் அவர் 29 ரன்கள் குவித்தார்.

ஆனால், இதனை விட பரிதாபம் என்னவென்றால் பிராட் எஸ்ட்ரா மூலமாக மேலும் 6 ரன்களை வாரி வழங்கினார். ஒரு ஓயிடில் 5 ரன்களும், நோ பால் மூலம் ஒரு ரன்னும் இந்திய அணிக்கு கிடைத்தது. ஆக மொத்தம் தான் வீசிய 84வது ஓவரில் மட்டும் 35 ரன்கள் கொடுத்து மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் பிராட். இதற்கு முன்பு 2003ம் ஆண்டு ஆர் பீட்டர்சன் கொடுத்த 28 ரன்கள் தான் மோசமான சாதனையாக இருந்து வந்தது. ஏற்கனவே, டி20 கிரிக்கெட்டில் பிராட் ஓவரில் ஆறு பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி இருந்தர் யுவராஜ் சிங். அதுவும் ஒரு மோசமான சாதனை.

பந்து 1 : பவுண்டரி
பந்து 2 : ஒயிட் 5 ரன்கள்
பந்து 2 : நோ பால் + சிக்ஸர்
பந்து 2 : பவுண்டரி
பந்து 3 : பவுண்டரி
பந்து 4 : பவுண்டரி
பந்து 5 : சிக்ஸர்
பந்து 6 : 1 ரன்

இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா 16 பந்துகளில் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்சை விளாடி வருகிறது. இங்கிலாந்து அணி 16 ரன்னில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அலெக்ஸ் லீ விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.

உண்மையில் இன்றைய போட்டியில் தன்னுடைய 550வது விக்கெட்டை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டி இருந்தார் ஸ்டூவர்ட் பிராட். ஆனால், ஒரே ஓவரில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் அந்த மைல்கல் இன்று சோதனைக்குள்ளாகிவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.