சங்கமம்

நார்வே செஸ் ஓபன்: பிரக்ஞானந்தா சாம்பியன்!

நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார். நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடர் முழுவதும் அபாரமாக ஆடிவந்த பிரக்ஞானந்தா இன்று இந்தியாவின் பிரணீத்தை எதிர்கொண்டார். கருப்பு நிறக் காய்களில் அசத்திய பிரக்ஞானந்தா 49வது நகர்த்தலில் வெற்றிபெற்றார். இதன் மூலம் ஒட்டுமொத்த 9 சுற்றுகளில் 6 வெற்றி, 3 டிரா என்று தோல்வி காணாத பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.2.59 லட்சம் பரிசு கிடைத்தது, பிரணீத்தால் 7ம் இடத்தைதான் பிடிக்க முடிந்தது.

சாம்பியன் ஆனவுடன் பிரக்ஞானந்தா கூறுகையில் “இந்தத் தொடர் முழுவதும் என் ஆட்டத்தின் தரம் உயர்ந்ததாக இருந்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் திட்டமிட்டபடி என்னால் காய்களை நகர்த்த முடிந்தது. இது எனக்கு திருப்தி அளித்தது. மேலும் உலகின் மிக பெரிய வீரர்களான கார்ல்சன், லிரென் மற்றும் பிரபலமானவர்களுடன் மோதுவது நம்பிக்கையை அதிகரிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக ஆடுவதால் வெற்றி கிட்டுகிறது’’ என்றார்.
செஸ்ஸபிள் செஸ் தொடரின் போது தன் 11ம் வகுப்புத் தேர்வுகளுக்கும் தயார் படுத்திக் கொண்டும் போட்டிக்கு தயாராகவும் இரட்டை சுமை இருந்தது பிரக்ஞானந்தாவுக்கு.

ஆனால் இந்த இளம் ஜீனியஸுக்கு சவால் என்றால் கரும்பு சாப்பிடுவது போல்தான்.செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் செஸ் உலகின் மாஸ்டர்களுடன் மோதி வெற்றி பெற்று 2ம்  இடம்பிடித்தது பிரக்ஞானந்தாவின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. அந்த தொடரில் கடைசியில்  டிங்கிற்கு எதிராக மயிரிழையில் தோற்றார்.

Loading