இலக்கியச்சோலை

தேர்ந்த வாசகியாக வளர்ந்து, எழுத்தாளராக மிளிர்ந்திருக்கும் சகுந்தலா கணநாதன்!

கல்கியின் சிவகாமி – கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் முதல் வின்னி மண்டேலா – ஜூலியா கிளார்ட் வரையில் பேசும் வாசகி ! முருகபூபதி.

அம்மாவிடம் அன்பையும் அப்பாவிடம் அறிவையும் பெறலாம் என்பார்கள் எமது முன்னோர்கள்.

ஆனால்,  எமது சமூகத்தில் இது மாறியும் நிகழ்வதற்கு வாய்ப்பு அதிகம். அம்மா கண்டிப்பாக இருப்பார். அப்பா செல்லம் பொழிவார்.

எனது  வாசகர் முற்றம் தொடரில் இப்போது,  நான் அறிமுகப்படுத்தவிருப்பவருக்கு எமது அவுஸ்திரேலியத் தமிழர்களின் புகலிடச்சூழலில் அறிமுகம் அவசியமில்லை.  அவர்,  தமது அம்மாவிடமும் அப்பாவிடமும் வாசிப்பு அனுபவமும் உலக அனுபவமும் பெற்று வளர்ந்திருப்பவர்.

அவர் தேர்ந்த வாசகர். அத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும்

எழுதிவருபவர். வயதால் மூத்தவர்.  இனிய இயல்புகளுடன் எப்போதும் மந்திரப்புன்னகையை   வதனத்தில்  கொண்டிருப்பவர். அதனால் ஒரு அன்னையின் ஸ்தானத்தில் வைத்துப்போற்றப்படவேண்டியவர்.

அவர்தான் திருமதி சகுந்தலா கணநாதன் அவர்கள்.

“  அம்மா… உங்களுக்கு வாசிக்கும் பழக்கத்தினை தூண்டியவர் யார்..? “  எனக்கேட்டேன்.

அவர், தனது குழந்தைப்பராயத்து நினைவுகளை  பகிர்ந்துகொண்டார். அவருடைய தாயார், குழந்தைகள் எப்போதும் சிரித்து மகிழ்ந்திருக்கவேண்டும் எனக்கருதும் சராசரித் தாய்மாரிலிருந்து சற்று வேறுபட்டிருந்திருப்பது தெரியவருகிறது.

திருமதி சகுந்தலா கணநாதன் இப்படிச்சொல்கிறார்:

“ ஆரம்பத்தில் எமது  அம்மா எங்களுக்கு தேவாரங்கள், திருப்புகழ்,  கீர்த்தனைகள் என்று பலதையும்  சொல்லித்தந்தார்.   பிறகு     சிறுவருக்காக   வெளிவரும்    நகைச்சுவை கதைப் புத்தகங்களை வாங்கி வந்து   எங்களுக்காக குரல் எடுத்து  இரவில்  நாம் உறங்கச்செல்லும்போது வாசிப்பார். அவர் கதைசொல்லும் பாங்கினால் நாமும் அதில் ஒன்றித்துவிடுவோம்.   இவ்வாறு  Bed Time Stories  கேட்டு வளர்ந்தவள் நான்.   “குழந்தைப் பருவத்தில்  நாம்  சிரிச்சு களிக்க வேண்டும்,” என்று அம்மா அப்பாவிடம்  அடிக்கடி சொல்லுவார்.

இவையே  சிறு பராயத்தில் எனக்கு  புத்தகங்கள் வாசிக்கும்  ஆர்வத்தை    ஏற்படுத்தியது.  வாசிப்பது எனது  பொழுது போக்காகியது.  கருத்துச் சித்திரம், கேலிச் சித்திர புத்தகங்களை

நிறைய வாசிப்பேன். அம்புலி மாமா நான் வாசித்து ரசித்த முதல்  சஞ்சிகை. அதன் பின்னர்,  நிறைய ஆங்கில கார்ட்டூன் புத்தகங்களையும் வாசிக்கத்  தொடங்கினேன் .

ஆனால்,  அப்பா எங்களை American comic books வாசிப்பதைத் தவிர்க்கச்  சொல்லுவார்.  “Children, learn to read and write proper English, not American slang” என்றும்  எடுத்துரைப்பார்.  அப்படி கண்டிப்பாக இருந்தாரெனினும், கொழும்பில் நாம் வாழ்ந்த காலப்பகுதியில்  Savoy, Regal திரையரங்குகளுக்கு  எம்மை அழைத்துச்சென்று, Walt Disney Micky Mouse, Donald Duck  திரைப்படங்கள்  காண்பிப்பார்.

சிறிது  காலத்தில்,  அப்பா எங்கள் வயதுக்கு ஏற்ற தமிழ், ஆங்கில சாகசக் கதைகள்,  துப்பறியும் கதைகள், சுயசரிதை, கவிதை, மற்றும் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை வாங்கித்       தருவார்.

நாங்கள் வெள்ளவத்தையில் வாழ்ந்தபோது இரண்டு தெரு தள்ளி எங்கள் பெரியம்மா வீடு இருந்தது.  அவர்  தமிழ்நாட்டிலிருந்து வரும் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள்  இதழ்களை தவறாமல் வாங்குவார். அவற்றில்  நல்ல நாவலாசிரியர்களின் தொடர்கதைகள்  வெளிவந்தால், முதல் இரண்டு பக்கங்களை எனக்கு வாசித்துக்காணபிக்கும் பெரியம்மா, மேலும்  என்னையே தொடர்ந்து வாசிக்குமாறு தூண்டுவார்.  அதற்கப்புறம் அவற்றை  நானே எடுத்து வந்து, பாடசாலையில்   தரப்படும்  வீட்டு வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு வாசிக்கத் துவங்குவேன்.  “

இவ்வாறு சொல்லத் தொடங்கும் சகுந்தலா அம்மையாரையும்

அக்காலப்பகுதியில்   இதழ்களில் கதைகளுக்காக  வரையப்படும் ஓவியங்களே வாசிக்கும் ஆர்வத்திற்கு  பால்ய பருவத்தில் தூண்டுகோளாக திகழ்ந்துள்ளன.  அந்த ஆர்வம் குறித்து இவ்வாறு சொன்னார்:

“ ஒரு கதையை வாசிக்க என்னை தூண்டுவது அதில் வரும் ஓவியங்களே. அந்த வகையில் எனக்குப்  பிடித்த கதை ஓவியர் எஸ் கோபுலு. அவர் தில்லானா மோகனாம்பாள் தொடருக்கு வரைந்த ஓவியங்கள் இன்றும் என் மனக் கண்முன் தோன்றும். அவரது  ஓவியங்கள்  ஒவ்வொரு கதா பாத்திரத்தின் குணாதிசயங்களை தத்ரூபமாக எதிரொலிக்க, நான் அவற்றின் கதையோடு லயித்திருப்பேன். அடுத்த பகுதி எப்போ வரும் என்ற ஆவல்.

அதேமாதிரி கல்கியில் வெளிவந்த  சிவகாமியின் சபதம் ஓவியர் மணியமும்   அந்தக் காவியத்துக்கு மெருகூட்டினார்.

எனக்குப் பிடித்த தமிழ் நாவலாசிரியர்களில் சிலர் கல்கி,  கொத்தமங்கலம் சுப்பு, கீ வா ஜகந்நாதன், சுஜாதா, நா.  பார்த்தசாரதி.  நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் எனக்கு மிகப் பிடித்த தமிழ் நாவல். அந்த  நாவலை   எத்தனை முறை வாசித்தாலும் சலிக்காது.

பள்ளி விடுமுறைக்கு நாங்கள் கொழும்பிலிருந்து வெளியே கிளம்ப முன்னம், அடுத்த வீட்டாரிடம் எங்கள் நாய்க்குட்டியை கவனமாகப் பார்த்துக்கொள்ளச்சொல்லுவார் எமது  அம்மா. அத்தோடு, எங்கள் பெரியம்மாவிடம், ” கல்கி, ஆனந்த விகடனை பத்திரமாக வையுங்கோ. இது சகுந்தலாவின் அன்பான வேண்டுகோள்” என்றும்  சொல்லிச் சிரிப்பார்.

விடுமுறை நாட்களில் எங்கே சென்றாலும், அங்கே நாங்கள் கண்டு களித்ததை பற்றி சில சந்தர்ப்பங்களில் கடிதம் மூலம் அப்பாவுக்கு எழுதுவேன். இவற்றை வாசித்து ரசித்த அப்பா நாங்கள் திரும்பி வந்ததும். “ஒரு காலத்தில் பத்திரிகை செய்தியாளராக பணிபுரியத் தகுதியிருக்கு உனக்கு,” என்று சொல்லுவார்.  இப்படி அப்பா சொன்னபோதும், நான் கணக்கியலில் சேரவேண்டும் என்பதே  அவரது  குறிக்கோள் என்பதையும்  பின்னர்  எனக்கு அவர் உணர்த்தினார்.

அப்பா தான் எனது  வழிகாட்டி.

BA London இளங்கலை தேர்ச்சி பெற்ற கையோடு கணக்கியல் படிக்க,  நான் அய்யர் அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தில்  சேர்ந்தேன். அந்த நிறுவனத்தில்  கணக்காய்வு பணியை கவனித்தவாறு,   வரி சம்பந்தப்பட்ட விடயங்களிலும் எனக்கு ஆர்வம் ஏற்படது .பின்னாளில், ஒரு Chartered Accountants  நிறுவனத்தில் எனக்கு Tax Departmental வேலையை தந்தார்கள். அங்கே பணிபுரியும் போது எனக்கு  திருமணமும் நடந்தது. இதை அடுத்து Chartered Accountants Final Exam  சித்தியடைந்தேன் மூன்று குழந்தைகளை பெற்ற  எனக்கு லண்டனுக்கு செல்வதற்கு   வாய்ப்பளித்தனர். படிப்பு, அலுவலகம்  வேலை, பிள்ளைகள் பராமரிப்புடன், வாசிக்கும் பழக்கத்தை நான் கைவிடவில்லை. It is second nature to me. நான்  விரும்பி வாசித்த  ஆங்கில  புத்தகங்கள்  அம்பாரம். அவற்றில் சில, works of Charles Dickens, Ernest Hemingway, Joseph Conrad, Leo Tolstoy, Biographies of famous people including John. F. Kennedy, Abraham Lincoln, Gandhi, Nehru, Sir Raadhakrishnan, works of famous poets etc. அதுமட்டுமல்ல, தமிழ்  ஆங்கில  ஆன்மீக  படைப்புகளையும்  வாசிப்பேன். என் குழந்தைகளுக்கும் நல்ல கதைகளை வாசித்துக்காட்டுவேன்.  நாளடைவில் அவர்களே தங்களுக்கு விருப்பமான படைப்புகளை வாசிக்கத்  துவங்கினார்கள். 1983 இனக் கலவரத்தின் பின்னர்  குடும்பமாய் சென்னைக்கு நாங்கள் குடிபெயர்ந்தபோது, அம்மாவும்  அப்பாவும் எங்களுடன் சென்னைக்கு வந்தார்கள். அங்கு போன பிறகு எங்கள் சிந்தனைகள் மாறின.  பெண்ணோ ஆணோ –  அவர்களுக்கு   கல்வியே  முக்கியம் என்பதை எமது  பிள்ளைகளுக்கு உணர்த்தினோம். படிப்பே தற்காப்பு எவர்க்கும்.  படித்தவருக்கு எந்தக்  கஷ்டம் நேர்ந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தியை கடவுள் கொடுத்தருள்வார் என்ற நம்பிக்கை எழுந்தது. God Helps those who help themselves.   

சென்னையில்,  புது இடம், புது வாழ்க்கை முறை என்று பலதையும் எதிர்கொள்ள நேரிட்டபோது,  சில வருடங்கள் புத்தக வாசிப்பு குறைந்தாலும், The Hindu  தினசரி செய்தித்தாளில் வாசிப்பதற்கு  கட்டுரைகள், புத்தக, திரைப்பட மதிப்புரைகள்,  குறுக்கெழுத்து புதிர்கள் போன்ற  தரமான விடயங்கள் இருந்தன.

சென்னையில் வாசிக சாலைகள் குறைவு. ஆனாலும்  நிறைய புத்தகக் கடைகள்  இருந்தன. அதிலும்  அண்ணாசாலை ஹிக்கின்

பாதம்ஸ் பெயர்போனது.  இங்கும்,  வருடா வருடம் சென்னையிலே புத்தகக்  கண்காட்சி  நடக்கும்போது  அங்கேயும்   நிறைய தமிழ், ஆங்கிலப் புத்தகங்களை வாங்கி வாசிப்பேன்.
உரிய காலத்தில் எங்கள் பிள்ளைகள் படித்துப் பட்டம் பெற்று, மணம் முடித்து, வெளிநாடுகளில் குடிபெயர்ந்தனர்.  சகுந்தலா அவர்கள் தனது சிறிய வயதிலிருந்து வாசிப்பு அனுபவம் பெற்று வளர்ந்தவர். திருமணமாகி குழந்தைகளின் தாயாக பொறுப்புள்ள குடும்பத்தலைவியானதன் பின்னரும் வாசிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை.அவரது தேர்ந்த வாசிப்பு அனுபவம் எழுத்துத்துறையிலும் ஈடுபடவைத்துள்ளது.  “ அம்மா நீங்கள் எவ்வாறு எழுத்தாளராக மாறினீர்கள்…?   “ எனக்கேட்டதும்,  தான் முழுநேர எழுத்தாளர் இல்லை.  எப்படியோ ஒரு நாவலை – ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன் என்றார்.  அதன் முன்கதைச்சுருக்கத்தை அவரது வாக்குமூலத்திலிருந்தே கேட்போம்.

“ குடும்பப் பொறுப்பு ஓரளவு குறைந்த நிலையில், நானும் என் கணவரும்  ஒரு முறை பாரிஸ் நகருக்கு உல்லாசப் பயணம் சென்றோம்.  முதல் நாள் லூவர்  கலைக் களஞ்சியத்தை பார்த்து அசந்து போனோம் என்றால், அடுத்தநாள் வேர்சைல்ஸ் மாளிகை அதைவிட பன்மடங்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது எங்களுக்கு.

அதன் பிரமாண்டமான  அமைப்பைப் பற்றி அங்கு செல்ல முன்னர்  நான் அறிந்திருந்தும், அதை நேரில் கண்டு களிக்க வாய்ப்பு கிட்டியபோது, அம்மாளிகையின் வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சில கணங்கள மலைத்துப் போனேன்.

இரண்டாம்  உலக யுத்தத்தின்  போது அடல்ஃப்  ஹிட்லர்  கலைக் களஞ்சியமான பாரிஸ் நகரைக் கைப்பற்றித் தன் தலைநகராக்க விரும்பிய காரணம் அன்றுதான் எனக்குப் புரிந்தது.

அடுத்த சில மாதங்களில் நாங்கள் சென்னையிலிருந்து சிட்னிக்கு

பயணித்தோம். அப்போ எங்கள் மகள் கீதாஞ்சலி, “அடுத்த தெரு Community Central  இல்  Creative Writing Course நடத்துகிறார்கள். நீங்களும் அங்கே சென்று பயிற்சி பெறலாம், அம்மா,” என்றாள். நான் ஆர்வத்துடன் அங்கே போகத் துவங்கினேன்.

We were taught to distinguish Plot of a story from Theme, characterisation of Protagonist and Antagonist, weaving sub plots and difference between Show and Tell, when to introduce back story, climax, and final resolution. இவற்றை பல உதாரணங்களோடு விரிவுரையாளர் சொல்லித்தந்தார்.

அடுத்த வாரம் 300 சொற்களுடன் ஒரு சிறுகதையை அன்றே எழுதித் தரச் சொல்ல, உடனே நான் பிரெஞ்சு மகாராஜா பின்னணியில், The King is Dead, Long live the King என்ற தலைப்புடன் எழுதிக் கொடுத்தேன். அதனை வாசித்த விரிவுரையாளர் என்னைப் பாராட்டி, “உங்கள் எழுத்து நடைமுறை நன்றாயிருக்கிறது. நீங்கள் இதை விரிவாக்கி நல்லதோர் சரித்திர நாவலாக எழுதலாமே,” என்று என்னை ஊக்குவித்தார்.

அதன் பின்னர் நாங்கள் மெல்பன் நகருக்கு எங்கள் மூத்த மகள் வீட்டுக்கு வந்து, ஆறு  மாதம்   விசா  முடியமுன்னர்  சென்னைக்கு திரும்பினோம்.

சென்னையில் இந்த நாவலுக்கு தேவையான சரித்திர சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்ச்சி  செய்து,  அந்தக் காலத்து  அரச சம்பிரதாயங்கள்,  பிரெஞ்சு   ராஜ்ஜியம் அயல் நாடுகளுடன் தொடுத்த  போர்கள், கல்யாண சம்பந்தங்களில் ராஜ குடும்பம் கையாண்ட வியூகம், யுக்தி, குடிமக்களின்  வாழ்க்கை முறை என்று பலதையும் ஆராய்ந்தேன்.

அந்த மகாராஜாவின் அடுத்த சந்ததியினர் கொள்கை, அவர்கள் செய்த தவறுகள், அந்த நூற்றாண்டு முடியும் தறுவாயில்  பிரெஞ்சு குடிமக்கள் ராஜ்ய அட்டூழியத்துக்கு எதிராக  நடத்திய மாபெரும் புரட்சி என்று பலதை ஆராய்ந்தேன்.  முன்னர்  நான் படிக்கும்போது,  சாதாரண தரத்தில் எனது  ஆங்கில பாடத்துக்காக படித்திருந்த Tale of two Cities புத்தகத்தை மீண்டும் விரிவாக வாசித்தேன்.

கிட்டத்தட்ட ஐந்தாறு வருட  தீவிர முயற்சியின் பலனே  இந்த White Flowers of  Yesterday என்ற  நாவல் என்று சொன்னால் மிகையாகாது. இதனை எழுதி முடிப்பதற்கு  உறுதுணை யானவர்கள் எனது  கணவரும்  எங்கள் மூத்த மகள் லக்ஷ்மியும்தான்.   அவர்கள் சொன்ன விடயங்களையும் மீண்டும் ஆராய்ந்து பெற்ற தரவுகளையும் சேர்த்துக் கொண்டேன்.

அந்த நாவலை ஒருவாறு எழுதி முடித்து, Mark Chimsky என்ற பிரபல அமெரிக்க Editorial Consultant அவர்களிடம்  தொலைபேசியில் தொடர்புகொண்டு, என் கதையின் நகல் ஒன்றை அனுப்பினேன். அவர் அதை வாசித்து தன் அறிவுரைகளைச்   சொல்லி, “நீர் இதை I Universe என்ற பிரபல பிரசுராலயத்துக்கு அனுப்பினால், அவர்கள் அதற்காக  வேண்டியதை செய்வார்கள் ” என்றார்.

அவர் ஆலோசனைப்படி நானும்  அந்த நிறுவனத்தை அணுக,  அவர்களும் முழு நகலையும் வாசித்தபின்னர் புத்தக வடிவில் வெளியிட ஒப்புக்கொண்டனர். அவர்கள் அளித்த பின்வரும் பரிந்துரையோடு, 498 பக்கங்களுடன் எனது நாவல், White Flowers of Yesterday வெளிவந்தது.

Sakuntala Gananathan’s historical novel, “White Flowers of Yesterday” was awarded Editor’s Choice by her publishers, I Universe. An excerpt of their appraisal:

“The author has done a fantastic job of weaving setting, characterization, historical information, dialogue, and plot together to create a complete, unique and compelling story.”

An excerpt from Kirkus Review of the novel: “…a surfeit of grace and wit.”

பாஸ்டன் நகரில்   2009 ஆம்  ஆண்டு   இந்த நாவலின் வெளியீடு பல  வாசகர்  மத்தியில்  சிறப்பாக  நடந்தது.

2010 ஆம் ஆண்டு Chennai Book Club ஆதரவில்  சென்னை கன்னிமரா  ஹோட்டலிலும் சிறப்பாக நடந்தது.

2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு  குடி பெயர்ந்தோம்.

அடுத்த  வருடம்  எங்கள்  மூத்த  பேத்தியின்  பிறந்த  நாள் கொண்டாட்டம். அவ்வேளையில்   Jar 39 என்ற  சிறுகதையை   எழுதி  எங்கள்  பேரப்பிள்ளைகளையும்,  Alice in Wonderland கதையில் முக்கிய பங்கேற்ற  White Rabbit உடன், அலிபாபாவும்  நாற்பது  திருடர்கள் கதையையும் பின்னி புதிய கதை ஒன்றை எழுதி Smash words என்ற  இணையத்தளத்தில்  வெளியிடுவதற்கு  அனுப்பினேன்.  இதற்கு சிறுவர்களிடமிருந்து மட்டுமல்ல பெரியவர்களிடமிருந்தும் வரவேற்பும் பாராட்டும்  கிடைத்தது. அத்துடன்  Bovine Friends and Lavender என்ற எனது மற்றும் ஒரு  சிறுகதையையும்  அதே  இணையத்தளத்தில் பின்னர்  சேர்த்திருக்கிறேன்.

சிறுகதைப்போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கிட்டியது.

(  Sakuntala Gananathan’s story titled “Mend a Bend” was placed 3rd under Category C at the Monash Word Fest Short Story Competition held in 2013. )

சகுந்தலா கணநாதன் அம்மையார் எமது   அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கத்திலும் உறுப்பினராவார்.   சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும்  வருடாந்த  தமிழ் எழுத்தாளர் விழா,  மற்றும்  கவிதா மண்டலம்,    இங்கு வதியும் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு அரங்குகளிலும் பங்கேற்றுவருபவர்.  அத்துடன் விக்ரோரியா தமிழ் மூத்த பிரஜைகள் சங்கம், கேசி தமிழ் மன்றத்தின் மூத்த பிரஜைகள் அமைப்பு முதலானவற்றிலும் செயலூக்கமுடன் இயங்கிவருபவர்.

விக்ரோரியா மாநிலத்தில் Wheelers Hill   என்னும் பிரதேசத்தில் அவர்  வசிக்கின்றமையினால்,  கடந்த  சில  வருடங்களாக  இங்கிருக்கும்  Wheelers Hill Writers Club   என்ற அமைப்புடன் தொடர்புளை பேணி வருகின்றார்.  இந்த அமைப்பு வெளியிட்ட  மூன்று ஆங்கில சிறு கதைத் தொகுப்புகளில்  இவரது     View from the Hill,  Same Thing No Difference,  Free to Smell the Roses  ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

அண்மையில் இவர்   வாசித்து ரசித்த  புத்தகங்கள் பற்றிக்கேட்டபோது,    “  Becoming Michelle Obama,  அடுத்தது, மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல்   “  என்று சொன்னதுடன்  மனோஜ் குரூர் குறித்தும்   மேலும் சில தகவல்களை இவ்வாறு சொன்னார்:

“  மனோஜ் குரூர் பிரபல மலையாள எழுத்தாளர்.  இந்த நாவலை கே. வீ. ஜெயஸ்ரீ தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரும் ஒரு பிரபல எழுத்தாளர். ‘ முன் ஜென்மத்தின் பழக்கமான பாதையினூடே இயல்பாக நடந்து செல்லும் ஒருவனைப்போல,   சங்கப் பழமையின் பல பாவனைகள்  வழியே  மனோஜ்  குரூர் சஞ்சரிப்பதுகண்டு நான் ஆச்சரியப்பட்டேன்,’ என்கிறார் ஜெயமோகன்.

இதனை ‘மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்‘ என்கிறார் நாஞ்சில் நாடன் தமது  முன்னுரையில்.  ‘வழக்கமாக, மொழி மாற்றம் பெற்று வரும் இலக்கிய வடிவங்களை வாசிக்கும்போது தோன்றும் சலிப்பும் வரட்டுத் தன்மையும் கட்டுரைத்தனமும் தோன்றாவண்ணம் மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழி பெயர்ப்பாளர் கே. வீ. ஜெயஸ்ரீ,’ என்கிறார் இவர்.

சகுந்தலா கணநாதன் தனது வாசிப்பு அனுபவங்கள் குறித்து பேசும்போது,

“  தமிழோ ஆங்கிலமோ. சில நாவல்களை வாசித்த பின்னர் அதில் வரும் கதா பாத்திரங்கள்  ஏன் தங்கள் வாழ்க்கையை கோணலாய் அமைத்தார்கள் என்று என்னுள் பல கேள்விகள் எழும். கதாசிரியர் மன நிலை சரியில்லையோ என்று பல தர்க்கங்கள் என்னுள் ஏற்படும்.  “ என்றார்.

தமது கருத்துக்களிடையே குறிப்பாக சொன்னவிடயம்  கவனத்தையும் ஈர்த்தது. அவர் சொல்கிறார்:

“ நெல்சன் மண்டேலா  27 வருடகாலம்  சிறையில்  இருந்த போதும்,  அவரது மனைவி வின்னீ மண்டேலா அவரையே காதலித்து அவர் கொள்கை அணையாவண்ணம் அவரையும் ஊக்குவித்து, அவர் கூட்டணியையும் தளரவிடாமல் ஊக்குவித்தவர். நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, அவளை விவாகரத்து செய்தது மட்டுமன்றி, இன்னொரு  விதவையை மணமுடித்தார். இது எந்த  விதத்தில்  ஞாயம்…?  என்றும் அப்போது  எனக்குத் தோன்றியது!  அதற்கு அவ்வேளையில் வின்னீ மண்டேலாவுக்கு சாதகமாக எழுதி புத்தகம் வெளியிட்ட பெண் எழுத்தாளர்   ஒருவரின்   நேர்காணலை படித்தபின்னர் எனக்கு  அன்று தூக்கமே வரவில்லை.   “  என்றார்.

இவ்வாறு சொன்ன சகுந்தலா கணநாதன் அவர்கள், திடீரென அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜூலியா கிளாரட் பற்றியும் ஒரு கருத்தைச்  சொன்னார்.

“   அண்மையில்,  ஒரு தொலைக்காட்சியில் Q and A என்ற நிகழ்ச்சியில் முன்னாள் அவுஸ்திரேலியப் பிரதமர் Julia Gillard அவர்களின்  உரையாடலைக் கேட்டேன். அவர் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள், அவற்றைத் தவிர்க்க முடியாமல் தான் பட்ட மன உளைச்சல்கள், நாளடைவில் தான் அவற்றை எதிர்கொண்ட விதம்  பற்றியெல்லாம் , பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை  கேட்டு வியந்தேன்.  அவர் சொன்ன ஒரு கருத்து என்னை மிகவும் தாக்கியது.  பன்னிரண்டு வயது சிறுமி கேட்ட  ஒரு கேள்விக்கு  அவர் , “ஒரு பெண் பிரதமரை அவுஸ்திரேலியா ஏற்க நிறைய வருடங்களாகும்,” என்றார்.

“  உலகில் பெண்களின் நிலை இதுதான்  “  என்பது  இந்தப்பத்தியின் நாயகியின் ( வாசகியின் )  கணிப்பு!

இவ்வாறு தனது  பரந்துபட்ட வாசிப்பு அனுபவங்களினால் ஒரு கருத்தியலை உருவாக்கும் ஆற்றல் படைத்தவராகவும் திகழும் திருமதி சகுந்தலாவின் கணவர் கணநாதனும்  எழுத்தாளர்தான். இவர் தமது தமிழக வாழ்க்கை அனுபவங்களின் பின்புலத்தில் எழுதிய  சத்தியம் மீறியபோது நாவல்  இவ்வாண்டு  தொடக்கத்தில் வெளிவரவிருந்தது.  அதற்கான நாளும் குறிக்கப்பட்டிருந்த சூழலில் எதிர்பாராமல் சமூக இடைவெளியை பேணவேண்டிய தேவை ஏற்பட்டதையடுத்து இந்நிகழ்ச்சியும் பிற்போடப்பட்டது என்பதையும் இத்தருணம் தெரிவிக்கின்றோம்.

தேர்ந்த வாசகியாக வளர்ந்து எழுத்தாளராக மிளிர்ந்திருக்கும் சகுந்தலா கணநாதன் அம்மையாருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

—–0—-

letchumananm@gmail.com

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.