Featureஇலக்கியச்சோலை

வாசகர் முற்றம்!… அங்கம் 16 …. முருகபூபதி.

ஏறாவூரிலிருந்து ஜெர்மனிவரையில்…..

பயணத்தோடு வாசிப்பையும் தொடரும் இலக்கியவாதி

சந்திரகௌரி சிவபாலன் என்ற “ கௌசி “

முருகபூபதி.

“ எதை நாம் உள்வாங்குகின்றோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். எமது முயற்சியே எமது முன்னேற்றத்துக்கு வழி. புத்தகத்தோடு வாழ்பவர் ஒரு புத்தகமாக மாறுகின்றார். அதனாலேயே சிலரை நடமாடும் வாசிகசாலை என்போம். மூளைக்குள் பதிகின்ற செய்திகளைத் தவிர ஒன்றும் புதிதாக நாம் படைப்பதில்லை. பதிவதை திருத்தியும் மாற்றியும் விபரித்தும் வார்த்தை விளையாட்டுக்களைச் செய்வதும்தான் எழுத்தாளன் பணி என்று நான் கருதுகின்றேன். சட்டியில் இருந்தாலே அகப்பையில் வரும் என்பார்கள். சட்டி என்பது வேறொன்றும் அல்ல, எமது மூளைதான். சின்னத் துண்டுக் கடதாசி என்றாலும் கடலை சுற்றித் தந்த பத்திரிகைத் துண்டு என்றாலும் என் கைக்கு வந்தால், அது நான் இரசிக்கும் புதிய அகமே, புத்தகமே. அதற்குள் என்ன விடயம் இருக்கின்றது என்று தேடுவது என் தேடல். இதனாலேயே தேடலும் புரிதலும் தெரிதலும் யாவர்க்கும் நலமே என்னும் என் வாசகங்கள் தாங்கிய என் முகநூல் பக்கம் விரிகின்றது. “

இவ்வாறு சொல்கிறார் ஜேர்மனியில் வதியும் சந்திரகௌரி சிவபாலன். இவர் தனது பெயருக்குள்ளிருந்தே கௌசி என்ற புனைபெயரையும் உருவாக்கிக்கொண்டவர்.

இவரது ஆக்கங்களை ஆங்காங்கே படித்திருந்தாலும், இதுவரையில் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. சமகால மெய்நிகர் அரங்கில்தான் இவரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஞானம் இதழில் வெளியான அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுதிய எம்மதமும் என்ற சிறுகதைபற்றிய உரையாடல் வந்தபோது, அக்கதையின் நிலக்காட்சி, எமது நீர்கொழும்பு எவ்வாறு சித்திரிக்கப்பட்டது என்பதை சொன்னபோதுதான், சந்திரகௌரியும் எங்கள் ஊரில் ஆசிரியப்பணியை மேற்கொண்டிருந்தவர் என்ற தகவல் வெளிப்பட்டது.

அக்காலப்பகுதியில் நான் அவுஸ்திரேலியா வாசியாகிவிட்டிருந்தேன். எனது வாசகர் முற்றம் தொடரில் சந்திரகௌரி சிவபாலன் என்ற கௌசியை பேசுவதற்கு அழைத்தமையால் இந்தப்பதிவு எழுதப்படுகிறது.

கௌசிக்கு கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேனாடு மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏறாவூர்தான் பூர்விகம். இவரது தந்தையார் வேலுப்பிள்ளை. வாழைச்சேனையில் வருமானவரி உத்தியோகத்தராகப் பணி புரிந்தவர். அத்துடன் சிறந்த சமூகப்பணியாளராகவும் விளங்கியவர்.

கௌசி, வாசிப்பில் ஆர்வம் காண்பிப்பதற்கு ஏதோ ஒரு வழியில் தந்தையாரே ஊக்கமளித்திருக்கிறார்.

பொதுவாகவே தங்கள் பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும் காலத்தில், பாடப்புத்தகம் தவிர்ந்த ஏனைய கதைப்புத்தகங்களோ, பத்திரிகைகளோ படித்துவிடலாகாது, அவ்வாறு படித்தால், பள்ளிப்படிப்புக்கு இடையூறாகிவிடும் என்று எண்ணுகின்ற பெற்றோர்கள்தான் எமது தமிழ் சமூகத்தில் வாழ்கின்றனர்.

அதேசமயம் கண்டதும் கற்க பண்டிதனாவார் என்ற கணிப்பில், தமது பிள்ளைகள் எதனைப்படிக்கவேண்டும் என்று அடையாளம் காண்பிக்கின்ற பெற்றோர்களும் எம்மத்தியில் இருக்கின்றனர்.

அத்தகைய ஒருவர்தான் கௌசியின் அருமைத்தந்தையார் வேலுப்பிள்ளை.

அவர் பற்றிக்கேட்டபோது, கௌசி இவ்வாறு சொல்கிறார்:

எமது தந்தையார், தனது கடமை நேரத்திற்கு அப்பால், வீட்டிலே இருக்கும்போது உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு நேரகாலம் பார்க்காது உதவிசெய்பவர். அரச அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் தொடர்போடு எங்கள் ஊரில் ஆலயம் அமைத்தல், பாடசாலை அமைத்தல், வேலை கேட்டு வருபவர்களுக்கு உதவி புரிதல், புணானைக் குடியேற்றத்திற்கு வேண்டியவற்றைச் செய்தல் என்று மக்களுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கின்ற ஒருவர். அத்துடன் தீவிர வாசகர். தினமும் காலையில் நாளேடுகளை படித்துவிட்டே கடமைக்குச்செல்வார். எங்கள் வீட்டில் நாள்தோறும் காலையில் வரும் வீரகேசரி, தினகரன், மித்திரன் பத்திரிகைகள் என்னுடைய அப்பாவின் பார்வைக்குட்படாமல் வேறு கைகளுக்கு மாறாது.

நானும் அவற்றை வாசிப்பேன். குறிப்பாக வார வெளியீடுகள் வந்தவுடன் நான் ஓடிச் சென்று புரட்டுவது அவற்றின் இலக்கியப் பக்கங்களே. ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும் பத்திரிகைகள்

எனக்கு அமிர்தம். எனக்குப்பிடித்தமான இலக்கியப்பக்கங்களை அப்பாவின் அனுமதியுடன் வெட்டி எடுத்து வைத்துவிடுவேன்.

என்னையும் தன்னைப்போன்று வாசிப்பில் தீவிரமாக்கியவர் எனது அப்பாதான்.

கேள்வி: உங்களது தொடக்ககால வாசிப்பு ஆர்வம் எவ்வாறு இலக்கியத்தின்பால் திரும்பியது..?

கௌசி: ஏறாவூர் தமிழ்க்கலவன் பாடசாலையிலேயே ஆரம்பக்கல்வியைப் பயின்றேன். அருகே பத்திரகாளி அம்மன் கோயில் பார்வையிலேயே அந்தப் பாடசாலை இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. 7 ஆம் வகுப்பில் இருந்து மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் கல்லூரிக்கு மாறிச் சென்று அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகம் பிரவேசித்தேன். நான் வாசிப்பில் ஆழ்ந்து போகச் செய்தமைக்கான காரணம் அங்கு கற்றது தமிழில் சிறப்புக்கலைமாணி. அது புத்தகக் கட்டுக்குள் என்னைப் புதைந்து போகச் செய்த காலம்.

அதனால் நிறைய வாசிக்கவேண்டியிருந்தது. சுஜாதா, புதுமைப்பித்தன், ஜெயகாந்தனை எந்த அளவுக்கு எனக்குப்பிடிக்குமோ, அதேபோன்று ஈழத்து எழுத்தாளர்கள் எஸ். பொன்னுத்துரை உட்பட பலரது படைப்புகளும் என்னைக்கவர்ந்தன. கவிதை, கட்டுரை, நாவல், சிறுகதை என வாசிப்பின் பரப்புக்களை நான் விரித்த காலம் என்னுடைய பல்கலைக்கழக காலப்பகுதி என்றே சொல்ல வேண்டும். இன்னும் என் மனங்கவர்ந்த இலக்கியப் படைப்பாளியாக அகளங்கன் இருக்கின்றார். அவருடைய பல புத்தகங்கள் எனக்கு இலக்கிய இரை போட்டிருக்கின்றது. இன்றும் இரை மீட்டிக் கொண்டு இருக்கின்றேன்.

கேள்வி: பல்கலைக்கழகத்தில் உங்கள் ஆய்வு எத்துறை சார்ந்திருந்தது..?

கௌசி: ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சி என்ற பாடத்தின் மூலம் நாவல், சிறுகதைகளை என் மூளை உள்வாங்கியது. 20 ஆம் நூற்றாண்டு மட்டக்களப்பு தமிழ் இலக்கியமும் தற்கால வாழ்க்கை முறையும் என்பதே என்னுடைய ஆய்வுக்கட்டுரையாகும். அதற்காக அந்தப்பிரதேசத்தைச்சேர்ந்த படைப்பாளிகளின் எழுத்துக்களை கருத்தூண்றி வாசித்தேன். அதனால் தொடக்கத்தில் எங்கள் பிரதேசத்து எழுத்தாளர்களின் படைப்புக்களில் என்னை நான் வாழ வைத்துக்கொண்டேன். இதைவிட இலக்கியப் புத்தகங்களும் எனக்கு நெருக்கமாயின. தனிப்பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், நாயக்கர்கால இலக்கியங்கள், பல்லவர்கால இலக்கியங்கள், சங்ககால இலக்கியங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

கேள்வி: பல்கலைக்கழக வாழ்வின் பின்னர் உங்கள் வாசிப்பு அனுபவம் எவ்வாறிருந்தது?

கௌசி: பல்கலைக்கழக வாழ்வு முடிந்தபின் கற்றதை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத் தொழிலாகிய நாளும் கற்கும் மாணவியாகி, ஆசிரியத் தொழிலிலுக்குள் பிரவேசித்தேன். அதனை விரிவு படுத்த கல்வியியல் டிப்ளோமாவை நாவல நுகேகொட என்னும் இடத்தில் கற்று முடித்துப் பட்டங்களையும் பெற்றேன். ஆரம்ப ஆசிரியராக கறுவாக்கேணி தமிழ் கலவன் பாடசாலை எனக்கு கற்பித்தலையும் நிர்வாக முறைமையையும் கற்றுத் தந்தது. மாணவர்களின் அணைப்புத் தரும் சுகத்தை உணரவைத்தது. உலகத்திலேயே உயர்ந்த தொழில் ஆசிரியத் தொழில்தான் என்னும் உயரிய பண்பை நான் கற்றுக் கொண்டது அங்குதான்.

அடுத்து ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலயத்தில் சில மாதங்களே கற்பிக்கும் பாக்கியம் எனக்கு எட்டியது. காரணம் நாம் ஓடாவிட்டாலும் எம்மை ஓட வைப்பதற்குக் காலம் துணைவருமே. நீர்கொழும்பு வாசியாக நான் மாறினேன். நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். எனக்கு பல அனுபவங்களை கற்றுத்தந்த கல்லூரியாக அதனைக் கருதுகின்றேன். 1990 தொடங்கி 1994 வரை கற்பித்தேன். அக்காலப்பகுதியில் நீர்கொழும்பு பாடசாலையில் இணைந்து ஒருவருடத்திலேயே கம்பஹா கல்விவலயத்துக்கு ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றத் தெரிவு செய்யப்பட்டேன். எங்கே பணியாற்றினாலும் எனது வாசிப்பின் மீதான ஆர்வம் குறையவில்லை.

கேள்வி: உங்கள் தந்தையாருக்குப்பின்னர், உங்களுக்குள் வாசிப்பு ஆர்வத்தை தூண்டியவர்களும், தூண்டிய எழுத்துக்களும் பற்றிச்சொல்லுங்கள்.

கௌசி: என்னை வாசிக்கத் தூண்டியது முதலில் என்னுடைய மூளை, அடுத்து என்னுடைய பேராசிரியர்கள், என்னுடைய மாணவர்கள், இதுவிடயத்தில் வித்துவான் எப்.எக்ஸ்.சி நடராஜா அவர்களை நினைவுபடுத்துகின்றேன். வாசிப்பதில் உள்ள சுகத்தை என்னுடன் தமிழ் சிறப்புக்கலை பயின்ற சகநண்பன் சிவலிங்கன் இராஜேந்திரப்பிள்ளை உணர்த்தியுள்ளார். பக்கங்களைத் திறக்கின்ற போது அப்பக்கத்திலுள்ள ஒரு புதிய விடயத்தை உள்வாங்காமல் அடுத்த பக்கத்தை திருப்ப மாட்டேன். அதில் புதிய விடயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிலிருந்து ஒரு புதிய கருத்தை உள்வாங்கி விடுவேன். இதுவே என்னுடைய தேடல் விரிவுபடக் காரணமாகியது. என்னை என்னுடைய மாணவர்கள் தேடி நட்புக் கொள்வதற்கும் காரணமாகியது.

கேள்வி: உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றி சொல்லுங்கள்.

கௌசி: வர்ணனை எனக்குப் பிடிக்கும். ஆனால், அந்த வர்ணனை எனக்கு எதைப் போதிக்கின்றது என்பதையே என் மூளை தேடும். அதனாலேயே வைரமுத்துவினுடைய தண்ணீர் தேசம் நூலை பலமுறை வாசித்திருக்கின்றேன். சொற்கள் சுதந்திரமாக வந்து விழ வேண்டும். அங்கே சுவையான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்க வேண்டும். அங்கிருந்து அறிவுச் சுரங்கங்களை கடைந்தெடுக்க வேண்டும். இதுவே நான் விரும்பும் புத்தகங்களாக இருக்கும். என்னுடைய வாசிப்பில் அறிவியலும் இருக்கும், இலக்கியமும் இருக்கும், ஆன்மீகமும் இருக்கும், தொழில்நுட்பமும் இருக்கும். ஒரு புத்தகப் பூச்சியாக என்னுடைய அறிவுக்கண்கள் தேடுகின்ற போது இலக்கியம் எனக்கு இன்பத்தைத் தருகின்றது. இலக்கியப் புத்தகங்களை நான் வாசிக்கின்ற போது என்னை அறியாமலே சிரித்திருக்கின்றேன் ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கின்றேன்.

ஒருவர் வாசிக்காவிட்டாலும் அவர் வீட்டில் சிறிய வாசிகசாலையாது இருக்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை. மாந்தரின் அபார திறமை என்னவென்றால், பார்க்கும் விடயங்களை ஆராயப்புகும் சிந்தனையே. எனவே புத்தக அலுமாரி வாசிப்பைத் தூண்டும். என்னை வாசிக்கத் தூண்டியது எனது அம்மாவினுடைய வாசிப்புப் பழக்கமே. அந்த மரபணுவே எனக்குள்ளும் ஆட்சி செய்கின்றது. நான் படைப்பாளியாக மாறியபோது, எனது அப்பாவினுடைய சமூகப்பற்றே என்னுடைய எழுத்துக்களிலும் ஆட்சி செய்கின்றது என்றே கருதுகின்றேன்.

என்வீட்டு புத்தக அலுமாரி ஏறாவூரில் கருகிப் போன நிலையில் இடமாற்றத்தால் நீர்கொழும்பு வாழ்க்கை தமிழ் புத்தகங்களின் அருமை புரியத் தொடங்கிய காலப்பகுதியாக மாறியது. ஆசிரியத்தொழிலில் மாணவர்கள் என்னும் புத்தகங்களில் நாளும் பொழுதும் பல பாடங்களைக் கற்கத் தொடங்கினேன். அவை அத்தனையும் எழுத்துத் துறைக்கு என்னை மேம்படுத்தியது.

கேள்வி: தாயகம் விட்டு புலம்பெயர்ந்து தற்போது ஜெர்மனிவாசியாகியிருக்கிறீர்கள். புகலிடத்தில் உங்கள் எழுத்துப்பணியுடன் வாசிப்பு அனுபவம் எவ்வாறு தொடருகின்றது..?

கௌசி: 1994 இல் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து முழுநேரமும் எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ளேன். டிமென்சியா நோயாளிகளுக்கு பயிற்சியளிக்கும் தொழில் புரிந்தாலும் கண்கள் கருவைத் தேடிக்கொண்டே இருக்கும்.

அன்று புத்தகக் கட்டுகளைத் தேடி வாசிகசாலை எல்லாம் கால்கடுக்க நடந்த அனுபவத்தை, இன்று நினைத்துப் பார்க்கின்றேன். இன்று

என்னுடைய கைத்தொலைபேசியில் அளவிடமுடியாத புத்தகங்கள் அடங்கிக் கிடக்கின்றன. Tolino Ebook என்னுடைய கைப்பைக்குள் எப்போதும் இருக்கும். நூற்றுக்கணக்கான புத்தகங்கள் என்னோடு பயணம் செய்கின்றன. ஆனால், கையிலே புத்தகங்களை வைத்து அதன் முகத்தை ஒரு தடவை ஸ்பரித்து, அந்த மணத்தை ஒரு தடவை முகர்ந்து, பக்கங்களைத் தொட்டுத் தொட்டு மீட்டுகின்ற போது ஏற்படும் சுகமானது மடிக்கணினியிலோ, ரோலினோவிலோ, தொலைபேசியிலோ வராது என்பது முற்றுமுழுதான உண்மை.

இன்று முகநூலைத் திறந்தால் வாசிக்கப் பல விடயங்கள் காட்சி அளிக்கின்றன. அறிவு எங்கள் காலடியில் அடங்கிக் கிடக்கின்றது. அன்று தெரிவின் அடிப்படையில் தேவையானவற்றை வாசித்தோம். இன்று எமக்குத் தேவையானவற்றவையெல்லாம் எம்முன்னே வாசிக்கச் சொல்லிக் கைகட்டி நிற்கின்றன. மனஉறுதி கொண்டு சரியானவற்றைத் தெரிவு செய்து வாசிக்கின்றபோதுதான் வாசிப்பின் பலனை அனுபவிக்க முடியும்.

தொடர் வாசிப்பே என்னை மகிழ்ச்சியுடன் வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றன. அதனாலேயே தமிழ் வான் அவை என்னும் இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை மெய்நிகர் வழி மாதந்தோறும் நடத்தி இலக்கிய இன்பம் சுவைக்கின்றேன். இலக்கியமாலை என்னும் காணொளி வழியாக என் இலக்கிய இரசனைகளைப் பதிவிடுகின்றேன்.

கல்வி கரையில கற்பவர் நாள்சில

மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழிய

பாலுண் குருகின் தெளிந்து

என்னும் நாலடியாரில் கூறியதற்கேற்ப வாசிக்க வேண்டியது அவசியமாகும்.

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது உண்மையானாலும், ஒரு குறிக்கோள் நோக்கிய தேடலாக வாசிப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் நோக்கம் சரியான முறையிலும் சிறப்பான முறையிலும் அமையும். என் கட்டுரைகளுக்காக அறிவியல் கட்டுரைகளையும், தொழில்நுட்பக் கட்டுரைகளையும், இலக்கியக் கட்டுரைகளையும் இப்போது அதிகமாகத் தேடிக் கற்கின்றேன்.

வாசிக்கத் தூண்டும் காரணிகள் பல இருந்தும் வாசிப்பவர்கள் தொகை தமிழர்கள் மத்தியில் குறைவடைந்துள்ளது என்பதை உணருகின்றேன். வாசிக்காதவர்கள் எழுத்து சத்தில்லாத உணவுபோல அமையும் என்று

கருதுகின்றேன். ஒருவரி சொல்வதானாலும் ஓராயிரம் புத்தகங்கள் வாசித்த அனுபவம் உங்களுக்கு இருக்கின்றது என்பதை உங்கள் எழுத்துக் காட்டிக் கொடுத்துவிடும்.

பாடசாலைப் பருவம் முதல் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு, இலக்கியவாதியாக பரிமளித்திருக்கும் கௌசி, இதுவரையில் வரவாக்கியிருக்கும் நூல்கள்:

என்னையே நானறியேன் – நாவல்

முக்கோண முக்குளிப்பு – கட்டுரைத்தொகுப்பு

வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைத்

தொகுப்பு.

நான் பேசும் இலக்கியம் – கட்டுரைத் தொகுப்பு.

படிப்படியாக தேர்ந்த வாசகியாகி, தற்போது படைப்பிலக்கியவாதியாக வலம் வரும் கௌசி என்கிற சந்திரகௌரி சிவபாலனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Loading

8 Comments

  1. நண்பர்பூபதியின் அறிமுகத்தோடு கூடிய நேர்காணல் படித்தேன்.எப்படி உங்களுக்குத் தந்தையார் வழிகாட்டியோ அதுபோல் எனக்கும் தந்தையாரே வழிகாட்டி்.கண்டது கற்றால் பண்டிதனாவான் என்பதற்கு நீங்கள் தரவது நல்ல விளக்கம். ”கண்டதில் தேர்ந்து கற்பது” என்பது. இன்றைய காலத்துக்குப் பொருந்துவது. இன்றைய வலைத்தளப் பதிவுகளில் வேண்டாக் குப்பைகளே அதிகம் என்பதால். தங்களது தமிழ்ப்பணி தொடரட்டும். வாழ்த்துகள். ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.

  2. என்னைமீட்டிப் பார்க்க வைத்த எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்கு மிக்க நன்றி

  3. ஒரு நவீன படைப்பாளி எவ்வாறு உருவாகிறார் என்பதை விபரிக்கும் விரிவான பேட்டிக்கட்டுரை அருமை. கடலைச் சுருளிலும் கதையை தேடிய நாட்களை நானும் நினைத்துப் பார்க்கிறேன்.  ‘வாசித்தல் உன்னை பூரணமாக்கும்’ என்பது உண்மையே.
    சமகால எமுத்தாளர்களின் இவ்வகை பேட்டிகள் வரவேற்கத்தக்கவை.
    – கிறிஸ்டி நல்லரெத்தினம்

  4. சந்திரகௌரி சிவபாலலன் “கௌசி” என்பவருடனானசு நேர்காணல் சுவாரஸ்யமாகவும்,விறு,விறுப்பாகவுமிருந்தது.வாசித்தல் ஒருவரை பூரணமாக்குவது மட்டுமல்ல படைப்பாளியுமாக்கிறது என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.வாழ்த்துகள் மேலும் மேலும் வளர.

  5. நேர்காணல் மிகவும் சுவாரசியமாகவும்,விறு,வவிறுப்பாகவுமிருந்தது.எழுத்தாளர் கௌசி அவர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.