Featureஇலக்கியச்சோலை

எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் நினைவு தினம்!…. வ.ந.கிரிதரன்.

இன்று எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் நினைவு தினம். அவரை நினைவு கூர்வோம். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் எஸ்.பொ அவர்களுக்கு நிலையானதோரிடமுண்டு. அவரது இலக்கியப்பங்களிப்பு யாரும் அறிந்ததே. அதே சமயம் அவர் முக்கியமானதொரு பதிப்பாசிரியராகவும் இருந்திருக்கின்றார் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.
புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் முதலாவது சிறந்த சிறுகதைத்தொகுப்பு ‘பனியும் பனையும்’. அவரும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் தொகுத்த தொகுப்பு. உலகின் பல்வேறு நாடுகளிலும் புகலிடம் நாடிப்புகுந்த தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் சிறந்ததொரு தொகுப்பு. அதற்காகப் புலம்பெயர் தமிழ் இலக்கிய உலகு அவருக்கு எப்பொழுதும் நன்றியுடனிருக்கும். அதனை அவரது மித்ர பதிப்பகமே வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் எஸ்.பொ அவர்களின் இளையவர்களை ஆதரிக்கும் இந்தப்பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் நினைத்திருந்தால் தன் படைப்புகளை வெளியிடுவதுடன் நின்றிருக்கலாம்., ஆனால் பல்வேறு நாடுகளிலிருந்தும் படைப்புகளைச் சேகரித்து இவ்விதமொரு சிறந்த தொகுப்பை வெளியிட்டிருக்கத்தேவையில்லை. ஆனால் அவர் இவ்விதம் செயற்பட்டது புகலிடத்தில் இலக்கிய முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு ஒருவகையில் உத்வேகம் ஊட்டியதென்றே கூறலாம்.
எஸ்.பொ என்றதும் அவரது கனடா வருகை எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும். ‘தாயகம்’ மூலம் என்னை அறிந்து என்னுடன் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தார். அவரது கடிதங்களை இன்னும் பத்திரமாகப் பேணி வைத்துள்ளேன். தற்போது நிலவும் மின்னஞ்சல் யுகத்தில் அவ்விதமான கையெழுத்துகளுடன் கூடிய கடிதங்கள் பொக்கிசங்கள்.
கனடா வந்திருந்தபோது அவரை அவரது சகோதரர் இருப்பிடத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியது மறக்க முடியாததோர் அனுபவம். அப்போது தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை, இலக்கிய அனுபவங்களையெல்லாம் என்னுடன் மனந்திறந்து பகிர்ந்துகொண்டார்.
அக்காலகட்டத்தில் அவர் கனடாச் சிறுகதைத்தொகுப்பொன்றினைக் கொண்டு வருவதில் ஆர்வமாகவிருந்தார். எழுத்தாளர் அளவெட்டி சிறிஸ்கந்தராஜா, நான் உட்பட ஏனையக் கனடா எழுத்தாளர்கள் சிலருடனும் இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அது பற்றிக் கணையாழி சஞ்சிகையிலும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். ஆனால் ஏனோ சில காரணங்களினால் அத்தொகுப்பு வெளிவராமல் போனது துரதிருஷ்ட்டமானது.
என் சிறு வயதில் எஸ்.பொ அவர்களை ஊடகங்களினூடு அறிந்து வியந்திருக்கின்றேன். அவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைக்குமென்று எண்ணியிருந்ததில்லை. ஆனால் காலம் அதனைச் சாத்தியமாக்கி வைத்தது.
* ஓவியர் ஜீவாவின் எஸ்.பொ ஓவியத்தை இங்கு நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
May be an illustration of 1 person

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.