கவிதைகள்
எல்லாம் சரியே அமைதி காண் என்றான்!…. ( கவிதை ) ….சங்கர சுப்பிரமணியன்.
ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர்
ஆண்டவன் அமைதி கொடுப்பான் என்று ஆலயவாசலிலே ஒரு குழந்தை தாயின் இடுப்பில் இருந்த கைக்குழந்தை பசியின் கொடுமையால் அழுதது பார்க்க பரிதாபமாய் இருந்தது பால் வாங்க காசில்லை என்று பாவம்போல் கையேந்தி நின்றாள் தாய் பொய்யென்று சொல்லியும் பிச்சை எடுக்க புதுவழியென்றும் கூறிப்பலர் கோவிலுக்குள் சென்றனர் மெய்யோ பொய்யோ நானறியேன் அது எப்படியாவது இருக்கட்டும் ஆண்டவனை பாலில் குளிர்விக்க எடுத்துச்சென்ற பால் என் கையில் குழந்தை பசிக்கோ தாயிடம் பாலில்லை இப்பால் ஆண்டவனையும் குளிரூட்டும் அழும் குழந்தை வயிற்றையும் நிறைக்கும் எது நலமென ஒரு நொடி எண்ணினேன் மனமோ குழந்தையை எண்ணி தவித்தது யாரையும் எதுவுமே கேட்காமல் பாலை குழந்தையின் தாயிடம் கொடுத்தேன் கைகூப்பி வாங்கி வணங்கினாள் கண்முன்னே குழந்தைக்கு பாலூட்டினாள் பசித்த குழந்தையின் அழுகை நின்றது பசியாறியமுகம் பரவசத்தால் மலர்ந்தது எங்களை பார்த்து அக்குழந்தை சிரித்தது இதயத்தில் இனம்புரியா இன்பம் மலர்ந்தது மனதில் ஓர் அமைதியும் அந்நேரம் பிறந்தது ஆலயத்தின் உள்ளும் செல்லவில்லை ஆண்டவன்மேல் பாலையும் ஊற்றவில்லை அவன் உடலில் ஓடிய அப்பால் வழிந்து ஓடைவழியேயும் வெளியே ஓடவுமில்லை அவன் மேனியில் பால் ஓடக்கண்டால் எங்கள் மனம் என்ன ஆகியிருக்கும்? ஆண்டவன் முகத்தில் பரவசம் தெரிந்திருக்குமா? அவன் எங்களைப் பார்த்து சிரித்திருப்பானா? இதயத்தில் இனம்புரியாத இன்பமும் பிறந்திருக்குமா? இந்த அமைதியும் கிடைத்திருக்குமா? செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சொன்னார் ஆசான் வள்ளுவப் பெருமகனாரும் ஆண்டவனுக்கு இல்லாது போயினும் அழும் குழந்தைக்கு உதவட்டுமென எண்ணினேன் வாடிய பயிரை பார்த்ததும் வாடினேன் என்றார் இரக்கமுடன் வள்ளலாரும் என் இரக்கத்தில் ஏதும் தவறுண்டோ அக்குழந்தைக்கு இரங்கியதில் ஏதேனும் பிழையுண்டோ? என்னை ஆலயம் அழைத்துச் சென்றோர் அமைதியிலும் பொருளுண்டோ? என் உள்ளிருக்கும் இறைவன் இயம்பினான் எல்லாம் சரியே அமைதி காண் என்றான்! – சங்கர சுப்பிரமணியன்.