கவிதைகள்
கார்த்திகையில் தீபமேற்றி கடவுளருள் பெறுவோமே!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
கந்தனை நினைந்து போற்றுவோம் வாரீர்
வீட்டிலும் வெளியிலும் ஏற்றுவோம் வாரீர்
வேலவன் திருவடி பற்றுவோம் வாரீர்
அகமதில் உறைந்திடும் ஆணவ இருளை
அகற்றிடத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
சிவனது மைந்தனைச் சிந்தையில் இருத்தி
சிறப்புடன் தீபம் ஏற்றுவோம் வாரீர்
கார்த்திகைப் பெண்களால் ஏந்திய குழந்தை
கந்தனாய் வந்தனன் கலியுகம் காக்க
கந்தனைச் சொந்தமாய் கொண்டிடும் பக்தர்
கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
மாலயன் அடிமுடி தேடிய நிலையில்
மாபெரும் சோதியாய் வந்தனன் சிவனும்
பேரொளிப் பிளம்பு தோன்றிய நாளை
யாவரும் கார்த்திகைத் தீபமாய் கண்டனர்
அக்கினித் தலமாய் ஆகிய தலத்தில்
அகண்ட தீபம் ஏற்றுவார் அடியார்
கார்த்திகை நாளில் ஏற்றிடும் தீபம்
கந்தனைத் தந்தையை இணைத்திடும் தீபம்
சோதியாய் சுடராய் ஆகிடும் தெய்வம்
ஆதியாய் அந்தமாய் ஆகிடும் தெய்வம்
அப்பனாய் பிள்ளையாய் அமைந்திடும் தெய்வம்
அனைத்துமே கார்த்திகைத் தீபத்துள் அடங்கும்
காணுகின்ற பேரொளியே கடவுளாய் தெரிகிறது
கார்த்திகையில் தீபமதில் காணுகிறோம் கடவுளையே
கண்காணா தெய்வமதை ஒளியாக நம்புகிறோம்
கார்த்திகையில் தீபமேற்றி கடவுளருள் பெறுவோமே
கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண் … ஆஸ்திரேலியா
அரு மறைகள் போற்றும் திருமுருகன் பெயரை கார்த்திகை கிருத்திகைத் திருநாளில்
பதிவிட்டமைக்கு நன்றி வணக்கம்