தப்புடன் இனிப்பை உண்டால் தலையிடி வந்தே தீரும்!…. ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
சந்தோஷம் பறந்தே போகும்
சாப்பாட்டைக் கண்டு விட்டால்
சலனமே மனதில் தோன்றும்
எப்பவும் இனிப்பை எண்ணும்
எதையுமே உண்ணப் பார்க்கும்
அப்படி உண்டே விட்டால்
அதுதொல்லை ஆகி நிற்கும்
திருமண வீடு சென்றால்
தித்திப்பு நிறைந்தே நிற்கும்
வகைவகை உணவை அங்கே
வரிசையாய் கண்கள் காணும்
அவையெலாம் உண்ணும் ஆசை
அளவிலா மனத்தை ஆளும்
நினைவெலாம் உணவாய் நிற்கும்
நிம்மதி பறந்தே போகும்
கொண்டாட்டம் வந்து விட்டால்
குதூகலம் நிறைந்தே நிற்கும்
குலோப்ஜான் லட்டு எல்லாம்
குறைவின்றி இருக்கு மங்கே
நாக்கிலே நீரும் ஊறும்
நரம்பிலே முறுக்கும் ஏறும்
ஆர்க்குமே தெரியா வண்ணம்
அனைத்தையும் தின்னத் தோணும்
விரைந்தோடி நிற்கும் வெட்கம்
விரும்பிமனம் உண்ண நிற்கும்
வேண்டியதை உண்டு விட்டு
விழி பிதுங்கி நிற்போமே
இனிப்புகள் உள்ளே சென்று
இரத்தத்தில் கலந்து நின்று
முறைத்துமே எம்மைப் பார்க்க
முகமெலாம் கலங்கி நிற்போம்
மனைவியும் மகளும் சேர்ந்து
மங்களம் பாடித் தீர்ப்பார்
மளமள என்று சென்று
மருந்தினை விழுங்கி நிற்பேன்
விளம்பரம் ஒன்றைப் பார்த்து
விரைவுடன் படித்து நின்றேன்
விருப்பமாய் செய்தி அங்கே
விந்தையாய் இருந்த தங்கே
சர்க்கரை உள்ளோர் எல்லாம்
சங்கடம் கொள்ள வேண்டாம்
சரியான உணவு எல்லாம்
சந்தையில் இருக்கு இப்போ
செயற்கையாய் இனிப்புச் சேர்த்து
தின்பண்டம் இருக்கு இப்போ
வருத்தமே படவே வேண்டாம்
வந்துமே வாங்கித் தின்பீர்
அளவுடன் உண்ண வேண்டும்
அதைநிதம் பேண வேண்டும்
அனைவரும் மனதில் கொண்டால்
ஆனந்தம் வருமே நாளும்
தினமுமே நடந்து சென்றால்
தீராத நோயும் தீரும்
நடவுங்கள் எந்த நாளும்
நன்மைகள் உம்மைச் சேரும்
சர்க்கரை வியாதி கண்டு
சஞ்சலம் கொள்ள வேண்டாம்
சாப்பாடு எடுக்கும் போது
சமமாக எடுக்க வேணும்
உடற் பயிற்சி செய்திடுங்கள்
உணவு எலாம் மாற்றிடுங்கள்
மனத்தினிலே உறுதி கொண்டு
மாற்றிடுங்கள் பழக்கம் எலாம்
சோம்பல் நிலை மாற்றிடுங்கள்
சுறுசுறுப்பை ஏற்றிடுங்கள்
நாங்கள் வாழ வேண்டுமென்று
நாளும் எண்ணி நின்றிடுங்கள்
சர்க்கரை வியாதி தன்னை
சலிப்புடன் நோக்க வேண்டாம்
எப்பவும் உங்கள் வாழ்வில்
இனிப்புகள் தேவை அன்றோ
தப்புடன் இனிப்பை உண்டால்
தலையிடி வந்தே தீரும்
எப்பவும் அளவாய் உண்டால்
எவர்க்குமே விளவு நன்றே
மருந்தினை விருந்தாய் உண்போம்
விருந்தினை மருந்தாய் உண்போம்
வருந்திநாம் நிற்க வேண்டாம்
வாழ்வெலாம் இன்பம் காண்போம்
வெளிச்சத்தை கொண்டு வந்த
விளம்பரச் செய்தி தன்னால்
சர்க்கரை வியாதி பற்றி
சங்கடம் அகன்றே போச்சு!