கவிதைகள்

நிட்டூரம் வாராமல் நீகாப்பாய் முருகா!…. ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

அருமறை போற்றிடும் அரனார் மைந்தா
அரக்கரை அழித்தாய் அருளையும் கொடுத்தாய் 
முரணுடைய மனத்தை பொரிதிடும் குணத்தை
கறையுடை வாழ்வினைக் களைந்திடச் செய்தாய் !
 
உருகிடும் அடியார் உளமுறை முருகா
மருளவே நோய்கள் மாநிலம் பெருகுது
மடிகிறார் பலபேர் மயங்கிறார் தினமும் 
கருணையின் உருவே கடைக்கண் காட்டு  !
 
நரபலி எடுத்திடும் நாடகம் நடத்திறார்
நயமுடன் நடப்பதை நாளுமே மறக்கிறார் 
பக்தியின் பக்கமே வந்திட மறுக்கிறார் 
பரமனின் புதல்வா  பாடத்தைப் புகட்டு  !
 
வேலெடுத்து நீயும் வினையோட்டி நின்றாய் 
விளையாட்டுப் பாலகனாய் பழமுதிர்த்தும் நின்றாய்
ஒளைக்குத் தத்துவத்தை அருமையாய் உரைத்தாய்
ஆறுபடை வீட்டைத் தேர்ந்தெடுத்தாய் முருகா !
 
மாறுபடு சூரர்தமை வழிக்குவரச் செய்தாய்
மயில்சேவ லாக்கியே மாற்றுவழி கண்டாய் 
மாறுபடு மனமுடையோர் வாழுகிறார் நிறைந்து
மனம்மாற்ற மயிலுகந்து வந்திடுவாய் முருகா ! 
 
கஷ்டமது போயகல கந்தசஷ்டி பிடிக்கின்றோம்
கர்மவினை அகன்றோட காலடியை நாடுகிறோம்
நித்தமுமே உன்வாசல் நாடியே வருகின்றோம் 
நிட்டூரம் வாராமல் நீகாப்பாய்  முருகா ! 
 
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார் உலகில்
கூடாத கூட்டமதைக் கூட்டுகிறார் நிதமும்
கோணாத மனமதனை கொடுத்தவர்க்கு முருகா
வாணாளில் நல்வழியைக் காட்டிடுவாய் மால்மருகா !  
 
ஆராத காதலுடன் ஐயாவுனை வேண்டுகிறோம்
அனுதினமும் திருப்புகழைப் பாடியே பரவுகிறோம்
நேரான வழிசெல்ல நீயெமக்கு வழிசமைப்பாய்
தாரள குணமுடைய தமிழ்க்குமரா தயைபுரிவாய்  ! 
 
ஈராறு கரமுடையாய் எங்களது வேலவனே 
கூராக வரும்வினையை வேலாலே அழித்துவிடு 
தீராத காதலுடன் சஷ்டிதினம் நோற்கின்றோம் 
மூவிரண்டு முகமுடையாய் முழுவருளைத் தந்திடையா  !
 
குன்றிருக்கும் இடமெல்லாம் குமராநீ அமர்ந்திட்டாய் 
கொன்றொழிக்கும் குணமுடையார் கூட்டமாய் பெருகுகிறார் 
வன்முறையை அவர்மறக்க வழிகாட்டு திருக்குமரா 
உன்னடியே சரணமையா உமைபாலா உதவிடையா  !
 
வேதத்தின் சாறாக விளங்குகிறாய் வேலவனே
வித்தைகளின் வித்தாக மிளிர்கிறாய் வேல்முருகா
வாதத்தை மதமாக்கி மாயிருளில் மருளுகிறார் 
மனவிருளைப் போக்குதற்கு மாலமருகா அருளிடுவாய் 
 
தர்மமதை மனமெண்ணா தறிகெட்டு ஓடுகிறார்
அதர்மதை அகமிருத்தி அகந்தையுடன் திரிகின்றார்
ஆணவத்தை அகந்தையினை அகற்றிடுவாய் மால்மருகா
ஆன்மவழி அவர்நடக்க அருள்சுரப்பாய் வேல்முருகா 
 
தந்தைக்கு உபதேசித்து தகப்பன் சாமியானவனே
சிந்தைக்குள் உனையிருத்தி தினமுமே உருகுகிறோம்
வந்துன்னைச் சரணடைவார் வல்வினைகள் களைபவனே
செந்தமிழால் போற்றுகிறேன் திருக்குமரா அருள்சுரப்பாய்
நாளாகிக் கோளாகி நன்மையாய் உண்மையாய் 
வாணாளில் பேரொளியாய் வந்தமைந்தாய் மால்முருகா 
தேனாக இருப்பவனே தெவிட்டாத தெள்ளமுதே 
வானோரை மீட்டவனே மனுக்குலத்தைக் காத்திடப்பா 
 
செருக்குற்றார் செருக்கடகி சேவித்து அருளியவா
அருட்கடலை அவரடைய அருட்காட்சி புரிந்தவா 
தருக்கிடுவார் செருக்குடையார் தலகுனியார் பலருள்ளார் 
அவரகத்தில் நற்கருணை அமர்த்திவிடு அரன்மைந்தா 
 
விண்ணுலகும் மண்ணுலகும் வியாபித்து நிற்பவனே
விதந்தேத்தும் அடியாரின் மனமதிலே உறைபவனே
கண்ணுக்குள் மணியானாய்  கருவுக்குள் ஒளியானாய்  
பண்ணானாய் பாட்டானாய் பார்காப்பாய் வேல்முருகா  
 
பசித்திருந்து விழித்திருந்து பக்குவமாய் நோன்பிருப்பார்
பாரிருப்பார் பலரிருப்பார் பார்த்திடுவாய் வேல்முருகா 
பழித்திருப்பார் பறித்தெடுப்பார் பக்திதனை இகழ்ந்திடுவார் 
பார்பராவ வழிசமைப்பாய் பார்வதியின் பாலகனே!
 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
           மெல்பேண் … அவுஸ்திரேலியா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.