Featureகவிதைகள்

தித்திக்க தீபாவளி வரவெண்ணி வேண்டிடுவோம்!… ( கவிதை ) …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

இருளகன்று ஒளிபர இறைவனிடம் வேண்டிடுவோம்
இடரகன்று இனிமையவர இறைவனிடம் வேண்டிடுவோம்
புவிமலர்ந்து வாசம்வர புனிதனிடம் வேண்டிடுவோம்
புத்துணர்வு நிறைந்துவர நித்தமுமே வேண்டிடுவோம்
 
மத்தாப்பு பட்டாசு மனமதிலே வருகிறது
தித்திக்கும் பட்சணங்கள் தினமுமே தெரிகிறது
மொத்தமுள்ள உறவுகளில் முகமலர்ச்சி வருவதற்கு
தித்திக்க தீபாவளி வரவெண்ணி வேண்டிடுவோம்
 
முடங்கியே இருந்திட்டோம் முகம்பாரா இருந்திட்டோம்
பயணவழி அத்தனையும் பார்க்காமல் இருந்திட்டோம்
விருந்துண்ணல் தவிர்த்திட்டோம் விமானத்தை மறந்திட்டோம்
மனந்திரும்ப தீபாவளி மலர்ந்திடவே வேண்டிடுவோம் 
 
முகமூடி வாழ்க்கையினை முழுவுலகும் பார்த்ததுவே
அகம்முழுக்க ஆசைகளை அடக்கியே வைத்தோமே 
ஆரவாரம் அத்தனையும் அடங்கியே நின்றதுவே
ஆசைகளை மலரவிட அமைந்திடட்டும் தீபாவளி
 
அருகிருந்தும் ஆலயத்தை அணுகவே முடியவில்லை
ஆறுதலாய் வெளிசென்று அளவளாவ முடியவில்லை
கலைநிகழ்ச்சி களியாட்டம் காணாமல் ஓடியதே
களிப்புதனை கையேந்தி வந்திடட்டும் தீபாவளி 
 
கல்யாணம் எனுமெண்ணம் காணாமல் சென்றதுவே
கலகலக்கும் மேளதாளம் கையொடிந்து நின்றதுவே
வளைகாப்பு சீமந்தம் வதங்கியே நின்றதுவே
வருகின்ற தீபாவளி மங்கலத்தை வழங்கட்டும்
 
பழையபடி கடைத்தெருவில் பட்டுக்கள் வாங்கவேண்டும்
பலவகையில் பட்சணங்கள் வாங்கியே உண்ணவேண்டும்
பக்குவமாய் கையணத்து பலருமே மகிழவேண்டும்
பார்சிறக்க வைக்க   மலரட்டும் தீபாவளி.
   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
        மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
                  மெல்பேண் … அவுஸ்திரேலியா 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.